அடிப்படை வசதிகள் இல்லாச் சூழலில் வளர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஷ்மீர் பெண்!

1

காஷ்யப் நேஹா பண்டிதாவும் அவரது குடும்பத்தினரும் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் இருந்த அவர்களது கிராமத்தை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது காஷ்யப்பின் வயது ஐந்து. இவரது குடும்பம் சில காலம் அகதிகள் முகாமில் வசித்தனர். அதன் பிறகு மிஷ்ரிவாலாவில் இருக்கும் ஒரே அறையை கொண்ட ஒரு வசிப்பிடத்திற்கு மாறினர்.

நேஹா அடிப்படை வசதிகள் ஏதுமின்றியே வளர்ந்தார். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்கிற அவரது கனவிற்கு இது ஒரு தடையாக இருக்கவில்லை. இருபதாண்டுகளுக்கு பிறகு தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி முதலிடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவராவார். குழந்தைப்பருவத்தில் சந்தித்த போராட்டங்கள் குறித்து ’தி ட்ரிப்யூன்’க்கு தெரிவிக்கையில்,

என்னுடைய குழந்தைப் பருவம் முழுவதையும் முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றியே செலவிட்டேன். முதலில் கூடாரங்களில் வசித்தோம். பிறகு மிஷ்ரிவாலாவில் இருந்த ஒரே அறையைக் கொண்ட அழுக்கடைந்த ஒரு வசிப்பிடத்திற்கு மாறினோம். எங்களது சமூகத்தின் துயர நிலையை அருகில் இருந்து பார்த்ததால் குழந்தைப் பருவம் முதலே சிவில் சர்வீஸ் பணியில் இணையவேண்டும் என்கிற கனவு என்னுள் இருந்து வந்தது. 

இயற்கை வேளாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு 2013-ம் ஆண்டு மாநில சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தோல்வியுற்றார். எனினும் அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் சலுகைகளை சார்ந்தே வாழ்க்கையை நடத்தி வந்ததால் அவரால் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தேர்விற்கு தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அப்போதிருந்து அவர் சுய முயற்சியுடன் தேர்விற்கு தயாராக ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத கால பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்ததார். நேஹாவிற்கு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தனர். அவரது போராட்டங்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தனர்.

நேஹா தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதினார். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தது. தேர்வில் நான்காவது இடத்தில் தேர்ச்சி பெற்றார். தனது எதிர்காலம் குறித்து என்டிடிவி-க்கு அவர் தெரிவிக்கையில்,

”நான் ஜம்முவில் சேவையாற்ற விரும்புகிறேன். ஆனால் என்னுடைய சொந்த பகுதியில் சேவை செய்ய அனுப்பினால் நான் சற்றும் தயங்காமல் செல்வேன். அது தீவிரவாதம் நிறைந்த பகுதி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் நான் அங்கு சேவையாற்ற விரும்புகிறேன்.” 

கட்டுரை : THINK CHANGE INDIA