விலை மலிவான, திறன் மிகுந்த மாசில்லா அடுப்புகளை சென்னையில் தயாரிக்கும் ‘ப்ரக்தி டிசைன்’ நிறுவனம்!

0

இன்று இந்தியா, நேபால் மற்றும் ஹைதி நாடுகள், ப்ரக்தியால் தயாரிக்கப்பட்ட மாசற்ற எரிப்பொருள் திறன்கொண்ட சுத்தமான சமையல் அடுப்பால் 2,70,000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

மொரோக்கோவைச் சேர்ந்த மொசைன் செரார் பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் பிஎச்டி முடித்துள்ளார். அவர் படித்துக்கொண்டிருந்தபோது அனுபவம் பெறுவதற்காக மோட்டோரோலா, பிட்னி போவ்ஸ், இண்டெல், போயிங் போன்ற நிறுவனங்களில் சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியராகவும் ஆலோசகராகவும் பத்தாண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் எரிபொருள் திறன் மிகுந்த மாசின்றி சுத்தமாக எரியும் சமையல் அடுப்பை, வளர்ந்த நாடுகளுக்கு வடிவமைக்கும் ஒரு புதிய துறையை கண்டறிந்தார். 2004-ல் இந்த துறையில் நுழைந்தார்.

‘விறகினால் எரியும் அடுப்புகள்’ குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் Aprovecho என்கிற அமெரிக்காவின் ஆராய்ச்சி மையத்தில் அடுப்புகள் குறித்து ஆராய்ந்த பின்பும் மேற்கு ஆப்ரிக்காவில் Mouhsine-ல் ப்ராஜெக்டுகளில் பணிபுரிந்த பின்பும் ஷெல் ஃபவுண்டேஷன் நிதியுதவியுடன் அடுப்புகளின் தரத்தை முன்னேற்றுவதற்காக 2005-ல் இந்தியா வந்தடைந்தார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு ப்ரக்தி (Prakti) தொடங்கினார். இன்று இந்தியா, நேபால் மற்றும் ஹைதியில் ப்ரக்தியால் தயாரிக்கப்பட்ட எரிபொருள் திறன் மிகுந்த மாசின்றி சுத்தமாக எரியும் சமையல் அடுப்பால் 2,70,000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

தேவை

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு குறித்து பேசுகையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும். ‘இவை உண்மையில் அவசியமானதா? ’மக்கள் ஏன் எல்பிஜிக்கு மாறக்கூடாது?’ ‘எத்தனை பேர் அடுப்பைப் பயன்படுத்துகின்றனர்?’ 

நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளின் நிலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்பது புரியும். 2009-2010- ம் ஆண்டில் கூட கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களில் 76 சதவீதத்தினர் மண் அடுப்புகளையும் எரிபொருளாக பயோமாஸையும் பயன்படுத்தியுள்ளனர். உலகளவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சமையலுக்கு திட எரிபொருளை சார்ந்துள்ளனர். பயோமாஸ் அழுக்கு எரிபொருள் அல்ல என்றும் மண் அடுப்பை திறம்பட மாற்றவேண்டியதன் அவசியம் உள்ளது என்றும் தெளிவுபடுத்துகிறது ப்ரக்தி டிசைன். 

”நாங்கள் எரிபொருள் பயன்பாட்டை 70 சதவீதம் குறைக்கிறோம். உட்புற மாசை 90 சதவீதம் குறைக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிப்பதுடன் மக்கள் தங்கள் பணத்தையும் சேமிக்க முடியும்.” என்றார் மொசைன்.

எல்பிஜி பரவலாக பயன்பாட்டில் இருந்தாலும் அதன் விலைதான் பிரச்சனை. பயன்பாட்டைப் பொருத்தவரை டீ தயாரிக்க எல்பிஜி பயன்படுத்தப்பட்டாலும் சாதம், சப்பாத்தி, காய்கறி போன்றவற்றைத் தயாரிக்க பாரம்பரிய பயோமாஸ் அடுப்பையே மக்கள் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் எல்பிஜி விலையுயர்ந்ததாக உள்ளது.

விநியோகம், விற்பனை மற்றும் தயாரிப்பு

கட்டணமில்லாத ஆரோக்கியமற்ற மண் அடுப்புகளுக்கு எதிராகவே ப்ரக்தி டிசைன் போட்டியிடுகிறது. 

”சந்தையில் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எங்களது அடுப்பில் முதலீடு செய்வதால் புகையை குறைக்கலாம், மக்களின் ஆரோக்கியம் மேம்படும், தற்போதைய பயன்பாட்டிலிருந்து பாதியளவு விறகே தேவைப்படும், நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம் போன்ற விவரங்களை எங்களது குழுவினர் ஒவ்வொரு கிராமமாக சென்று டெமோ செய்து மக்களுக்கு விவரிக்கின்றனர்,”

என்றார் மொசைன். பெண்கள் குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கும் அளவிற்கு மிகவும் குறைவான விலையில் அடுப்புகளை வழங்குவதற்காக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்புகளான கிராமப்புற ஒருங்கிணைப்பு விநியோகஸ்தர்கள் (Rural network distributors) மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு முன்னுரிமை அளிக்கிறது ப்ரக்தி. 

மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகளில் 8 முதல் 10 விநியோகஸ்தர்கள் மற்றும் கிராமப்புற சில்லறை நெட்வொர்க்குகள் ஆகியவற்றுடன் இணைந்து மாதந்தோறும் இது வரை 18,000க்கும் மேற்பட்ட அடுப்புகளை விற்பனை செய்துள்ளது ப்ரக்தி. 

”மிகப்பெரிய சமையல் அடுப்பு ஆராய்ச்சியாக துவங்கப்பட்டு நெடுந்தூர பயணத்திற்குப் பின்பு தற்போது தாக்கம் சார்ந்த விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.

அளவு மற்றும் வசதிகளுக்கு ஏற்றாற்போல விலை மாறுபடும். வீட்டு உபயோகத்திற்கான அடுப்பின் தொடக்க விலை 1500 ரூபாய். அடுப்புகள் சென்னையில் தயாரிக்கப்படுகிறது. 

”மேம்பட்ட தயாரிப்பு கருவிகள் (சிஎன்சி, லேசர்) மற்றும் பாரம்பரிய தயாரிப்பு பொருட்கள் ஆகிய இரண்டும், பிற மூலப்பொருட்களும் சென்னையில் கிடைப்பதால் இங்கு தயாரிப்பது எங்களுக்கு நன்மை சேர்க்கிறது.” என்றார் மொசைன்.

கிராமப்புற ஆற்றல் மற்றும் எதிர்காலம்

கிராமப்புர சக்தி ஒரு பிரம்மாண்ட துறை. ப்ரக்தியின் பார்வையில், “நாங்கள் வடிவமைப்பு, புதுமை, தாக்கம் ஆகியவை ஒன்றிணைவதால் ஏற்படும் மதிப்பை நன்கறிவோம். கிராமப்புற ஆற்றல் துறை முக்கியம் வாய்ந்தது என்று நம்புகிறோம். தேவை அதிகமாகவே உள்ளது.

செயல்திறனையும் பயன்பாட்டையும் மேம்படுத்த தொடர்ந்து புதுமையை புகுத்தவேண்டியது அவசியம். அதே சமயம் விலையையும் குறைக்கவேண்டும்.” இந்தக் குழு பகிர்ந்துகொண்ட மேலும் இரண்டு தகவல்கள் எதிர்மறையாக தோன்றினாலும் மனதில் நிறுத்திக் கொள்வது பலனளிக்கும்.

மின் தூண்டல் ஹீட்டர்கள் (Electrical induction heaters) பரவலாக காணப்பட்டாலும் மின்சார வசதி கிடைப்பது மிகப்பெரிய தடையாக உள்ளது. நவீன சமையலை பின்பற்றுவதைக் காட்டிலும் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளதாக உலகவங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது பயோமாஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவில் க்ரீன்வே க்ராமீன், ஹிமாலயன் ராக்கெட் ஸ்டவ் போன்றோர் இதே பகுதியில் இயங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் ஒரு சுகாதாரமான சூழலை ஏற்படுத்துவதே இவர்களைப் போன்றோரின் முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 

”ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 20 சதவீத முன்னேற்றமும் 20 சதவீத விலை குறைப்பும் அடங்கிய ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தவேண்டும். நாங்கள், எங்கள் போர்டை சேர்ந்தவர்கள் மற்றும் படித்தவர்களாகிய நாமும் இதன் முக்கியத்துவத்தை அறிவது நமது முக்கிய கடமையாகும்.”

ஆங்கில கட்டுரையாளர் : ஜூபின் மேத்தா