இரண்டு குழந்தைகளின் தாயான 'பேஸ் ஜம்ப்பர்' அர்ச்சனா வானத்தை வசப்படுத்தும் ஆச்சர்யம்!

0
அர்ச்சனா
அர்ச்சனா

அர்ச்சனா சர்தனாவின் குழந்தைப் பருவம் ஸ்ரீநகரின் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் குறுகியிருந்தாலும், பின்னாளில் அவரது வெளிப்புற ஆதிக்கமும் சாகசங்களும் எல்லையற்றவை. 40 வயதில், இந்தியாவின் முதல் பெண் 'பேஸ் ஜம்ப்பர்' (BASE jumper)ஆக மட்டுமின்றி, இந்த சாகசத்தில் தனி ஒரு பெண் சாதனையாளராகவும் வலம் வருபவர். ஸ்கை டைவர், ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் மற்றும் மலையேற்ற வீராங்கனை என பல சாகச முகங்கள் இவருக்கு. இவரது கணவர் கடற்படை அதிகாரி (இந்திய கடற்படையின் எலெக்ட்ரிகல் ஆஃபிசர், கமாண்டர் ராஜீவ் சர்தனா). இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அர்ச்சனா, திருமணத்துக்குப் பிறகு வெளிப்புற விளையாட்டுகளில் சாகசங்கள் நிகழ்த்திய வகையில், ஓர் அரிய இந்தியப் பெண்மணி என்றால் அது மிகையில்லை.

அர்ச்சனாவுக்கு நடந்தது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். அன்புக் கணவர் ராஜீவ் தன் மனைவியின் ஆர்வம் அறிந்து, அவரை சாகச விளையாட்டுகளில் உயரே பறக்க உத்வேகம் அளித்தார்: "விசாகப்பட்டிணத்தில் 42 கிலோமீட்டர் தூரம் கடக்கக்கூடிய வாக்கத்தான் போட்டிதான் என் வாழ்வின் முதல் வெளிப்புற விளையாட்டுப் பயணம். இது ஒரு சிறிய அளவிலான போட்டிதான் என்றாலும் என் மனதில் மிகப் பெரிய விதையை ஊன்றியது. அந்த நேரத்தில்தான் என் கணவருடன் ஹிமாலயாஸில் சாகச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கற்கத் தொடங்கினேன்" என்று உற்சாகமாக சொல்லத் தொடங்குகிறார் அர்ச்சனா.

வெளிப்புற விளையாட்டுகளில் உள்ள கடினத்தை அர்ச்சனா ஆர்வத்துடன் எதிர்கொள்ள காரணம் இதுதான்: "கடினமானது என்று கருதினாலும்கூட, துணிச்சலாக அதை மேற்கொள்ளும்போது கிடைக்கக் கூட மறக்க முடியாத அனுபவத்துக்கு நிகர் வேறேதுமில்லை."

மலையேற்றமும், ட்ரெக்கிங்கும் வித்தியாசமானவைதான். ஆனால், அவை அனைத்தைக்காட்டிலும் வித்தியாசமானதும், சாசகங்கள் நிரம்பியதுமான விளையாட்டுதான் பேஸ் ஜம்ப்பிங். ஸ்கை டைவிங்கின் நீட்சியாகவே பேஸ் ஜம்ப்பிங் விளையாட்டு இருக்கும். ஆனால், குதித்தல் தளத்தின் இடைவெளி குறைவு என்பதால் இது வேறுவிதமானது. குதித்தல் நிகழ்வு என்பது பூமிக்கு மிக அருகே நிகழ்வதால், இதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. அறிவியல் ஆய்வுகளின்படி, உலகின் மிக ஆபத்தான விளையாட்டுகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது. பல நாடுகளில் இந்த விளையாட்டு சட்டத்துக்குப் புறம்பானது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. பேஸ் ஜம்ப்பிங்கில் ஈடுபடுவதற்கு முன்பாக, 2007-ல் ஸ்கை டைவிங் தொடங்கிய அர்ச்சனா, பிளேனில் இருந்து 200 ஜம்ப்களுக்கும் மேலாக குதித்து சாகசங்கள் நிகழ்த்தியிருக்கிறார். அதன்பின்னரே பேஸ் ஜம்ப்புக்குத் தாவினார்.

அர்ச்சனா சர்தனா
அர்ச்சனா சர்தனா

அர்ச்சனா, ஸ்கை டைவிங் மீது ஈடுபாடு கொண்டது ஒரு யதேச்சையான நிகழ்வு. விசாகப்பட்டிணத்தில் இருக்கும்போது கடற்படைத் தளத்தில் ஸ்கை டைவர்ஸ் குழுவை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மலையேற்றம் தவிர வேறு ஏதேனும் நல்ல சாகச விளையாட்டுகள் இருக்கின்றனவா என்பது பற்றி பேச்சுகள் எழுந்தன. அப்போதுதான், அந்த கடற்படை நண்பர்களால் ஸ்கை-டிரைவிங் அறிமுகம் கிடைத்தது. இதற்காக அமெரிக்கா சென்ற அர்ச்சனா, அங்கு பெர்ரிஸ் பள்ளத்தாக்கில் ஸ்கை டைவிங் கற்றுக்கொண்டார். ஸ்கை டிரைவிங் தொடர்பான பல பயிற்சி வகுப்புகளை முடித்த பிறகு, வெற்றிகரமான பல ஸ்டைல் டைவிங் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினார்.

ஸ்கை-டைவிங்கில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து கேட்டதற்கு, "அமெரிக்காவைப் பொறுத்தவரையில், ஸ்கை-டைவிங்கில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எல்லா விதமான விதிமுறைகளும் நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம்" என்றார். ஸ்கை டைவிங்கில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, சால்ட் லேக் சிட்டிக்குச் சென்று பேஸ் ஜம்ப்பிங் கற்றுக்கொண்டார் அர்ச்சனா. உயரம் குறைவு என்பதால், ஆரம்பத்தில் கடினமாகவும் பயமாகவுமே இருந்தது. ஆனால், போகப் போக பயத்தைப் பயமுறுத்தும் கலையில் தேர்ந்துவிட்டார் அர்ச்சனா.

சாசகங்கள் நிகழ்த்தும்போது அபாயங்களை முத்தமிடுதல் சாதாரணமே. அப்படி ஒருநாள், அரிஸோனாவில் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டபோது பாராசூட் வேலை செய்யவில்லை. பூமிக்கு அருகே நெருங்கியபோதுதான் பாராசூட் திறந்தது. எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்ச்சனா நினைத்திருக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை. ஆனாலும்கூட அந்த நிகழ்வால் அவரது உத்வேகம் குறையவில்லை. அடுத்த இரண்டு மூன்று நாட்களிலேயே மீண்டும் வானில் இருந்து குதிக்க ஆரம்பித்துவிட்டார் அர்ச்சனா.

இப்படித்தான் மலேசியாவின் இரட்டை கோபுரத்தில் மற்றொரு நிகழ்வு: "முதல் நாளில் குதித்தபோது எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. நம் உடலில் காயம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் கொண்ட விளையாட்டுதான் பேஸ் ஜம்ப்பிங். என்னால் நடக்க முடியாத சூழலிலும்கூட, இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குதித்தேன். ஏனென்றால், வெளிப்புற விளையாட்டுகளின்போது எதிர்மறை உணர்வுகளைச் சுமந்துகொண்டு நாடு திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்."

வானை வசப்படுத்திய பிறகு, தண்ணீருக்கடியில் உள்ள உலகை ஆட்கொள்ள தீர்மானித்தார் அர்ச்சனா. ஸ்கூபா டைவிங்கில் முதல் முதலாக ஈடுபட்டபோது, அவருக்கு தண்ணீர் என்றால் பயம் மட்டுமல்ல; நீச்சலடிக்கக் கூடத் தெரியாது. ஆனால், இன்று நம் நாட்டின் மிகச் சிறந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவர்.

தனது முதல் ஸ்கூபா அனுபவத்தை அர்ச்சனா பகிர்ந்துகொண்டபோது, "நான் தண்ணீரைக் கண்டு பயந்தேன். அப்போது, ஒரே ஒரு முறை செய்து பார் என்று என்னை என் கணவர் உந்தித் தள்ளியது நினைவுக்கு வருகிறது. மற்ற வெளிப்புற விளையாட்டுகள் போலவே ஸ்கூபா டைவிங் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு எனது கணவரே தூண்டுகோலாக இருந்தார். அவரது உத்வேக வார்த்தைகளைக் கேட்ட பிறகே, எனது 8 வயது, 10 வயதான இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து நீச்சலும், டைவிங்கும் கற்றுக்கொண்டேன்" என்று சிலிர்க்கிறார் அர்ச்சனா.

கடலுக்கடியில் எளிதாக மூச்சு விட்டு, முழுக்க முழுக்க தனித்தன்மை வாய்ந்த அழகுமிகு சூழலுக்கிடையே சாகசம் புரிவதை விவரிப்பவர், "உங்களுக்கு மேலே வர வேண்டுமா என்பதே தெரியாது. யாருடைய தலையீடும் கிடையாது. உங்களது தனிப்பட்ட சுதந்திர அனுபவம் அது" என்கிறார். பல வெளிப்புற விளையாட்டுகளிலும் பழகிய அர்ச்சனாவுக்கு, ஸ்கூபா டைவிங் தரும் அனுபவம் அலாதியானவை. ஒருவித தியான நிலையையும் ஆன்மாவைத் தீண்டும் இன்பத்தையும் தரக் கூடியவை: "ஸ்கூபா டைவிங்கில் ஈடுபடுவது என்பது உலக தன் வசப்படுத்துவதற்கு இணையான உணர்வைத் தரவல்லது. உங்களை எந்த பாதிப்புமே அண்ட முடியாத வல்லமை கிட்டும். அப்போது கிடைக்கின்ற அமைதி நிலையை, எந்த விதமான வெளிப்புற இடர்பாடுகளாலும் சீர்குலைக்கவே முடியாது."

சாகசங்களில் ஈடுபடுவதன் மூலம் வலிமையானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது அர்ச்சனாவின் நம்பிக்கை. உடலுக்கு மட்டுமல்ல; மன உறுதிக்கும் இவை உறுதுணைபுரிகின்றன. "தனிப்பட்ட நபராக உங்களை நீங்களே வெளிப்படுத்த துணைபுரிகிறது. இந்த அக உலகைக் காட்டிலும் பெரிதானது எதுவும் இல்லை. அதில், அமைதியும் வலிமையும் ஒரேநேரத்தில் கிடைப்பது சாத்தியம் ஆவதே தனிச்சிறப்புதான்." என்று அவர் சொல்கிறார்.

ஒரு பெண்ணின் விருப்பங்களை அறிந்து, அவரது இலக்குகளை அடைவதற்கு, குடும்பத்தினரின் உறுதுணை மிக மிக அவசியம் என்று வலியுறுத்துகிறார் அர்ச்சனா. வெளிப்புற செயல்பாடுகளில் பெண்களுக்கு இவர் சொல்லும் அறிவுரை இதுதான்: "இதைத்தான் செய்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதை எவராலும் தடுக்க முடியாது என்ற உறுதிப்பாட்டைக் கொள்ளுங்கள். எந்தத் தடை வந்தாலும் அது உங்களை நிறுத்தக் கூடாது. நீங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்? - இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருங்கள். மனப்பூர்வ ஆர்வத்துடனும் உறுதியுடனும் நீங்கள் எதைச் செய்தாலும், வெற்றி உங்கள் காலடியில் வட்டமிடும்."