வீட்டில் இருந்து சிறு தொழில் செய்து தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட 'Mompreneurs'

1

காலங்கள் மாற மக்களின் தேவைகளும் எண்ணங்களும் மாறுகிறது. எதோ ஒரு பட்டப்படிப்பு, அதன் பின் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலை என்கிற மனப்பான்மை மாறி சுயதொழில் செய்ய பலர் முன் வருகின்றனர். சிலர் கல்லூரியில் படிக்கும்பொழுதே தொழில்முனைவோர் ஆகுகின்றனர், சிலர் படிப்பை விட்டுவிட்டு தங்கள் கனவை நோக்கி செல்கின்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக இதில் பெரும்பாலானோர் ஆண்களே; விரல் விட்டு என்னும் அளவிற்குதான் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது.

தொழில்முனைவர் ஆக வேண்டும், தனி நிறுவனம் எடுத்து நடத்த வேண்டும் என கல்லூரியில் கனவுகளுடன் இருக்கும் பெண்கள் பலர், அதன் பின் அதை நடை முறை படுத்துவதில்லை. காரணம் கேட்டால் குடும்பச் சூழல், குழந்தைகள் என பெண்கள் பல காரணங்கள் கூற நாம் கேட்டு இருப்போம். ஆனால் இன்று அம்மாவாகவும் இருந்து தொழில்முனைவோர் ஆகவும் வளர்ந்து ‘mompreneur’ என தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பல பெண்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

பல சிறு தொழில்கள் இன்று பெண்களால் வீட்டில் இருந்தே இயக்கப்படுகிறது; இதன் மூலம் குடும்பத்தையும் அவர்களின் கனவையும் ஒரு சேர கவனிக்க முடிகிறது. அந்த வகையில் கல்யாணம், குடும்பம் என தங்கள் வட்டத்தை சுருக்காமல் மாம்ப்ரூனராக முன்னேறிக் கொண்டு இருக்கும் சில பெண்களிடம் பேசினோம்.

“ஒரு mompreneur ஆக இருப்பதனால் என்னால் என் குழந்தையுடன் நேரம் செலவழிக்க முடிகிறது. அதே சமயம் வயதான என் பெற்றோர்களுக்குத் தேவையானதை செய்யவும் என்னிடம் நேரம் உள்ளது. அதுமட்டுமின்றி என் கைச் செலவுக்கு ஏற்றவாறு மாதம் 15000-க்கு மேல் சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார் ராமதேவி சுனந்தா.

மழலையர் ஆசிரியராக இருந்த ராமதேவி, ’Ponder’ என்கிற குழந்தைகளுக்கான மையத்தை வீட்டில் இருந்தே நடத்துகிறார். மேலும் பெண்களுக்கான நகைகளையும் ஆன்லைனில் விற்று வருகிறார்.

அடுத்ததாக சமையல் youtube சேனல் நடத்தும் ஜானகி இடம் பேசினோம். பல இளைஞர்கள் youtube-ல் சம்பாதிப்பது போக இப்பொழுது தாய்மார்களும் தொழிநுட்பம் பக்கம் திரும்பியுள்ளனர். பல பெண்களுக்கு யூட்யூப் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தளம் என பேசத் தொடங்குகிறார் ஜானகி.

’Janaki's Cafeteria’ யூட்யூப் சேனலில் ஜானகி
’Janaki's Cafeteria’ யூட்யூப் சேனலில் ஜானகி
“என் மகன் ஆளாகும் வரை அவனுக்கு நான் உதவியாக இருந்தேன், அவன் வளர்ந்த பின் என் ஆசையை நிறைவேற்ற என்னை ஊக்குவித்தான். அதன் பின்னரே ’Janaki's Cafeteria’ எனும் youtube சேனலை துவங்கினேன்,” என்கிறார்.

சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் இளைஞர்களுக்கு சமையல் குறித்து உதவும் நோக்கத்துடனே பொழுதுபோக்கிற்காக இந்த சேனலை தொடங்கியுள்ளார் ஜானகி. நாளடைவில் அதன் வரவேற்பு பெருக தொழிலாக மாறிவிட்டது என்கிறார். குறைந்தது 10000 ரூபாய் மாத வருவாய் ஈட்டுகிறார் அவர்.

இவர்கள் தொழில் வளர்வதற்கு பல காரணங்கள் உண்டு. பெண்கள் சமூக அக்கறையுடன் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் பல தொழிலை தொடங்குகின்றனர். அதாவது படிப்பைத் தவிர அறிவு சார்ந்த பல புதிய மையங்களை குழந்தைகளுக்காக அமைக்கின்றனர். எதிர்காலத்தை நோக்கியே அவர்களின் பல தொழில் சிந்தனைகள் உள்ளது.

இதே போல் 21 மாத குழந்தையின் தாயான கங்கா சுதாகர்,  தான் ‘mompreneur’ ஆன கதையை நம்முடன் பகிர்கிறார். ’Cozy bee’ என்கிற பெயரில் கைக்குழந்தைகளை தூக்கிச் செல்லும் ’Baby Wearing’ மற்றும் கேரியர் விற்பனை செய்கிறார்.. அதைத் தாண்டி இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

“என் குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும்பொழுது இதை நான் தொடங்கினேன். Baby Wearing மூலம் எனக்கு ஏற்பட்ட நன்மைகளை மற்ற தாய்மார்களுக்கு அளிக்கவே இந்த முயற்சி. மேலும் பெற்றோர்கள் இதற்கு அதிக செலவு செய்யவும் தேவை இல்லை. இந்த சுய தொழில் மூலம் என்னால் முழுநேர தாயாகவும் இருக்க முடிகிறது. மேலும் ஒரு பெண்ணாய் என் கனவையும் மேற்கொள்ள முடிகிறது,” என்கிறார் கங்கா சுதாகர்.

கங்கா சுதாகர் நிறுவனர் Cozy bee
கங்கா சுதாகர் நிறுவனர் Cozy bee

குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு என சில பெண்கள் தங்கள் பயணத்தை தொடங்க ரிங்கி கோத்தாரி தனக்கு இஷ்டமான பேக்கிங்-ஐ கையில் எடுத்துள்ளார்.

“சுய தொழிலின் சிறந்த விஷயம் comfort. என் வீடு மற்றும் குழந்தைகளை முழு நேரம் பார்த்துக் கொண்டு எனக்கு பிடித்த வேலையையும் என்னால் செய்ய முடிகிறது. வேலைக்கு எந்த ஆடை போட வேண்டும் என்ற குழப்பம் கூட எனக்குக் கிடையாது,“
ரிங்கி கோத்தாரி
ரிங்கி கோத்தாரி

என சிரிக்கிறார் ரிங்கி கோத்தாரி, The Frost Goddess-ன் நிறுவுனர். பிறந்தநாள், கல்யாண நாள் என பல நிகழ்வுகளுக்கு கேக்கை பேக்கிங் செய்து வீட்டிலிருந்தே மாதம் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார் இவர்.

இது போல் பல பெண்கள் தன் குடும்பச் சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களுக்குப் பிடித்த வேலையை கையில் எடுத்துக் கொள்கின்றனர். நம்முடன் பேசிய பெரும்பாலான பெண்கள் என் குழந்தைகளுடன் முழு நேரம் செலவழிக்க வேண்டும், அதனாலே வீட்டில் இருந்து செய்யக் கூடிய சுய தொழிலில் ஆர்வம் காட்டுவதாக கூறினர். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் தங்கள் லட்சியங்களை கைவிடவில்லை இந்த தாய்மார்கள் அதே சமயம், தங்களுக்கான வருமானத்தையும் ஈட்டி வாழ்க்கையை அர்த்தத்துடன் கழிப்பதாக பெருமிதம் கொள்கின்றனர்.