பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பாதுகாப்பு சட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

1

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பாதுகாப்பு சட்டம் 2013, அமல்படுத்தப்பட்டதில் நிலவிவரும் நிலை குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அக்டோபர் 26ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் சில அமைச்சகம் மற்றும் துறைகளில் நிலுவையில் உள்ள பாலியல் வன்முறைகள் வழக்குகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், DoPT அதாவது பணியாளர்கள் பயிற்சித்துறை, சட்டத்திட்டத்தில் புதிய வழிமுறைகளை வெளியிடும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் பணிபுரியும் இடத்தில் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான (பாதுகாப்பு, தடுத்தல் மற்றும் தீர்வு) சட்டம், துறைகள் மற்றும் உள் புகார் குழுக்கள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள் :

(i) பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை பற்றிய சுருக்கமான தகவல்கள், அதன் கீழ் பெறப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கை, அதில் தீர்வு காணப்பட்டவையின் பட்டியல் குறித்து அமைச்சகம்/துறைகள் மற்றும் அதிகாரிகளின் ஆண்டு அறிக்கையில் இடம் பெறவேண்டும்.

(ii) வழக்கு விசாரணை 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் புகார் கொடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.   

(iii) அமைச்சகம்/துறைகள் தொடர்ந்து புகார்கள் மீது கவனம் செலுத்தி, புகார் அளித்தவர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத விதம் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி புகார் அளிக்கப்பட்ட பெண் பாதிக்கப்பட்டால், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் செயலாளர் அல்லது தலைவரிடம் அது குறித்து தெரிவிக்க அவருக்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரி 15 நாட்களுக்குள் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(iv) எல்லா அமைச்சகம்/துறைகள் இது குறித்து மாத அறிக்கையை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவேண்டும். அதன் மூலம் வழக்குகளின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும். 

DoPT அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை பாராட்டிய அமைச்சர் மேனகா காந்தி, அமைச்சகமும் இந்த பணிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கும் என்று உறுதி அளித்தார். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் அமைச்சகம் ஒரு விரிவான திட்டம் ஒன்றை அறிவிக்கப்போவதாகவும், மத்திய அரசு அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள உட்புற புகார் குழுக்களின் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.