'கிடைக்காத ஒன்றே நம்மை பில்லியனை நோக்கி அழைத்துச் செல்லும்'- நம்பிக்கை ஊட்டும் ஷ்ரத்தா ஷர்மா!

0

ஒரு பில்லியனை வசப்படுத்துவதற்கான உத்திதான் என்ன? நாம் எவற்றைச் செய்து இந்த இலக்கை அடைய முடியும்?

அங்கே குழுமியிருந்தவர்கள் ஆர்வத்துடன் சீட் நுனியில் இருந்தவாறு மேலும் அறிந்திட முற்பட்டார்கள். சில சலசலப்பும் விவாதங்களும் ஒருங்கே முடுக்கிவிடப்பட்டிருந்தது.

"நம்மைச் சுற்றி ஆசைகளும் கனவுகளும் நிறைந்த கண்களைக் காண்கிறோம். பில்லியன் டாலர் நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்பதாக சில கனவுகள் இருக்கும் வேளையில், ஓர் முதலீட்டாளர்களை ஈர்க்கவல்ல நம்பிக்கையுடன் சிலர் காத்திருக்கின்றனர். ஆனால், ஒவ்வொருவரின் ஆசைகளுமே வெற்றி பெறுவது ஒன்றே. இந்தக் கடுமையான உந்துதலுக்கிடையே நம்முடைய முயற்சிகளுக்கு நமக்கு நாமே தோள்தட்டித் தேற்றிட நாம் மறந்துவிடுகிறோமா?" - யுவர் ஸ்டோரி (YourStory.com) நிறுவனர் ஷ்ரத்தா சர்மா 'டெக்ஸ்பார்க்ஸ் 2015'-ன் நிறைவு நாளில் பார்வையாளர்களை நோக்கித் தெறித்த கேள்வி இது.

"ஒரு தொழில்முனைவராக நாம் ஒரு முக்கிய விஷயத்தைச் செய்வதாக நாம் கருதுகிறோம்; ஆனால், உண்மையில் நாம் அதைச் செய்வதில்லை. சற்றே ஆழமாகச் சென்று பார்க்கும்போது, நம்மை நாமே சூப்பர் ஸ்டார்களாக கருதிக்கொள்வது இல்லை என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு அருகே பக்கபலமாக சிலர் இருக்கும்பட்சத்தில், யாரை வேண்டுமானாலும் நேரடியாக சந்தித்துப் பேச்சு நடத்த முடியும். ஆனால், உங்கள் அருகே யாரும் இல்லாத நிலையில், ஒரு மிகப் பெரிய பார்வையாளர்கள் கூட்டத்துக்கு முன்பு தனி ஒருவராக நிற்பது மிகவும் கடினமான ஒன்று" எனக் குறிப்பிட்டார் ஷ்ரத்தா.

நம்மை நாமே நேசித்து, நமக்கு நாமே மதிப்பிட்டுக் கொண்டால் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ளவர்களை மதிப்பிட முடியும் என்பதை அவர் உணர்த்தினார். இதைதான் யுவர்ஸ்டோரி குழு செய்து காட்டியது. "எங்களை நாங்களே நேசித்தோம், எங்கள் மீது நம்பிக்கைக் கொண்டோம், அதுவே யுவர் ஸ்டோரி.காம் YourStory.com-ஐ மிகச் சிறப்பாக கட்டமைக்க உறுதுணைபுரிந்தது."

ஆனால், இது மட்டும்தான் வெற்றிக்கான பாதையா? என்ற கேள்விதான் ஒவ்வொருவர் மனதில் இருந்து வெளிப்படத் தயாராக இருந்தது. தொழில்முனைவர்கள் மட்டுமல்ல, மூத்த முதலீட்டாளர்களையும் இந்தக் கேள்வி தொற்றிக்கொண்டது தெளிவு. தன் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் மகத்துவத்தையும் அவர்களிடம் எடுத்துரைத்து ஊக்கமூட்டுவதன் மூலம்தான் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் வித்திட முடியும் என்பது ஷ்ரத்தாவின் நம்பிக்கை. ஒரு குழந்தையின் குதூகலத்துடன், யுவர்ஸ்டோரியை உருவான விதம் பற்றி உற்சாகத்துடன் பேசினார் ஷ்ரத்தா.

"நான் மிகவும் தாமதமாகவே ட்விட்டரில் இணைந்தேன். என் பதிவுகளை மகத்தான மனிதர்கள் ரீட்வீட் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. ஸ்பாமுக்கு இணையாக, அவர்கள் அனைவரையும் டேக் செய்து ட்வீட்டினேன். மக்கள் ரீட்வீட் செய்வதில் பெரிய அளவில் ஏன் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதும், ஒரு ரீட்வீட் மூலம் சக மனிதர்களிடையே பரஸ்பரம் பாராட்டும் மனோபாவம் இருப்பதில்லை என்பதும் எனக்குப் புரியவே இல்லை."

ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக இவர் தன் பாணியை நிறுத்திக்கொள்ளாமல் வழக்கம்போலவே செயல்பட்டார். "என்னைப் பொருத்தவரை நான் செய்வது காற்றில் கரையும் ஜாலமாகவும், அன்பைப் பரப்பும் அம்சமாகவுமே உணர்ந்தேன்" என்றவர், "அப்போது, எனக்கு மகத்தானவர்கள் எவரும் உதவவில்லை. ஆனால், மற்றவர்கள் உருவாக்கத்துக்கு உறுதுணைபுரிவது என்று முடிவு செய்தேன். இன்று, நாங்கள் காட்டிய அன்பால்தான் ஒவ்வோர் உறவும் மலர்ந்து உருவெடுத்துள்ளதற்கு முக்கியக் காரணம்" என்றார்.

"நம் மக்கள் கணிப்பதில் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், ஒரு நிறுவனம் மல்டி-பில்லியன் டாலர் நிலைக்கு உயருமா இல்லையா என்பதைச் சொல்வதற்கு நாம் யார்?. நீங்கள் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறீர்கள் என்றால், தன்னலமின்றி நல்ல வார்த்தைகளைப் பகிருங்கள்; அதுவே உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்" என்றார். அன்பையும் ஊக்கத்தையும் பரப்புவதால் நமக்கு நேர்மறை சக்திகள் கிட்டும் என்பதை அனுபவபூர்வமாகக் குறிப்பிட்ட ஷ்ரத்தா, "என்னைப் பாருங்கள்..! என் சருமம் மகிழ்ச்சியால் மின்னுகிறது. இது ஒப்பனை அல்ல என்பதை உறுதிபட கூறுகிறேன்" என்றார் உத்வேகம் பொங்க.

ஒரு கதை சொல்லியாக தனது நினைவலையை சற்றே பின்னோக்கிப் பயணித்த ஷ்ரத்தா, மும்பையில் பெருந்தலைகள் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில், தொழில்முனைவர்களின் கதைகளை எழுதப்போவதாகச் சொன்னார். அப்போது, ஒரு தொழில் வல்லுநர் கருத்து கூறும்போது, "எழுதுங்கள். ஆனால், அவையெல்லாம் ஏழு நாட்களுக்கு மேல் தாங்காது" என்றார். வீட்டுக்குத் திரும்பிய ஷ்ரத்தா கண்ணீர் விட்டார்; அப்பாவை தொலைபேசியில் அழைத்து, நடந்ததைச் சொன்னார்.

யுவர்ஸ்டோரி ஏழு நாட்களில் மூடப்படவில்லை. இப்போது 7-வது ஆண்டில் 10 மொழிகளில் தொழில்முனைவர்களின் கதைகளைச் சொல்லி வருகிறது. "நாங்கள் இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எழுதுவோம்... அதற்கும் மேலே!" என்று திட்டவட்டமாக தெரிவித்தார் ஷ்ரத்தா.

ஷ்ரத்தாவைப் பொறுத்தவரையில், நம்மிடம் இல்லாதவை, நமக்கு மறுக்கப்பட்டவை, நம்மிடம் 'திறமை போதவில்லை' என்று பிறரால் சொல்லப்பட்டவை எல்லாமே நம்மை இன்னும் மேம்படுத்தும்; அதுவே மென்மேலும் சாதிக்க வழிவகுத்து, ஒரு பில்லியனில் ஒன்றாக நம்மை உயர்த்தும்!

அங்கே குழுமியிருந்த இளம் தொழில்முனைவர்களை நோக்கி அவர் இப்படி உறுதிபூண்டார்:

"உங்கள் வெற்றியுடன் சீராக இருக்கும் எங்களது வெற்றி!"

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்