‘டாய்லெட் ஃபர்ஸ்ட்’ - கோவையை சுத்தமாக்கும் முனைவு!

கழிவறைகள் அமைப்பதற்கான, இந்தியாவின் முதல் கூட்டு நிதி முன்முனைவு இதுவாகத் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

0

ஓர் காலை ரயில் பயணம் போதும், இந்தியாவின் சுகாதாரத்தைப் பற்றிய தெளிவாய் புரிந்துக் கொள்ள! திறந்தவெளி மலம் கழித்தல் - பல இந்தியர்களின் அன்றாடப் பழக்கம். அது குறித்தான விழிப்புணர்வு மேலோட்டமாக உருவாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. எனினும், நம் அமைப்புகளின் காரணமாய், இதற்கு ஓர் நிரந்தர தீர்வை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. அது ஒரு நெடுங்கனவு என்பதையும் உணர்ந்திருந்தோம்.

நாம் எதிர்பார்த்திராத, பெரும் மாற்றமாய் முளைத்து, வியாபித்துக் கொண்டிருக்கிறது,   ‘டாய்லெட் ஃபர்ஸ்ட்’ 'Toilet First'. இன்னும் இரண்டு வருடங்களில் கோவையில் திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலும் ஒழிப்பதை நோக்கி வேகமாய் சென்று கொண்டிருக்கும் முயற்சியே ’டாய்லெட் ஃபர்ஸ்ட்’. கோவை மக்களுக்காக கழிவறைகள் கட்டமைத்துத் தரும் இம்முயற்சி, சமூக வலைதளங்களின் வழியே பரவலான வரவேற்பையும் பெற்றுக் கொண்டே வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் 2500 கழிவறைகள் கட்டப்பட்டிருக்கும் என்கிறார் கோவை ஆணையர்.

கோவை ஆணையர் விஜயகார்த்திகேயனின் முயற்சியால் துவக்கப்பட்டு, பல தன்னார்வலர்களால் வளமாய் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இம்முனைவு குறித்து, ‘டாய்லெட் ஃபர்ஸ்ட்’ குழுவின் உறுப்பினரான பத்மநாபன் கோபாலனோடு பேசினேன். இவர் ஏற்கனவே, NoFoodWaste மற்றும் Edudharma வழியாய் தமிழ் யுவர்ஸ்டோரி வாசகர்களுக்கு பரிச்சயமானவர். 

கோவை மாவட்ட ஆணையர் தான் தொழில் முனைவர்களை கொண்டு இதைச் செய்யலாம் எனத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, நிறைய தொழில் முனைவர்களை ஒன்றிணைத்தோம். அவர்களோடு கூட இளம் பட்டதாரிகள், சமூக தொழில் முனைவர்கள், பொறியாளர்கள் எல்லோரையும் இணைத்துக் கொண்டோம். ஏறத்தாழ எண்ணூறு மாணவர்கள் உதவ முன்வந்தனர். தற்போது பதினைத்து குழுக்கள் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கின்றன, என்கிறார் பத்மனாபன்.

டாட்லெட் ஃபர்ஸ்ட் செயலி, கழிவறை கட்ட இடம் ஒதுக்கி கொடுப்பது, பதினைந்து குழுக்கள் எங்கெங்கே இயங்குகின்றன என்பதை மேற்பார்வை செய்வது, ஒவ்வொரு கழிவறையும் என்ன நிலையில் இருக்கிறது, அரசு நிதிக்கான ஆவணங்கள் எல்லாம் தயார் செய்வது ஆகியவற்றில் என் பங்கு இருக்கிறது என்பதை விளக்குகிறது.

ஏற்கனவே, கூட்டு நிதி வழியாக 'Edudharma' என்னும் தளத்தை வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருப்பதனால், டாய்லெட் ஃபர்ஸ்டிற்கும் அதையே செய்ய வேண்டுமென்று இரண்டு நாட்களிலேயே இதற்கு ஒரு தளம் உருவாக்கினோம். ஆன்லைன் வழியே பல தன்னார்வலர்கள் பணம் பரிமாற்றம் செய்கிறார்கள். அல்லது, நேரடியாக ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் காசோலை கொடுக்கிறார்கள். பின், அரசு சார்பாய் ஒவ்வொரு கழிவறைக்கும் எட்டாயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது".

தொடங்கி இரண்டு மாதங்களிலேயே, இதுவரை 600 கழிவறைகள் அமைத்திருக்கிறது இக்குழு. இவ்வளவு வேகமாய் செயல்படுவதின் பின் இருக்கும் யுக்தியை பற்றிக் கேட்ட போது, 

“புதிதாக வரும் பொறியாளர்கள் முதலில் ‘டெமோ’ கழிவறை ஒன்றை கட்டுகிறார்கள். அதன் தரத்தை எல்லாம் சோதித்து முடித்த பின்னர், அவர்களுக்கு பத்து, பதினைந்து கழிவறைகள் ஒதுக்கப்படுகிறது. இளம் பட்டதாரிகளுக்கும், தொழில் முனைவர்களுக்கும் இதன் வழியே அனுபவமும், வெளிச்சமும் கிடைக்கிறது, திறனும் வளர்கிறது, என்கிறார் .

அரசு, நாடு முழுதும் 80 லட்சம் கழிவறைகள் கட்டுவதாய் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதில் இருக்கும் தலையாய பிரச்சினை என்னவென்றால், அதை யாரும் உபயோகிப்பதில்லை, அவற்றை கிடங்குகளாக மாற்றுகிறார்கள் என்பது தான். வழக்கமான ஒப்பந்த முறையாக இல்லாமல், பல மாணவர்கள் இதைச்சேர்ந்து செய்வதால், நமக்காகச் செய்கிறார்களே என மக்களும் ஈடுபாடு காட்டுகின்றனர்.

ஒரு கல்லூரி மாணவன் முன்வந்து இந்த கழிவறைப் பணிகளை ஈடுபாட்டுடன் செய்யும்போது உத்வேகம பார்வையாளர்களுக்கும் பிறக்கிறது. இதனால் கழிவறைகளின் பயன்பாடும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் அவர் கூறுகையில்,

வெளிப்படைத்தன்மை-(Transperancy) எங்கெல்லாம் கழிவறைகள் அமைக்கபடுகிறது, அதன் நிதி விவரங்கள் எல்லாம் இணையதளத்தில் இருக்கிறது.

தொழில்நுட்பம்- (Technology) அதிக செலவுகளை குறைக்க நாங்கள் தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறோம்.

கூட்டு வேலை (Team Work) - குழுவாக செயல்படுகிறோம்.

இந்த மூன்று 'T' - க்களின் விளைவுகள் வெற்றியாய் இருக்கும் என நம்புகிறோம்” என்கிறார் பத்மநாபன் கோபாலன்.  

நம் பாதையில் இருக்கும் சிறு சிறு தடைகளை அகற்ற, பிறரை மட்டுமே எதிர்பார்த்திருக்கக் கூடாது! படை திரட்டி, நம் பாதையை சுத்தம் செய்ய வேண்டும் - என்பதை மற்றும் ஒரு முறை மனிதம் வழியே கற்பிக்கும் முயற்சி இது. நேர்த்தியான சமூகத்தை உருவாக்க ஒன்று கூடியிருக்கும் குழுவோடும், அமைப்போடும் கரம் கோர்ப்போம்

தன்னார்வலர்கள் பணம் பரிமாற்றம் செய்ய வழியமைக்கும் ToiletFirst வலைப்பக்கம். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

காலத்தால் அழியா உதவி 'கல்வி உதவி'

நாம் தட்டிக்கழிப்பது மற்றவர் தட்டிற்கு: 'நோ ஃபூட் வேஸ்ட்' பத்மநாபன்