‘பரியேறும் பெருமாள்’ எனும் நம்பிக்கை...!

0

அழுத்தமான துணிச்சலும், பெரிய பங்கு மாயமும் தான் மாரி செல்வராஜின் படைப்பிற்கான அடையாளங்கள். ‘மறக்கவே நினைக்கிறேன்’ தொடரும், மாரி செல்வராஜ் எழுதிய கவிதைகளும், கதைகளும் இதைத் திரும்ப திரும்ப பொட்டில் அடித்து சொல்லிக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு படைப்பாளியிடம் இருந்து வரும் திரைப்படம் எல்லோரையும் உலுக்கி எடுக்காமல் இருந்தால் தான் அதிசயம்.

பிரமாதமாக எழுதுகிறவர்கள் சினிமா எடுக்கப் போகும் போது, என்னைப் போன்ற சிலருக்கு ஒரு நடுக்கம் உண்டாகும். மாபெரும் எழுத்தாளனாய் நான் கொண்டாடும் ஒரு மனிதனின் படைப்பில் எதாவது தவறோ குறையோ இருந்து, அதை கவனிக்க நேர்ந்தால் ---?! இதனால் தான் பரியேறும் பெருமாள் படத்திற்கான எதிர்பார்ப்பை சமநிலையிலேயே வைத்துக் கொள்ள முயற்சித்தேன். கூடவே, சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படும் திரைப்படங்கள் எல்லாம் ‘mediocre' ஆகவே இருக்கும் என்றும் ஒரு எண்ணம் இருந்தது. 

ஆனால், இந்த வகையில் ‘பரியேறும் பெருமாள்’ நிச்சயமாகவே விதிவிலக்கு தான். சாதாரண விதிவிலக்கு கிடையாது - அபூர்வமான விதிவிலக்கு.

யதார்த்தத்தில் நடக்கும் அநீதிகளை எல்லாம் அப்படியே திரையில் பிரதிபலிப்பது மட்டுமே நமக்கு தேவையான தீர்வாக இருந்துவிடும் என பல படைப்பாளிகள் நினைப்பது உண்டு. ஆனால், ஒரு எழுத்தாளராகவோ, சினிமா இயக்குநராகவோ, ஓவியராகவோ, ஒவ்வொரு கலைஞனுக்கும் இதைத் தாண்டிய ஒரு பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அது, ஒரு வன்முறைக்கு/அநீதிக்கு/பிரளயத்திற்கு எது பதிலாக இருக்கும், எதைப் போன்ற சூழல், எதைப் போன்ற மனிதர்கள், எதைப் போன்ற வார்த்தைகள் தீர்வாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டு அதைத் திரையில் சாதாரணமாக்கிப் பிரதிபலிப்பது. இது பரியேறும் பெருமாள் படத்தில் நடந்திருக்கிறது.

சட்டக் கல்லூரியில் இரண்டாவதாக முதல்வராக வருபவர், “அவனுங்கள நம்மளால திருத்த முடியுதா? அப்புறம்... இவன மட்டும்...?” என்பதும், “அவங்க உங்காளுங்க” எனும் பரியனை அறையும் ஆனந்தும், பரியன் எனும் பாத்திரமுமே பதில்களாகவும், தீர்வுகளாகவும் (அல்லது தீர்வை நோக்கிய பாதைகளாகவும்) தெரிகின்றன. 

ஃபேஸ்புக்கில் பல்லாயிரம் முறை பகிரப்பட்ட அந்த டீ க்ளாஸ் இல்லஸ்ட்ரேஷன் படத்தையும் கூட இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். க்ளீஷே தான் என்றாலும், “அழுகையும், இழப்பும், கண்ணீரும், வலியும், வேதனையும் எல்லாம் கூட க்ளீஷே தானே?” என்று ஒருவன் கேட்டது ஒலித்துக் கொண்டே இருப்பதால், நிச்சயமாய் அதைச் சேர்த்துக் கொள்வேன் தான்.

கிம்பிளில் எடுக்கப்பட்ட ஷாட்டுகள், சந்தோஷ் நாராயணின் இசைக் கோர்வையை எல்லாம் மெலிதாய் பின்புலத்தில் அமிழ்த்திவிட்டு, திருத்தித் தெரியும் நெல்லையின் முகங்கள் தான் எவ்வளவு கொண்டாட்டத்தை கொடுக்கின்றன?! ‘தி ரெவனெண்ட்’ படம் முழுக்க இயற்கை வெளிச்சத்தில் ஷூட் செய்யப்பட்டது என்பதை அறிந்த பிறகு, டிவியில் ‘ரெவனெண்ட்’ படத்தை பார்த்ததும் ஒரு சிலிர்ப்பு மேலெழுந்து வந்து கொண்டே இருந்தது. 

அந்த பனிக்குவியலில், அந்த மரங்களுக்கு இடையில், அதே வெளிச்சத்தில் நடந்தவற்றை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் - எனும் நினைப்பே பிரம்மாண்டமாக இருந்தது. இதையொத்த ஒரு உணர்வு தான் ‘வணக்கம்.. வணக்கமுங்க’ பாடல் முழுதும் இருந்தது. அந்நேரத்தில், ஆழமான நம்பகத்தன்மையும் உருவானது.

வழக்கமாக, மாரி செல்வராஜின் எழுத்துக்களில் வாசிப்பவர்களை அசைக்க, நடுக்கமெடுக்க செய்ய - மாரியப்பனின் சாமிக்கண்ணாகவோ, மழையில் நடக்கும் மஞ்சனத்தியாகவோ, சம்படி ஆட்டக்காரனான மாரி செல்வராஜாகவோ, மணிமேகலையின் அப்பாவை புதைக்க குழி தோண்டும் மாரி செல்வராஜாகவோ- ஒரு பாத்திரம் இருக்கும். அப்படி ஒரு பாத்திரமாக எனக்கு இந்த படத்தில் இருந்தது பரியனின் அப்பா செல்வராஜ். 

பலவீனத்தின் மொத்த உருவமைப்பாக தெரிந்த செல்வராஜோடு நாம் அத்தனை பேரும் நம்மை பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம் என்றால், நாமெல்லாம் வெறும் பலவீனங்களால் மட்டுமே ஆனவர்கள் தான் இல்லையா? கூடவே, செல்வராஜ் எனும் பாத்திரத்திற்கு இருக்கும் அழகியல் உண்டாக்கும் நெகிழ்வு, உறவுகள் மீதோ, மனிதர்கள் மீதோ பற்றை உண்டாக்குவதாக இருக்கிறது.

ஆனால், ஜோவுக்கு அவளுடைய அப்பாவைப் பற்றி தெரியக் கூடாது என நினைக்கும் பரியனின் கருணை மனம் எனக்கு வாய்க்கவில்லை. பெற்றோர்களின் இழி குணங்களை எல்லாம் பிள்ளைகள் அறிவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்; ‘அப்பா’, ‘அம்மா’ எனும் உறவுகளுக்கு கொடுக்கப்படும் புனித அந்தஸ்தை பிள்ளைகள் நிச்சயம் கேள்விக்குள்ளாக வேண்டும்; சாதியமும், வன்மமும் நிறைந்தவளாக என் அம்மா இருந்தால், எனக்கான வாழ்க்கை முடிவுகளை எடுக்க அவளுக்கு தகுதியில்லை என்பதை நான் அறிய வேண்டும் என நினைக்கிறேன்; பெண் பிள்ளைகளுக்கு முதல் போராட்டம் வீட்டில் இருந்து தான். இது நடந்திருக்க வேண்டும் இல்லையா?

இன்னொரு குறையாக நினைப்பது inclusiveness இல்லாததை. ‘ப்ளாக் பாந்தர்’ படத்தை பார்த்த ஒவ்வொரு ஆஃப்ரிக்க-அமெரிக்க பெண்ணுக்கும் ‘ஐரோப்பிய-மைய அழகு நிர்ணயங்கள்’ எத்தனை கால மேற்கத்திய ஊடகத்தின் பிரச்சாரம் என்பது புரிந்திருக்கும்; கருப்பாய், மொட்டையாய், போராளியாய் திரைப்படத்தில் தோன்றும் ஒரு மத்திம வயது பெண் கதாபாத்திரம், நிறைய ஆஃப்ரோ-அமெரிக்க பெண் பிள்ளைகளின் தன்னம்பிக்கை கூட காரணமாக இருக்கும். இந்த representation-ஐ சமூக பொறுப்பு இருக்கும் ஒரு படைப்பாளியிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியுமே ஒழிய, ‘எனக்கு பணக்காரர்களை பற்றி படம் எடுப்பது தான் ஈஸி’ எனும் கௌதம் மேனனிடம் இருந்தோ, சாதி அமைப்பை நியாயப்படுத்தி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் ராஜமௌலியிடம் இருந்தோ எதிர்பார்க்க முடியாது. 

ஆனால், மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ கொடுத்திருக்கும் நம்பிக்கை சமகாலத்தில் ஒப்பில்லாதது.

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha