கேரள மக்களுக்கு உதவ இணையத்தில் நிதி திரட்டும் கலைஞர்கள்!

0

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர்கள் பலர் இணையம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மீண்டெழுவதில் கைகொடுக்கும் வகையில் இந்த முயற்சிகள் அமைந்துள்ளன.

அண்டை மாநிலமான கேரளாவில் நூற்றாண்டில் காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாலங்கள் உடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்த லட்சக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெஸில் ஃபேஸ்புக் பக்கம்
ஜெஸில் ஃபேஸ்புக் பக்கம்

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நிவாரண பணியும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மீட்புப் பணியில் ராணுவம் மட்டும் அல்லாமல் மாநில மீனவர்களும் பெரும் பங்காற்றி வருகின்றனர். கேரள மீனவர்களை மாநிலத்தின் ராணுவம் என்று முதல்வர் பினராயி விஜயன் வர்ணித்துள்ளார்.

இதனிடையே பொதுமக்களும், இணையவாசிகளும் தங்களால் இயன்ற அளவுக்கு கேரள மக்களுக்கு உதவி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு மீட்புப் பணி ஒருங்கிணைப்பில் பலரும் உதவி வருகின்றனர். நிவாரண உதவி ஒருங்கிணைப்பிலும் சமூக ஊடகங்களில் பலரும் தீவிரமாக இயங்குவதை பார்க்க முடிகிறது.

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சேவைகள் மூலம் உதவிக்கு கோரிக்கை வைத்து நிவாரணப்பொருட்களை சேகரித்து பலரும் கேரள மக்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இப்படி பொருட்களை சேகரித்து வரும் நபர்களின் முயற்சியை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து உதவியை விரிவாக்கி வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, கலைஞர்கள் பலரும் இணையம் மூலம் நிதி உதவி திரட்டத்துவங்கியிருக்கின்றனர்.

பெரும் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளா இந்த பேரிடரோடு தீரத்தோடு போராடி வரும் நிலையில், இந்த பாதிப்பில் இருந்து மீண்டெழுவது எப்படி? எனும் கேள்வி எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்கவும், வீடுகளையும், உடமைகளை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

நன்றி; தி நியூஸ் மினிட்
நன்றி; தி நியூஸ் மினிட்

இதை உணர்ந்து கேரள நண்பர்கள் பலர் மறுவாழ்வுக்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேரளா முழுவதும் கலைஞர்கள் பல்வேறு வகையான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #artforrescue எனும் ஹாஷ்டேகுடன் இத்தகைய முயற்சியை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

உதாரணமாக, இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, #musicforrescue எனும் தெருவோர இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதே போல #DoforKerala மற்றும் #DonateToCMDRF போன்ற ஹாஷ்டேகுடனுடம் தங்கள் முயற்சிகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சிலர் தங்கள் படைப்புகள் மூலம் நிதி திரட்டி வருகின்றனர். நன்கொடை அளிப்பவர்களின் புகைப்படம் மற்றும் ஓவியத்தை வரைந்து தருவதாக வாக்குறுதி அளித்து நிதி அளிப்பதை ஊக்குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், #ClicksForKerala (கிளிக்ஸ் பார் கேரளா) எனும் ஹாஷ்டேக், புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையைs சேர்ந்த கிராபிக் வடிவமைப்பாளரான ஷர்மதா நாகராஹன் தனது தோழி பிரியதர்சினியுடன் இணைந்து டொனேட் பார் ஏ போர்ட்ரய்ட் (‘Donate for a Portrait’ ) எனும் முயற்சியை உருவாக்கியுள்ளார். கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.750 நிதி அளித்து அதற்கான அத்தாட்சியை ஸ்கிரீன்ஷாட்டாக அனுப்பி வைத்தால், அவர்களின் உருவ சித்திரம் வரைந்து அல்லது டிஜிட்டல் சித்திரத்தை உருவாக்கி அனுப்பி வைக்கின்றனர்.

”துவக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதன் பிறகு வேறு பல கலைஞர்களும் இந்த முயற்சியில் இணைந்து பங்களிக்க ஆர்வம் காட்டுவதாக,

ஷர்மதா தி நியூஸ்மினிட் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இப்போது 22 கலைஞர்கள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கலைப்படைப்புகளை விற்பனையை விட, சுய சித்திரங்களை உருவாக்கித்தருவது மக்களுக்கு ஈர்ப்புடையதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த ஜெஸில் (https://www.facebook.com/jaseel.jezi ) எனும் மாணவர் தனது ஃபேஸ்புக் மூலம் இதே போன்ற நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2,000 நிதி அளிப்பவர்களுக்கு அவர்களின் உருவச்சித்திரத்தை வரைந்து தருகிறார். #artforrescue எனும் ஹாஷ்டேகுடன் இந்த முயற்சியை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்திலும் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் பலர் ஒன்றுகூடி ‘Click for Coorg’ எனும் முயற்சியை இன்ஸ்டாகிராம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். ரூ.5,000 நிதி உதவி அளிப்பவர்களுக்கு பிரத்யேகமான புகைப்படத்தை எடுத்து தருகின்றனர். வாட்ஸ் அப் மூலமும் இந்த முயற்சி பற்றி தெரிவித்து மேலும் பலரை நிதி அளிக்க ஊக்குவித்து வருகின்றனர்.

இந்தக்குழுவில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் ஏற்கனவே 2015 சென்னை புயல் மழையின் போதும் இதே போன்ற நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Stories by cyber simman