3200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்: தமிழக மாவட்டங்களை சுற்றி வந்த கமல்!

0

பயணம் மனிதனுக்கு ஒரு அற்புதமான எரிபொருள். அது எப்போதும் ஒருவரது ஆற்றல் குறையாமல் பார்த்துக் கொள்ளும். சிலர் தடைகளைத் தாண்டி ஏதேனும் சாதிப்பவராக இருப்பர். கமல்ஹாஸ் அப்படிப்பட்ட ஒரு நபர். “50 ஆயிரம் ரூபாய் சேரும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு சிந்தனை வரும். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று”. இந்த முறை அவர் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். 28 மாவட்டங்களை உள்ளடக்கிய திடுக்கிட வைக்கும் 2 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரத்தை 20 நாட்களில் 2015 மே 24ம் தேதி முடித்தார் கமல். நாளொன்றுக்கு 120 கிலோ மீட்டர் பயணம். சராசரியாக சைக்கிள் பயணம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகம் எனில் அவர் நாளொன்றுக்கு 8 மணி நேரம் சைக்கிள் ஓட்டியிருக்கிறார். அதிலும் வெப்பம் தகிக்கும் மே மாதத்தில் இப்படி ஒரு பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு எந்த அளவுக்கு மன உறுதி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

கமலின் சாதனைக்கான ஆரம்பப் புள்ளி, "ஓஎம்ஆர் பெடல் மெசஞ்சர்" எனும் சிறு தொழில் (OMR Pedal Messengers)தான். அது ஒரு நபர் தொழில், கமல் மட்டுமே அதில் முதலாளி, அவரே தொழிலாளி. இருசக்கர வாகனத்தில் தபால் உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் தொழிலில் சென்னையில் இருந்த வெற்றிடத்தை நிரப்பியது அது. சென்னை ஐடி மையம் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் திருவான்மியூரிலிருந்து சிறுசேரி வரையில் அந்த சேவை துவங்கியது. “நான் தனியாகத்தான் இதை ஆரம்பித்தேன். பென் டிரைவ், ஆவணங்கள் போன்றவற்றை சைக்கிளில் எடுத்துச் சென்று டெலிவரி செய்ய ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் உரிய இடத்தில் டெலிவரி ஆகி விடும்” என்று தனது சேவை பற்றிச் சொல்கிறார் கமல். மூன்று மாதங்களுக்குப் பிறகு அது போதாது என்பதை உணர்ந்தார். தனது வாகனத்திலேயே விளம்பர போர்டை வைத்துக் கொண்டு செல்லும் நடமாடும் விளம்பர சேவையை அறிமுகப்படுத்தினார். அது கொஞ்சநாள் செயல்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் இவர் ஒருவரே செய்வது சிரமமாக இருந்தது. மேலும் அவர் வாட்ஸ் ஆன்-ல் (What’s on) கருத்துரு எழுதும் (content writer) வேலையும் செய்து கொண்டிருந்தார்.

“எனது வேலைக்கு மத்தியில் நாளொன்றுக்கு நான் 60லிருந்து 100 கிலோ மீட்டர் வரையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இது தவிர 2014ல் சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தேன். இதற்கிடையில் கேள்வி பதில் இணையதளமான கொரா (Quora)இணைய தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தேன். தவிர யுவர்ஸ்டோரியில் வரும் கட்டுரைகளை வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். கெராவும், யுவர்ஸ்டோரியும் எனது சைக்கிள் பயண தாகத்தை மேலும் அதிகரித்தது என்கிறார் கமல். (கமல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர யுவர்ஸ்டோரி காரணமாக இருந்தது என்பது குறித்து நாம் பெருமைப்படுகிறோம்)

இந்தப் பயணத்திற்கு இலக்கு எதுவும் இல்லை. 2015 மே 3ம் தேதி சென்னை வேளச்சேரியில் இருந்து பயணத்தைத் தொடங்கினேன். மே 27ம் தேதி பயணம் முடிந்தது. யாரும் இப்படிச் செய்ததில்லை. அதற்கடுத்து ஒரு மாநிலம் முழுவதும் உள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் முதல் இந்தியரானார் கமல். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் சென்றது அந்தப் பயணம். தேசிய நெடுஞ்சாலைகளோடு அவரது சைக்கிள் பயணம் முடிந்து விடவில்லை. கிராமங்களுக்குள்ளும் புகுந்து அதன் இதயத்தையும் தொட்டுச் சென்றது அவரது சைக்கிள். அந்தந்த ஊரின் உணவு, வட்டார மொழிகள் என ஒவ்வொன்றும் கமலுக்கு அறிமுகமானது. அவருக்குள் ஒரு சினிமாக்காரரும் இருந்தார். “எனவே இந்தப் பயணத்தின் ஊடாக ஒரு பயண ஆவணப்படமும் தயாரானது” என்கிறார் கமல்.

பொதுவாக ஒரு அறைக்குள் அடைந்து கிடப்பவன்தான் நான் என்று தயக்கத்துடன் கூறும் கமல், இத்தகைய பயணங்கள் அந்த வழக்கத்தை உடைக்கிறது என்கிறார். “கவ்ரவ் சித்தார்த், கார்த்திக் வர்மா, மார்க் பியூமோன்ட் போன்றவர்கள் சைக்கிளில் ஒருவர் சாதிப்பதை எல்லாம் தாண்டி சாதனை படைத்திருக்கின்றனர். அவர்கள்தான் எனது முன்மாதிரி, என்னை தூண்டியவர்கள். இது தவிர நான் உண்மையில் யார் என்கிற தேடலும் எனக்குள் இருந்தது” என்கிறார் கமல். ஆனால் இந்தப் பயணம் தனக்கு ஆரம்பம்தான் என்கிறார் அவர். கன்னியாகுமரியில் ஆரம்பித்து குஜராத் மாநிலம் கூச் மாவட்டத்தில் உள்ள ரான் பாலைவனப் பகுதிக்கும் ஸ்ரீநகருக்கும், ஐஸ்வாலுக்கும், ஐதராபாத்துக்கும், சென்னைக்கும் செல்ல வேண்டும் என்று மிகப்பெரும் பயணத் திட்டத்தை லட்சியமாக வைத்திருக்கிறார் கமல். “இது ஒரு நாள் நடக்கும். என்னால் இதைச் சாதிக்க முடியும் என்று காட்டுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அவர்.

கமல் தனது மாநிலம் குறித்துப் பெருமைப்படுபவர். சைக்கிளை எடுத்துக் கொண்டு பலபேர் நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கின்றனர். ஆனால் தனது சொந்த மாநிலத்தை சுற்றி வருபவர்கள் அரிதுதான் என்கிறார் அவர். ஒருவர் பார்க்க வேண்டிய அத்தனை விதமான நிலப்பரப்புகளும் காவியச் சிறப்பு வாய்ந்த இடங்களும் தமிழகத்தில் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது கமலின் விருப்பம். “யாரும் செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்தே எனது விருப்பமாக இருந்தது. லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசனோடுதான் எனது கேரியர் ஆரம்பித்தது. எனது பயணம் எப்போதுமே படப்பிடிப்போடு இணைந்ததாகத்தான் இருந்தது.” என்கிறார் கமல்.

ஒரு மிகப்பெரும் மாற்றத்திற்கான முதல் படிதான் இந்தப் பயணம். எனது பயணத்தின் மூலம் பெரும் மாற்றத்தை சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறும் கமல், புதிய கண்டுபிடிப்பு, கெட்டிதட்டிப் போன மக்களின் மனதில் ஒரு மாற்றம், சொந்தமாக ஒரு புதிய தொடக்கம், ஒரு இந்தியப் படம், பேசப்படாத பகுதிகளைப் பற்றிப் பேசுவது என்று தனது பயணத்தில் சாதிக்க விரும்பும் பலவற்றைப் பட்டியலிடுகிறார். 

தமிழ்நாட்டைச் சுற்றி வந்த பயணம் இப்போதுதான் முடிந்தது. அடுத்த பயணத்தை தொடங்குவதற்கு முன் ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டிருக்கிறார் அவர். இந்திய நகரங்களின் வரைபடத்தை உருவாக்கும் வீடியோ மார்க்கெட்டிங் கம்பெனி அல்லது க்யூஆர் கோட் சார்ந்த (QR code based) விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பது அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்து தயாரிப்பது என்று பல யோசனைகளை வைத்திருக்கிறார் கமல். ஆனால் இந்த யோசனைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. அவை தோற்றுக் கூடப் போகலாம். ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று கமல் உறுதியாக இருக்கிறார். தனது உடனடி திட்டம் பற்றிக் கூறும் அவர், “இந்த பயண ஆவணப் படத்தை விரைவில் வெளியிட வேண்டும். போதுமான பணம் என்னிடம் இல்லை. என்றாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் நம்பிக்கையும் என்னிடம் இருக்கிறது” என்கிறார் உற்சாகமாக.

கமலின் ஃபேஸ்புக்: Kamal