லீனா கெஜ்ரிவால்: கலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்!

0

லீனா கெஜ்ரிவால், ஒரு புகைப்படக்கலைஞர் மற்றும் இன்ஸ்டலேஷன் ஆர்ட்டிஸ்ட்(Installation artist). லீனாவின் புகைப்பட இன்ஸ்டலேஷன்கள் , கொல்கத்தா, டெல்லி, பெர்லின்,டெஹ்ரான்,வெய்மர் போன்ற உலகின் முக்கிய நகரங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளன. இவரின் இன்ஸ்டலேஷன்கள் பொதுவாக நகரங்களின் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை மையமாக கொண்டதாகவே இருக்கும்.

மேலும், லீனா பல அரசு சாரா நிறுவனங்களின் மூலமாக இளம் பெண்களின் பிரச்சினைகள் குறித்த வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பல புத்தகங்கள் இவரது புகைப்படங்களால் உயிர் பெற்றுள்ளது.தனது புகைபடங்களை கொண்டு பல கண்காட்சிகளையும் இவர் நடத்தியுள்ளார்.kala

லீனாவின் மனதிற்கு நெருங்கிய நகரம் கொல்கத்தா. அந்நகரையும் அந்நகரின் சுகந்தத்தையும் தனது கேமராவின் லென்ஸைக் கொண்டு கவர்ந்து வைத்துள்ளார். நட்சத்திர ஹோட்டல்கள், புத்தக அட்டைகள் , கண்காட்சி என எங்கிருந்தாலும் தனது இருப்பை கலை உலகிற்கு உணர்த்தி கொண்டே தான் இருக்கிறார் லீனா. அவர் தனது கலையை சமூகத்திற்கு தேவையான செய்திகளை உரக்க எடுத்துரைக்க பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.

அவருடைய வேலைகள் குறித்தும், இப்பொழுது செய்து கொண்டிருக்கும் M.I.S.S.I.N.G புராஜெக்ட் பற்றியும் பேசினோம். 

கேள்வி: M.I.S.S.I.N.G புராஜெக்ட் பற்றி சொல்லுங்கள். அதைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?  

லீனா: பூமியின் முகத்திலிருந்து மறையும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களைப் பற்றிய ஆர்ட் புராஜெக்ட் தான் M.I.S.S.I.N.G. கடத்தப்படும் பெண்கள் குறித்தும், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பெண்கள் குறித்தும் கலை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி தான் இது. பெண்கள் கடத்தபட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியளிக்கறது. இவ்வாறு காணாமல் போகும் பெண்கள் சராசரி ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ளவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத விளைவுகளை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்க நேரிடுவார்கள்.

இந்த புராஜெக்டில் , ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்ட பிரம்மாண்ட உருவங்கள், நகரின் முக்கியமான இடங்களில் வானை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அவை இளம் பெண்களின் உருவங்கள். தொடுவானத்தில் அமைக்கப்பட்ட இந்த உருவங்கள் பார்ப்பதற்கு மிகப் பெரிய கட் -அவுட்டுகள் போலத் தெரியும். அந்த கட்-அவுட்கள் கோடிக்கணக்கான பெண்கள் பூமியிலிருந்து ஆகாயத்தை நோக்கி பிளாக் ஹோல் -ன் (black hole) வாயிலாக மறைந்து போவதை குறிக்கிறது.

இந்த உருவங்கள் தேசம் முழுவதும் பத்து நகரங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதோடு, "மிஸ்ஸிங் செயலி" (Missing App) ஒன்றும் செயல்படுகிறது. அது உங்களுக்கு, அந்தப் பெண்ணைப் பற்றிய மேலும் விபரங்களை சொல்லும் ஒரு அனிமேஷன் படத்துக்கு கொண்டு செல்லும். கடைசிப் பக்கத்தில், நாம் கையொப்பமிடக் கூடிய மனுக்கள், சட்டங்களை வலிமைப்படுத்த வேண்டி சில கோரிக்கைகள் இருக்கும், மேலும் பெண்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் இருக்கும், உதவி வேண்டுபவர்கள் அவற்றை தொடர்பு கொள்ளலாம். இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கவும் சில இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த திட்டத்தை, ‘இந்தியக் கலைக் கண்காட்சியில்’ ( INDIAN ART FAIR) அறிமுகப்படுத்தியபோது நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்தது. இது பொதுமக்களுக்கான கலை மற்றும் விழிப்புணர்வு என்பதால், மக்களிடமே நிதி திரட்டி, அவர்களையும் ஈடுபடுத்தி இருக்கிறேன். வருங்காலத்தில் இதை ஒரு நிகழ்வாகவே செய்ய வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கிறது.

கேள்வி: உங்கள் ஆரம்ப காலத்தைப் பற்றியும்,புகைப்படக்கலை மற்றும் இன்ஸ்டலேஷன் கலையில் மேல் கவனம் திரும்பியதற்கான காரணங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

லீனா: நான், கொல்கத்தாவின், மார்வாரி பாரம்பரியம் கொண்ட குடும்பதிலிருந்து வருகிறேன். என்னுடைய இளம் பருவத்தை, ஜெய்ப்பூரில் உள்ள மஹாராணி காயத்ரி தேவி பெண்கள் பள்ளியில் கழித்தேன். அது ஒரு குறிக்கோளற்ற, கவலைகள் இல்லாத வாழ்க்கை. அப்படியே என் பட்டப்படிப்பையும் முடித்தேன். அதற்கு பிறகு, மூன்று ஆண்டுகள் நீண்ட இடைவேளை. நல்ல வேளையாக,அப்பொழுது நான் ஒரு அடிப்படை புகைப்பட படிப்பு ஒன்றையும், விளம்பரத்தில் ஒரு டிப்ளமோவும் படித்து முடித்தேன். இரண்டையுமே தொழில் ரீதியாக தொடரும் திட்டங்கள் எதுவுமே இல்லை.

ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டேன். போர்டிங்கில் இருந்த சுதந்திரமும், கவலைகள் இல்லாத வாழ்க்கையும் தான், என்னுடைய படைப்பாற்றலை ஒரு கட்டுப்பாடான குடும்ப அமைப்பில் வெளிக்கொணர வைத்தது என நினைக்கிறேன். மிக விரைவில் தரையில் மோத இருந்த ஒரு குமிழி போல இருந்ததை நான் உணர்ந்தேன்.

திருமணத்தின் முதல் ஐந்து வருடங்களிலேயே இரண்டு குழந்தைகளை பெற்றேன். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது தான் அந்நகரத்தில் போட்டோ ஸ்டுடியோவிற்கான பற்றாக்குறையை உணர்ந்தேன்.என் சொந்த சேமிப்புகளை கொண்டு ஒரு அடிப்படை ஸ்டுடியோவை அமைத்தேன். அதன் பிறகு திரும்பி பார்க்கவே இல்லை. ஒரு சில வாடிகையாளர்களுக்கு நுண்கலை உருவப்படம் செய்து கொடுத்து என் தொழில்முறை வாழ்க்கையை தொடங்கினேன்.

இதற்கிடையில், ஸ்டுடியோ தொடங்குவதற்கு முன்னர், ஒரு புத்தகத்திற்கு அட்டை வடிவமைத்துத் தர என் உதவி கேட்கப் பட்டது. அல்கா சரொகி எழுதிய ‘கலிகதா வயா பைபாஸ்’ (kalikatha via bypass) என்ற அந்த ஹிந்தி புத்தகம், அந்த ஆண்டின் சாகித்ய அகாடெமி விருது பெற்றது. புத்தகத்தின் அட்டையில் இருந்த நகரத்தின் ‘தேய்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை’, படம்பிடித்த புகைப்படம் சிறந்த அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்றது மிகவும் சந்தோஷமான தருணம். அந்த புராஜெக்ட் தான் என் நகரை சுற்றி பல அனுபவங்களை பெற காரணமாய் இருந்தது. நான் அதை மேலும் தொடர்ந்து சென்றது தான் என் முதல் கண்காட்சி ஃபிரான்சில் இருக்கும் ஆர்ட்டிஸ்ட் ரெசிடென்சிக்கு காரணமாக இருந்தது. மேலும் எனது சிறந்த த்தகமான "கல்கட்டா: ரீபொசசிங் தி சிட்டி"’-க்கும் ( Calcutta : repossessing the city) காரணமாய் இருந்தது.

கேள்வி: புகைப்படக்கலையின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

லீனா: நான் எப்பொழுதுமே கலை ஆர்வத்தோடு தான் இருந்தேன், கல்லூரியில் பாட நேரம் முடிந்த பிறகு வீட்டில் ஆயில் பெயின்டிங் கற்றுக் கொண்டேன். அண்ணன்கள் கேமரவோடு இருப்பதை பார்த்திருக்கிறேன் ஆனால் அதைத் தொடவோ பரிசோதிக்கவோ முடியாது. என் தம்பி ,ஸ்கூல் ட்ரிப் முடிந்து கேமராவோடு வந்ததை பார்த்த போது தான், அவனால் முடியுமென்றால், ஏன் என்னால் முடியாது என்று எனக்கே சொல்லிக் கொண்டேன். அதனால்,கேமராவின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன்.

கேள்வி: புகைப்படக்கலை உங்களில் ஒரு பகுதியானது எப்படி?

லீனா: நான் முதன்முறையாக நகரத்தின் சிவப்பு விளக்கு பகுதிக்குள் நுழைந்த போது, நான் பார்த்தவைகள் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. அப்பொழுதுதான் கேமரா என் வாழ்வின் இயற்கையான அங்கமானது. என் நகரை நான் காண ஆரம்பித்தது முதல், கலை வெளிப்பாட்டிற்கான சாதனமாய் அது இருந்திருக்கிறது. நான் என் உணர்வுகளோடு பேசுவதற்கும், என் கண்கள் காண்பதை படம் பிடிப்பதற்கும், நான் பார்த்த வண்ணங்களை பகிரவும் என் கேமரா உதவி இருக்கிறது. எப்பொழுதுமே,நான் சொல்வதை செய்யத் தயாராக இருக்கிறது.

M.I.S.S.I.N.G -ன் உருவங்களை கூட ,நகரின் பாதிக்கப்பட்ட பகுதிகளில், என் வழிகாட்டுதலின் கீழ் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை வைத்து தான்,வடிவமைத்தேன்.


கேள்வி: இதுவரையில் நீங்கள் சந்தித்த மிகப் பெரிய சவால் எது?

லீனா: என்னுடைய மிகப் பெரிய சவால்,கலை உலகின் வெளியில் இருந்து உள்ளே வந்தது தான், ஆனால் ஒரு நேரத்தின் ஒரு முடிவு எடுப்பதும், நிதானத்தை கடைபிடித்ததும் கலை உலகிற்குள்ளும் வெளியிலும் முன்னேற உதவி இருக்கிறது.

கேள்வி: எது உங்களை ஊக்குவிக்கிறது?

லீனா: புதிதாய் ஒன்றை உருவாக்கும் மகிழ்ச்சி. புதிய கதை ஒன்றை சொல்வது, புதிய ஊடகத்தில் பரிசோதனைகள் செய்து சிறந்ததை வெளிப்படுத்துவது, ஏனென்றால், இது ஒரு அற்புதமான உலகம்!