சாதாரண மனிதனாய் இருந்து 'தமிழ்நாடு வெதர்மேன்' ஆன பிரதீப் ஜான்!

41

நாளை மழை பெய்யுமா? வெள்ள அபாயம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால், முதலில் நாம் தேடுவது தமிழ்நாடு வெதர்மேன்’ சமூக தளம் என்றாகிவிட்டது. வானிலை அறிக்கைகள் உடனக்குடன் சரியாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு வெதர்மேனின் முகநூல் பக்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். இதிலும் 2015 சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு சென்னை மக்களின் அதீத கவனம் வெதர்மேன் மீது திரும்பியுள்ளது.

 தற்போது  மணிக்கு மணி சென்னை வானிலை பற்றிய பல பகிர்வுகளை வெளியிட்டு வருகிறார். இவரது வானிலை அறிக்கைகளை பல செய்தி தாள்களும் வெளியிடுகிறது.

இந்த தமிழ்நாடு வெதர்மேன் யார் என்றால், அவர் தான் பிரதீப் ஜான். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தன் சொந்த ஆர்வத்தால் தனியார் வானிலை ஆய்வாளராக இணையதளத்தில் வானிலை அறிக்கைகளை பகிர்ந்து வருகிறார்.

வானிலை மீது அவருக்கேற்பட்ட ஈர்ப்பினால் 2008-ஆம் ஆண்டில் இருந்து  பல வானிலை அறிக்கைகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். “இந்தியாவின் முதல் 20 மழைப்பொழிவு நிலையங்கள்” போன்ற பல தலைப்பில் வலைப்பதிவு செய்து வந்தார். மேலும் வானிலை வலைப்பதிவுகள் செய்யும் மற்ற பக்கத்திற்கும் பிரதீப் எழுதி வந்தார்.

2012-ல் ’தமிழ்நாடு வெதர்மேன்’ என்னும் முகநூல் பக்கத்தை திறந்தார். ஆனால் அவரது பக்கத்தை, 2015 சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முன்பு வரை 1000-க்கும் குறைவான மக்களே பின்பற்றினர்.

“அக்டோபர் 2014 வரை முகநூலில் நான் போடும் பகிர்வுக்கு ஒரு கமெண்ட் வந்தாலே அரிது. பல நேரங்களில் யாரும் பார்க்காத பகிர்வுக்கு ஏன் இரவு 2-3 மணிக்கு எல்லாம் வானிலை அறிக்கை வெளியிடுகிறேன் என்று யோசித்துள்ளேன்...”

என தன் ஆரம்ப காலத்தை தன் முக்நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரதீப். இருப்பினும் வானிலை மீது தான் கொண்ட பற்றினால் தொடர்ந்து பல பகிர்வுகளை வெளியிட்டுவந்தார் பிரதீப்.

“நான் லைக், ஷேர் மற்றும் கம்மெண்டுக்காக பதிவிடவில்லை என் சொந்த திருப்திக்காகவே முகநூலில் என் பதிவுகளை செய்தேன்,” என்கிறார்.

இப்படி தொடங்கப்பட்ட முகநூல் பக்கம் தற்பொழுது நான்கு லட்சத்திற்கும் மேலானா followers-ஐ கொண்டுள்ளது. அது மட்டுமின்றி செய்தித் தாள், தொலைக்காட்சி வானிலை அறிக்கையை நம்புவதைக் காட்டிலும், மக்கள் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்வுகளை நம்புகின்றனர்.

“மூன்று வருடங்களுக்கு பின் திரும்பி பார்க்கும்பொழுது கடவுளின் விருப்பத்தில் எதோ ஒரு காரணத்தினால் தான் இந்த பக்கத்தை நான் துவங்கியுள்ளேன்,” என்கிறார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் வேலைக்குச் சென்று மீதம் உள்ள நேரத்திலே வானிலை அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆனால் மழை நேரத்தில் உடனக்குடன் அறிக்கைகளை வெளியிடுகிறார்.

“ஒரு மழை ஆர்வலராக இதைச் செய்கிறேன். இத்தனை மக்கள் என் பக்கத்தை பின்பற்றும்போது எனக்கான பொறுப்பு அதிகமாகி உள்ளது” என தன் முக்நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரதீப்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin