ஜிஎஸ்டி: கல்வித்துறையில் ஒரு சில பொருட்களுக்கு வரிவிகிதம் குறைப்பைத் தவிர எந்தவித மாற்றமும் இல்லை!

0

ஜிஎஸ்டியின் கீழ் கல்வி பெறுவது அதிக செலவுள்ளதாக மாறியுள்ளது என்பது போன்ற அறிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய அறிக்கைகள் எந்தவகையிலும் முற்றிலுமாக நிரூபிக்கப்படாதவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. 

பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பைகள் போன்ற கல்விக்கான சில குறிப்பிட்ட பொருட்களுக்கான வரிவிகிதம் குறைக்கப்பட்டதைத் தவிர, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள காலத்தில் கல்வி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தருகின்ற சேவைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.

(அ) பள்ளிக் கல்விக்கு முந்தைய கல்வியிலிருந்து துவங்கி மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்குச் சமமானது;

(ஆ) தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியைப் பெறுவதற்கான பாடதிட்டத்தின் கீழான கல்வியின் ஒரு பகுதி;

(இ) தொழில்முறைக் கல்விப் பாடத்திற்கென ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்வியின் ஒரு பகுதி.

(பள்ளிக் கல்விக்கு முந்தைய கல்வியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வியை வழங்குகின்ற) எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் வழங்கப்படுகின்ற மாணவர்களை, ஆசிரியர்களை, ஊழியர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாட்டிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்றே மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் கல்வி வழங்கும் நிறுவனத்திற்கு, மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் ஆதரவுடன் நடத்தப்படும் எந்தவொரு மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டு, வழங்கப்படும் உணவு சேவைகளுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது துப்புரவு அல்லது தூய்மையாக்கப் பணிகளுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் கல்வி வழங்கும் இத்தகைய நிறுவனங்கள் மேற்கொள்ளும் மாணவர் சேர்க்கைக்கான அல்லது தேர்வுகளை நடத்துவது போன்ற சேவைகளுக்கும் கூட ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் எந்தவொரு நிறுவனமும் வழங்குகின்ற சேவைகளுக்கும், அதைப் போன்றே அந்த நிறுவனம் மற்றவர்களிடமிருந்து பெறுகின்ற முக்கியமான சேவைகளும் ஜிஎஸ்டியின் கீழ் எந்தவித வரிவிதிப்புக்கும் உட்படுவதில்லை. ஜிஎஸ்டிக்கு முந்தைய காலப்பகுதியில் போக்குவரத்து, உணவகம் போன்று கல்வி நிறுவனங்களுக்கு தனியார் வழங்கும் சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய பிரிவினரின் மீதான சேவை வரி ஜிஎஸ்டி காலத்திலும் தொடர்கிறது.

மேலும்,

(அ) கைவிடப்பட்ட, அனாதைகளான அல்லது வீடற்ற குழந்தைகள்;

(ஆ) உடல்ரீதியாக அல்லது மனரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு, அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட நபர்கள்;

(இ) சிறைக் கைதிகள்;

(ஈ) கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் 65 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள்,

ஆகிய பிரிவினருக்கான கல்வி, அல்லது திறன் மேம்பாடு ஆகிய முன்னேற்றத்திற்கென செயல்படுகின்ற, வருமான வரிச் சட்டத்தின் 12ஏஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட, எந்தவொரு அறக்கட்டளை வழங்கும் சேவைகள் அனைத்திற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜிஎஸ்டியைப் பொறுத்தவரையில் கல்வி மற்றும் இதர சேவைகளின் வரிவிதிப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.