ஒரு வைரல் புகைப்படத்தின் விலை என்ன?

1

ஒரு செய்தியோ, புகைப்படமோ வைரலாக பரவி பிரபலமாவது என்பது இணையத்தில் இப்போது சர்வ சகஜமாக நடக்கிறது. இவ்வளவு ஏன், நீங்கள் எடுக்கும் புகைப்படமோ அல்லது பகிரும் செய்தியோ கூட வைரலாகும் வாய்ப்பு இருக்கிறது. ’ஆண்டி வோரல்’ சொன்னது போல 15 நிமிட புகழ் இணையத்தில் எல்லோருக்கும் காத்திருக்கிறது. இந்த புகழ் எப்போது, எப்படி தேடி வரும் என்பது தெரியாது.

இதைவிட முக்கியமான விஷயம், இணைய புகழை எதிர்கொள்ள நேரும் போது அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறோமா? என்பது தான். அமெரிக்க புகைப்பட கலைஞரான மைக்கேல் ஷெக்லர் (Michael Sechler ) இப்படி ஒரு கேள்வியை தான் எழுப்பியிருக்கிறார். அவரது கதையை கேட்டால் இந்த கேள்வி இணைய யுகத்தில் தேவையானது தான் என்பதை நீங்களும் கூட ஒப்புக்கொள்வீர்கள்.

அமெரிக்காவின் புளோரிடாவைச்சேர்ந்த ஷெக்லர் தன்னை புகைப்பட ஆர்வலர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். அண்மையில் இர்மா சூறாவளியின் போது இவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி, அதன் விளைவாக முன்னணி நாளிதழ்கள், செய்தி தளங்களில் எல்லாம் வெளியானது. அந்த அளவில் அவருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவரது புகைப்படம் இணையவெளி முழுவதும் பிரபலமானாலும், அவருக்கு அதன் மூலம் பொருளாதார நோக்கில் ஒரு பயனும் ஏற்படவில்லை. அதாவது அவர் எடுத்த புகைப்படம் பலரால் எடுத்தாளப்பட்டாலும், அவருக்கு அதன் மூலம் ஒரு டாலர் வருவாய் கூட கிடைக்கவில்லை.

ஷெக்லர் எடுத்து வைரலான புகைப்படம்
ஷெக்லர் எடுத்து வைரலான புகைப்படம்

இந்த அனுபவத்தை தான், ஷெக்லர், இர்மா சுறாவளியின் போது வைரலான படத்தை எடுத்தேன், ஆனால் அதனால் ஒரு காசு கூட கிடைக்கவில்லை எனும் தலைப்பில் இதை அவர் புகைப்பட ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கும் பெட்டாபிக்சல் வலைப்பதிவு தளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இர்மா சூறாவளி தாக்குவதற்கு சில நாட்கள் முன்பாக, ஷெக்லரும் அவரது நண்பர்களும் சூறாவளி பாதிப்பை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்த போது, கடற்கரை பகுதியில் தண்ணீர் உள்வாங்கிய இடங்களில் ஒரு சில பொருட்கள் தட்டுப்படுவதை கண்டனர். நெருங்கி பார்த்த போது, அந்த பொருட்களுக்கு மத்தியில் இருந்தது மேட்னே (manatee) எனும் கடல் விலங்கு இரண்டு இருப்பது தெரிய வந்தது. தண்ணீரில் உயிர்வாழும் அவை, கடல் நீர் உள்வாங்கியதால் பரிதாப நிலையில் இருந்தன.

அந்த காட்சியை பார்த்ததுமே அவர்கள் உள்ளம் பதறியது. அவர்களால் முடிந்தவரை தண்ணீரை கொண்டு வந்து கொட்டினர். சூறாவளி கொண்டு வரும் மழை தண்ணீர் அவற்றை காப்பாற்ற வேண்டும் எனும் ஆதங்கத்தோடு, ஷில்லர் அந்த விலங்குகள் பரிதாப நிலையை படம் பிடித்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார். அவற்றை காப்பாற்ற முடிந்தாலும் ஏதேனும் செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சூறாவளி அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் நகரமே தடுமாறிக்கொண்டிருந்தாலும் நிலைமையை எதிர்கொள்ளவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் பலவித முன்னேற்பாடுகளும், தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் வாய் இல்லா ஜீவன்களால் என்ன செய்ய முடியும்?

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு அந்த புகைப்படத்தை பார்த்ததுமே பலரும் உள்ளம் பதைத்து அதை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு உதவி கோரிக்கை வைத்தனர். இப்படியே அந்த புகைப்படம் பரவி வைரலானது. பல கருணை உள்ளங்கள் நேசக்கரம் நீட்டியதால் அந்த விலங்குகள் காப்பாற்றப்பட்டன.

இர்மா சூறாவளி பேரிடருக்கு நடுவே மனிதநேயம் பல விதங்களில் வெளிப்பட்ட நிலையில், இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற புளோரிடாவசிகள் முன்னுக்கு வந்தது நெகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இது தான் முன்கதை சுருக்கம். இனி விஷயத்திற்கு வருவோம்.

ஷெக்லர் எடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி விலங்குகள் காப்பாற்றப்பட உதவியதோடு, ஊடகங்களிலும் வெளியாகத்துவங்கியது. திடிரென பார்த்தால் செய்தி தளங்கள் முதல் முன்னணி நாளிதழ்கள் எல்லாவற்றிலும் அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு அமெச்சூர் புகைப்பட கலைஞராக வருத்தமும் உண்டானது. இணையவெளி முழுவதும் அவரது படம் வெளியானாலும், அந்த அருமையான படத்தை எடுத்ததற்காக அவருக்கு பொருளாதார நோக்கில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த ஆதங்கத்தை தான் பெட்டாபிக்சல் தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

முதலில் பாக்ஸ் நியூஸ் நிறுவனம் படத்திற்கு அனுமதி கேட்டு தொடர்பு கொண்டதாகவும் அப்போது என்ன செய்வது எனத்தெரியாமல், தனது பெயரை குறிப்பிட்டு வெளியிடுமாறு கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தொடர்பு கொண்டு கேட்டபோது தான் அவர் புகைப்படக் கலைஞராக விழித்துக்கொண்டார். தனது புகைப்படத்திற்கு உரிய சன்மானம் கிடைக்க வேண்டும் என நினைத்தவர், புகைப்பட கலைஞர் நண்பருடன் கலந்தாலோசித்துவிட்டு ஆயிரம் டாலர்கள் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால், கட்டணம் தருவதற்கு தனக்கு அதிகாரமில்லை என ஏபி தரப்பில் தொடர்பு கொண்டவர் கூறவே ஷெக்லர் வேறு வழியில்லாமல் இலவசமாக புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார்.

அதன் பிறகு தான், ஏபி, சி.என்.என், வாஷிங்டன் போஸ்ட், டிஸ்கவரி சேனல், டெய்லி மெயில், போஸ்டன் குளோப் என முன்னணி தளங்களில் எல்லாம் அந்த படம் வெளியானது.

இந்த சம்பவங்களை எல்லாம் விவரித்துவிட்டு, ஒரு புகைப்படக் கலைஞராக தன்னுடைய உரிமையை பாதுகாக்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அடிப்படையில், விலங்குகள் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், கொஞ்சம் பணமும் சம்பாதித்திருக்கலாம், ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.,

உண்மையில் தான் இதற்கு தயாராக இருக்கவில்லை, பெரிய ஊடகங்கள் படத்தை வெளியிட அனுமதி கேட்ட போது, பொருளாதார நோக்கில் தன் உரிமையை நிலைநாட்ட தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஷெக்லரை பேராசை படுவதாக அல்லது தற்செயலாக எடுத்த படத்தை சாக்காக வைத்துக்கொண்டு மிகையாக புலம்புவதாக நீங்கள் நினைக்கலாம். இன்னும் சிலர் அவரது வாதத்தில் நியாயம் இருப்பதாக நினைக்கலாம்.

ஆனால் ஷெக்லர் இறுதியாக குறிப்பிட்டிருந்த விஷயம் தான் முக்கியமானது. நீங்கள் எப்போதாவது என்னிடத்தில் இருந்தால், அதற்காக ஒரு திட்டத்தை கையில் வைத்திருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது இது போன்ற சூழலில் நீங்கள் எடுக்கும் புகைப்படம் முக்கியமாக அமைந்து வைரலாகி, பெரிய ஊடகங்கள் தேடி வந்தால் அதை எப்படி கையாள்வது என யோசித்து வைத்துக்கொள்ளுங்கள் என அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

இணைய யுகத்தில் இது யோசிக்க வேண்டிய விஷயம் தான் இல்லையா? சூறாவளி பரபரப்புக்கு நடுவே புகைப்படத்திற்கு விலை பேச தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள தனக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது, ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அதை சரியாக கையாளுங்கள் என கூறி முடித்திருந்தார்.

ஆக, ஷெக்லரின் ஆதங்கம், அவர் கோட்டைவிட்டது அல்ல, அதைவிட சக புகைப்பட ஆர்வலர்கள் யாருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதே.

அதனால் தான், புகைப்பட ஆர்வலர்களின் இணைய சமூகமாக விளங்கும் பெட்டாபிக்சல் தளத்தில் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பது போல எல்லோரும் ஊடகவியலாளரே என சொல்லும் நிலையை புதிய ஊடகம் உருவாக்கி இருக்கும் நிலையில், வைரலாக பரவும் புகைப்படத்தை எடுத்தவருக்கு கிடைப்பது என்ன என்பது அர்த்தமுள்ள கேள்வி தான்.

இந்த கேள்விக்கான பதிலை நாம் யோசிப்பதற்கு முன், பெட்டாபிக்சல் தளத்தில் இந்த பதிவு தொடர்பாக பின்னூட்டங்களை கொஞ்சம் படித்துப்பார்த்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆதரவு, எதிர்மறை, கேலி, கிண்டல் என பலவிதமாக அமைந்த அந்த கருத்துக்கள் இந்த விஷயம் பற்றி பல விஷயங்களை புரிய வைக்கிறது.

ஷெக்லரின் புகைப்படத்திற்கு தான் பரவலான பிரசுர வாய்ப்பும், புகழும் கிடைத்துவிட்டதே இதற்கு மேல் என்ன வேண்டும் என சிலர் கேட்டிருந்தனர். விலங்குகளை மீட்பது அவரது நோக்கமா? அல்லது இதன் மூலம் ஆதாயம் அடைவதா? என சிலர் கேட்டிருந்தனர். இன்னும் சிலர் உரிமத்தொகை தொடர்பாக தெளிவு இல்லாமல் இருந்தது அவரது தவறு என கூறியிருந்தனர். புகைப்படத்துடன் பெயர் வெளியானது போதுமானது இல்லையா? என்றும் சிலர் கேட்டிருந்தனர்.

ஆனால், புகைப்படக் கலைஞர்கள் பல நேரங்களில் இப்படி தான் ஏமாற்றப்படுகின்றனர் என்றும் ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.

இன்னும் சிலர், இது போன்ற நேரங்களில் எப்படி படத்திற்கான விலை பற்றிய பேச்சை துவங்குவது என ஆலோசனை கூறியிருந்தனர். உரிமத்தொகை கிடைத்திருந்தால் கூட அதிகமாக இருந்திருக்காது என்று ஒருசிலரும், இப்போது கூட ஒன்றும் ஆகிவிடவில்லை, அதே படத்தை வேறு ஒரு வாய்ப்பில் நல்ல விலை பேச முடியும் என்றும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்த பின்னூட்டங்களை பொறுமையாக படித்துப்பார்த்தால் புகைப்பட காப்புரிமை தொடர்பாக பல விஷயங்களை புரிந்து கொள்ளலாம். எதிர்கால இணைய புகழுக்கு தயாராகும் வழியையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் இணையத்தில் கருத்துக்களை பகிரும் போது பொறுப்புணர்வு தேவை என்பதையும் உணர்ந்து கொண்டால் இன்னும் நல்லது. அப்போது தான் இணையத்தின் ஆற்றலை முழுமையாக உணர முடியும்!

பெட்டாபிக்சல் வலைப்பதிவு: https://petapixel.com/2017/09/13/shot-hurricane-irma-photo-went-viral-wasnt-paid-dime/