பூஜைக்கு ஆன்லைன் புக்கிங்: புனேவில் 300 குருக்களுடன் புது முயற்சி!

0

பாரம்பரிய குடும்பங்களைச் சேர்ந்த இந்தியர்கள் பலரும் தங்கள் வீடுகளில் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்வது, செலவுகளைத் திட்டமிடுவது முதலானவற்றுக்கு நேரத்தையும் உழைப்பையும் அதிகமாக செலவிடுகின்றனர். இத்தகைய பூஜைக்கான செயல்திட்டங்கள் அனைத்தையும் 'என் அனுகூல நேரம்' எனப் பொருள் தரும் மராத்தி மொழி சொல்லான "முஹுர்த்மஸா" (MuhurtMaza) என்னும் தளம் எளிதாக்குகிறது. புனேவைச் சேர்ந்த இந்த தொழில் முன்முயற்சியின் நிறுவனர் சுகேஷ் சொவலே, வாடிக்கையாளர்கள் பூஜை பேக்கேஜ்களை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்வதற்கு தங்கள் நிறுவனம் வழிவகுப்பதாகச் சொல்கிறார்.

இந்தியாவில், 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் கொண்டது இந்த மிகப் பெரிய சந்தை. அதாவது, ஒவ்வோர் இந்தியரும் (சுமார் 100 கோடி) தங்கள் கடவுள்களையும், மூதாதையர்களையும் வணங்குவதில் சராசரியாக 30 டாலர்கள் (ரூ.1,800) வரை செலவிடுகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக திருமணமான தருணத்தில் தனது வீட்டுக்காக சத்யநாராயணன் பூஜை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தபோதுதான் சுகோஷுக்கு இந்தத் தொழில் முன்முயற்சிக்காக யோசனை உதயமானது. அப்போது, எவ்வளவு தேடி அலைந்தும் நல்ல குருக்கள் (அர்ச்சகர்) ஒருவரை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதேபோல், பூஜைக்கான அனைத்துப் பொருட்களை வாங்குவதிலும் சிரமத்தை உணர்ந்தார்.

கடந்து வந்த பாதை...

"நானும் என் மனைவியும் வேலைக்குச் செல்பவர்கள். வீட்டில் ஒரு பூஜையை நடத்த முடிவு செய்தோம். புதிதாக குடிவந்த இடம் என்பதால், எங்களால் பூஜைக்கு ஏற்பாடு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எங்களுக்கு நேரமும் இல்லை என்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அப்போதுதான், எங்களைப் போலவே இளம் தம்பதிகள் பலரும் பூஜை செய்வதற்கு எந்த அளவுக்கு சிரமத்துக்கு ஆளாவர்கள் என்பதை உணர்ந்தேன். அதனால், ஆன்லைன் மூலம் அடித்தளம் அமைக்க விரும்பினேன்" என்கிறார் அவர்.

சுகோஷ் கடந்த ஆண்டு நவம்பரில் முஹுர்த்மஸா-வை தொடங்கினார். இவரது வாடிக்கையாளர்களில் ஒருவரான நிலேஷ் குதே இந்தப் புதுமுயற்சியைக் கண்டு வியந்தார். அத்துடன், இந்த முன்முயற்சியில் தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்பினார். அதன்படி, ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவன வாரியத்தின் சி.டி.ஓ.வாக பொறுப்பு ஏற்றார்.

இந்தக் கூட்டாளிகள் இருவரும் புதிய தொழில்முனைவர்கள் அல்ல. இவர்களிடம் விற்பனை மற்றும் நிர்வாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு எஃப்.எம்.சி.ஜி அண்ட் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ்சில் சுகோஷ் பணிபுரிந்தவர். அதேவேளையில், டிசிஎஸ் நிறுவனத்தில் கிடைத்த அனுபவம் மூலம் தொழில்நுட்பம், வணிக வியூகம் மற்றும் நிதி மேலாண்மை முதலான பிரிவுகளில் நிலேஷ் அசத்துபவர்.

ஆரம்பகட்டமாக சில மாதங்களில் தங்கள் ஆன்லைன் தளத்தில் அர்ச்சகர்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. "எங்கள் ஆன்லைன் தளத்துக்கு தகுதிவாய்ந்த அர்ச்சகர்களைக் கொண்டு வருவதுதான் மிகக் கடினமான பகுதி. நான் ஒவ்வொரு கோயிலுக்கும் ஏறி இறங்கி, அர்ச்சகர்கள் பலரையும் சந்தித்து இந்த முயற்சியின் நன்மைகளையும் பலன்களையும் எடுத்துச் சொன்னேன்" என்று நினைவுகூர்கிறார் சுகோஷ்.

தற்போது, 300-க்கும் அதிகமான அர்ச்சகர்களை ஆன்லைனில் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அவர்கள் அனைவருமே மராட்டியர்கள் அல்ல. தமிழ், பெங்காலி, மலையாளம் மற்றும் தெலுங்கு அர்ச்சகர்களும் உள்ளனர்.

முஹுர்த்மஸாவில் பூஜைக்கு முன்பதிவு செய்யும் முறை

தளத்தில் நுழைந்ததும் பிரத்யேகமாக உள்ள 100 வகைகளில் வாடிக்கையாளர்கள் தாங்கள் நடத்தவுள்ள விழாவையும், தேதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்ற அனைத்தையும் முஹுர்த்மஸா குழு பார்த்துக்கொள்ளும்.

இதற்காக, 10 பேர் கொண்ட குழு இயங்குகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தகுந்த சரியான அர்ச்சகரைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் முக்கியப் பணிகளுல் ஒன்று. எல்லா வகையான பூஜைக்கும் தேவையான பொருட்களின் பட்டியல் ஏற்கெனவே தயார் நிலையில் இருக்கும். அவற்றை வாடிக்கையாளருக்கும் அர்ச்சகருக்கும் அனுப்பிவிடுவர்.

பூஜையின் தன்மை மற்றும் தேவையான பொருட்களைப் பொருத்து, பூஜை பேக்கேஜ்களுக்கான கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.30,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பூஜைக்கும் ஆன்லைன் பதிவுகளின் மூலம் நிறுவனத்துக்கு கமிஷன்களின் அடிப்படையில் வருவாய் கிடைக்கிறது. வெறும் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே கமிஷன் கட்டணம் என்பது ஏற்கத்தக்கதே. எஞ்சிய தொகை அனைத்துமே அர்ச்சகர்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுவிடும்.

'பேமென்ட் கேட்வே'வை ஒன்றிணைப்பதற்கு முன்பு, அர்ச்சகர்களின் சந்தையிடமாக மட்டுமே இந்த ஆன்லைன் தளம் இருந்தது. "ஆரம்பத்தில் அர்ச்சகர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பணியை மட்டும் மேற்கொண்டு, நிகழ்ச்சி முடிந்த பிறகு எங்கள் கமிஷன் தொகையை நேரடியாக வசூலித்தோம். எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கொஞ்சம் சிரமம் கூடியது. அதனால்தான், எங்கள் தளத்துடன் 'பேமென்ட் கேட்வே' முறையை ஒன்றிணைத்தோம்."

முஹுர்த்மஸா தளம் மென்மேலும் வளர்ந்து வரும் தொழில்முயற்சியாகத் திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 150 பூஜை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உறுதுணையாக இருந்துள்ளது. மகாராஷ்டிராவில் புனே, நாசிக், நாக்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இயங்கிவரும் இந்த நிறுவனம், அடுத்த 6 மாதங்களில் மொத்தம் 25 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'யுவர்ஸ்டோரி'யின் பார்வை

இது தனித்துவமான யோசனைதான் என்றாலும்கூட, வெவ்வேறு இடங்களில் இதே பாணியில் செயல்படும் மை பண்டிட், சூப்பர் பண்டிட் முதலான தொழில் முயற்சிகளையும் அறிய முடிகிறது. ஆனால், தங்குதடையின்றி வாடிக்கையாளர்களின் மிக எளிதான பயன்பாட்டுக்கு வித்திடுவது என்ற நோக்கத்தை அடைவதற்கு சில காலம் ஆகலாம். உதாரணமாக, எனக்கு பெங்காலியில் 'முகே பட்' என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், அதற்கு சமஸ்கிருதத்தில் 'அன்னபிரஷ்ணம்' என்பதை அறிவேன். ஆனால், அவர்கள் எனக்குத் தேவையான பெங்காலி அர்ச்சகரை அனுப்புவார்களா அல்லது ஒரு மராத்தி அர்ச்சகரை அனுப்புவார்களா என்பது எனக்குத் தெரியாது.

ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் சார்ந்த இந்தத் துறைக்கு, நாடு தழுவிய அளவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. கடந்த 90களில் உருவான மேட்ரிமோனியல் வலைதளங்கள் போலவே இதற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம்தான் என்பதையும் கணிக்க முடிகிறது.

இணையதள முகவரி: முஹுர்த்மஸா

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்