சுகாதார பிரச்சனைக்கு தீர்வளிக்கும் லடாக்கின் ’உலர்ந்த கழிப்பறைகள்’ 

0

அழகிய ஏரிகளுக்கும் பனி நிறைந்த மலைகளுக்கும் பிரபலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் ஒரு வியக்கத்தக்க பகுதியாகும். லடாக் அழகாக காட்சியளிப்பது மட்டுமல்லாது அதிகம் அறியப்படாத பல பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சனையான சுகாதாரம் சார்ந்து தீர்வளிக்கிறது.

இங்குள்ள ’உலர்ந்த கழிப்பறை’களில் மனிதக்கழிவுகளை ஆர்கானிக் உரமாக மாற்றும் செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மண்ணை வளப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த கழிப்பறை இரண்டு அடுக்கு அமைப்பு கொண்டது. இதன் மேல்பகுதியில் கழிவுகளும் கீழ்பகுதியில் உரமாக்கும் அமைப்பும் உள்ளது.

ஒவ்வொரு முறை கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் அதை மூடிவைத்து உரமாக்கும் செயல்முறையை முடுக்கிவிட பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் தண்ணீரையும் மின்சாரத்தையும் சேமிக்க உதவுவதுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் தேவையையும் நீக்குகிறது. கழிவுநீர் இணைப்பிற்கான பராமரிப்பையும் குறைத்து அது தொடர்பான செலவுகளையும் குறைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகம் காணப்படும் பகுதிகளில் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதையும் கவனிக்கலாம். இந்தத் திட்டம் பாலைவனப் பகுதிகள், குழிகள் அல்லது பாதாள சாக்கடைகள் தோண்டப்படுவது சாத்தியமில்லாத பாறை நிலப்பரப்புகள், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ள கடற்கரை பகுதிகள் போன்றவற்றில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என ’பிசினஸ் இன்சைடர்’ குறிப்பிடுகிறது. இந்த உலர்ந்த கழிப்பறைகள் வெப்பநிலை கடும் வீழ்ச்சியடையும் மழைக்காலங்களில் பெரிதும் உதவுகிறது.

ஹெலனா நார்பெர்க் ஹாட்ஜ் என்கிற ஸ்வீடன் மொழியயலாளர் தனது புத்தகமான ’ஏன்சியண்ட் ஃப்யூச்சர்ஸ் : லெர்னிங் ஃப்ரம் லடாக்’ நூலில் குறிப்பிடுகையில்,

ஒவ்வொரு வீட்டிலும் உரமாக்கப்படும் கழிப்பறைகள் இருக்கும். தரையில் ஓட்டையுடன்கூடிய ஒரு சிறிய அறை இருக்கும். இது ஒரு செங்குத்தான சாய்வான அமைப்பிற்கு மேற்புறத்தில், வழக்கமாக மேல் அடுக்கில் அமைக்கப்பட்டிருக்கும். சமையலறை அடுப்பில் இருந்து வரும் சாம்பல் இதில் சேர்க்கப்படும். இது வேதியியல் சிதைவிற்கு உதவி சிறப்பான உரத்தை உற்பத்தி செய்து வாடையை போக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கழிப்பறை தரைமட்டத்தில் காலியாக்கப்பட்டு நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாநிலத்தில் அதிகரித்துள்ளது. 1974-ம் ஆண்டு 527-ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 2,35,482-ஆக உயர்ந்துள்ளதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு இடமளிக்க கட்டிடங்கள், உணவகங்கள், கஃபேகள், சுற்றுலாப் பயணிகளுக்கான இடங்கள் போன்றவை அதிகளவில் கட்டப்பட்டு திட்டமிடும் முறையிலும் சமரசம் செய்துகொள்ளப்படுகிறது.

மத்திய அரசு 2022-ம் ஆண்டிற்குள் 100 சதவீத சுகாதார வசதியை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நாட்டின் அனைத்து மூலைகளையும் எட்டாத நிலையில் லடாக்கில் காணப்படும் இந்த அமைப்பு பல விதங்களில் பலனளிக்கக்கூடியதாக உள்ளது.

கட்டுரை : THINK CHAGE INDIA