தென்னிந்தியாவில் 60 வகை தேநீர் வழங்கும் முதல் டீ கஃபே: நிறுவனர் நிர்மல் ராஜின் சுவைமிகு கதை!

9
“என்னுடைய அம்மா டீ தொழிற்சாலையில் கணக்கு எடுத்துக்கொண்டிருக்க, நான் வெதுவெதுப்பான வறுத்த தேயிலை சாக்குப் பைகளின் மீது தேயிலையின் நறுமணத்தை உள்வாங்கியவாறே படுத்து உறங்குவேன்...”

என்ற நினைவலைகளுடன் தொடங்கினார் நிர்மல் ராஜ். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும்  ஊட்டியைச் சேர்ந்தவர் இவர். இவரது அப்பா தேநீர் பிரியர். கோத்தகிரியிலிருந்த ஒரு தேயிலை தொழிற்சாலையில் உதவியாளராக பணியைத் துவங்கி பின்னர் மஹாலிங்கம் INDCO தேயிலைத் தொழிற்சாலையில் தேநீர் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் சிறப்பாக தேயிலை தயாரிக்கும் 16 நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு நிர்மலின் அப்பா பெரிதும் உதவினார்.

அமைதியாக சென்ற வாழ்க்கையில் பேரிடியாக, திடீரென, 1996-ல் நிர்மலின் அப்பா இறந்துவிட்டார். அப்போது நிர்மலுக்கு 6 வயது. அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அவரது தந்தையின் இழப்பு. குடும்பத்தை நடத்த வேறு வழியின்றி அதே தொழிற்சாலையில் க்ளார்க்காக பணியில் சேர்ந்தார் நிர்மலின் அம்மா. அவர் கடுமையாக உழைத்தார்.

ஊட்டியில் உயர்நிலைப் படிப்பை முடித்த நிர்மல், கேட்டரிங் அல்லது விளையாட்டுத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அப்போது கம்ப்யூட்டர் பட்டதாரிகளின் தேவையிருந்ததால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச்சொன்னார் அவரது அம்மா. வேறு வழியின்றி சம்மதித்தார்.

அந்த சமயத்தில் ஊட்டியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலிருந்த மற்றொரு தொழிற்சாலைக்கு நிர்மலின் அம்மா மாற்றப்பட்டார். மூன்று மணி நேரப் பயணம் என்பதால் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு இரவு பத்து மணிக்கே வீடு திரும்புவார்.

”இவ்வளவு கஷ்டத்துடன் எதற்காக தொடர்ந்து இந்த வேலையைச் செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ’எப்போதும் முயற்சியை கைவிடக்கூடாது. ஒரு நாள் அனைத்தும் சரியாகிவிடும்,’ என்றுள்ளார். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது அந்தத் தருணத்தில்தான்,”

என்கிறார் நிர்மல். அதுவரை பெரிய இலக்கேதும் இல்லாமலே இருந்துள்ளார். அவரது முயற்சியின் தொடக்கத்தில் சில தோல்விகளைச் சந்தித்தபோதும், அம்மாவின் வார்த்தைகள் அவருக்கு ஊக்கமளித்து இன்று வரை வளர்ச்சிக்கு வழி செய்கிறது என்கிறார். 

ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்

பட்டப்படிப்பை முடித்து பணிபுரிந்து கொண்டிருந்தபோது, பணிநேரம் முடிந்ததும் உள்ளூர் தேநீர் கடைகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் தேயிலை டஸ்ட் விற்பனை செய்து வந்தார் நிர்மல். குறைந்த விலையில் தரமான தேயிலையையே அனைவரும் விரும்பினர். 

"எனக்கு கிலோ 50 ரூபாய் என்ற விலையில் தேயிலை கிடைத்தது. இதை 100 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆனால் அந்த தேயிலையை ஆராய்ந்தபோதுதான் அதில் மரத்துகள்கள், நிறத்தை மாற்றுவதற்கான பொருட்கள் கலந்து கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது,” என்கிறார்.

இத்தனை அற்புத வளங்கள் இருந்தும் சுத்தமான, இயற்கையான தேனீர் கிடைக்காததற்கான காரணத்தை அப்போதுதான் உணர்ந்துள்ளார் நிர்மல். சிறுவயது முதல் டீ தொழிற்சாலைகளில் விளையாடி வளர்ந்ததாலே தனக்கு அத்துறை மீது அலாதி பிரியம் என்கிறார்.

ஒரு முறை கோவையில் சுத்தமான இடத்தில் ஒரு கப் தேநீர் குடிக்க நினைத்த போது, எங்கும் காஃபி ஷாப்களே கண்ணில் தென்பட்டது. அங்கேயும் டீ பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டது. முழு தேயிலையின் நறுமணத்தை நன்குணர்ந்த நிர்மலுக்கு டீ பேக்கின் சுவை பிடிக்கவில்லை. இந்தச் சூழலை கவனித்த அவர், ’Buddies Café’ என்கிற தேநீர் ஷாப்பை தொடங்க முடிவெடுத்தார்.

துவக்கம்

அவரது பெற்றோர் தேயிலை உற்பத்தி சார்ந்த பணியிலிருந்ததாலும், அதன் பின்னணியில் வளர்ந்ததாலும் நிர்மலுக்கு தேயிலை குறித்த பல தகவல்கள் தெரிந்திருந்தது.   இந்தியர்களுக்கு தேநீர் ஒரு சிறந்த துணை. ஆனால் டீ துறையில், இரண்டு பிரச்சனைகள் இருந்ததை கவனித்தார் நிர்மல். மேலும் விளக்கிய அவர்,

“ஒன்று கலப்படம். இரண்டாவது சரியான டீ ஜாயிண்ட்கள் இல்லாதது. அதனால் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹோப்ஸ் பகுதியில் Café ஒன்றை துவங்கினேன். பால் கலந்த தேநீர் மற்றும் ப்ளாக் டீ என வழக்கமான 15 வகைகளைக் கொண்டு துவங்கினோம்.”

முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. தொழிலில் சுத்தமான சூழலை உருவாக்கினர். ஆனால் தொழில் சிறக்கவில்லை. இவரின் கஃபே-ல் உள்ள தேநீர் வகைகள் விலையுயர்ந்ததாக உள்ளது என வாடிக்கையாளர்கள் எண்ணி வரத்தயங்கினர். அதன் பின்னர் பீளமேடு பகுதியின் PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி அருகே 30 லட்ச ரூபாய் சுய முதலீட்டில் Café-யை தொடங்கினார். 

சந்தித்த சவால்கள்

முதல் மாடியில் கடையை மாற்றியதால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் சிரமத்தை சந்தித்தனர். இருப்பினும் சுவையான தரமான தேநீரையை வழங்கியதால் மெல்ல மெல்ல Buddies Café விற்பனை அதிகரிக்கத் துவங்கியது.

“எங்களது Café க்கு வரும் பலர் காஃபியையே ஆர்டர் செய்தனர். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 50 கேப்புசீனோக்களுக்கும் மேல் விற்பனை ஆனது. பலர் காஃபி ஷாப்பாக மாற்றிவிடுமாறும் அறிவுறுத்தினர். ஆனால் நான் என்னுடைய கனவை எந்தச் சூழலிலும் கைவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.”

அதன்பின் காபி குடிக்க வரும் வாடிக்கையாளர்களை தேநீரை சுவைத்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார் நிர்மல். அடுத்த முறை அவர்கள் அங்கு வந்தபோது அவர்களின் விருப்பம் காஃபியிலிருந்து தேநீராக மாறி இருந்தது.

முதலீடு

சுய முதலீட்டில் துவங்கப்பட்டது Buddies Café. துவங்கிய இரண்டாண்டு வரை அவரது சேமிப்பிலிருந்தே செலவழித்து வந்தார். அதன் பின் அவரது அம்மா, நண்பர்கள், உறவினர் என அனைவரும் அவரது பயணத்திற்கு உறுதுணையாக இருந்து ஆதரவளித்தனர். சொந்த முதலீட்டில் சிறிய குழுவாக செயல்படத் துவங்கினார்.

தேயிலை துறை வளர்ச்சி

உலகளவிலான தயாரிப்புகளில் தேயிலை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு கப் தேநீர் குடிக்கவில்லையெனில் அன்றைய நாள் நிறைவானதாக இருக்காது. தேயிலை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச தேயிலை சந்தையில் உலக தேயிலை ஏற்றுமதியில் இந்தியா 12 சதவீதம் பங்களிக்கிறது.

உலகெங்கிலுமிருந்து பெறப்பட்ட 60 தேயிலை வகைகளை தென்னிந்தியாவில் Buddies Cafe மட்டுமே வழங்குகின்றனர். டார்ஜிலிங், நீல்கிரீஸ், ஜப்பான், சீனா மற்றும் தென் ஆப்ரிக்காவிலிருந்து பெறப்படும் ப்ரீமியம் தேயிலையை வழங்குகின்றனர். ஆஸ்திரேலியாவிலிருந்து பழம் சார்ந்த இன்ஃப்யூஷனையும் எகிப்து மற்றும் ஜெர்மனியிலிருந்து ஹெர்பல் டைசான்ஸ் ஆகியவற்றையும் வழங்குகின்றனர். பல்வேறு வகையான தேநீர் இருப்பதால் வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற சுவையை பரிந்துரைப்பது இவர்களின் சிறப்பு.

தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் அளவில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளபோதும் அதிக தரமான தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல டீ ரூம்கள் இருப்பினும் Buddies Café-ல் மட்டும்தான் தேயிலை நேரடியாக இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது.

பெரும்பாலான விவசாயிகள் தேயிலை உற்பத்திக்கு பாரம்பரிய பயோடைனமிக் பயிரிடும் முறையை பின்பற்றுகின்றனர். தேயிலைத் தோட்டம் ஆர்கானிக்காக இருப்பதை உறுதிசெய்கிறோம். விவசாயிகளுடன் நெருங்கிப் பணிபுரிகிறோம்.

தேயிலைத் தோட்டம் மலையின் மேல் இருப்பதால் தூய்மையான மாசற்ற சூழல் கிடைக்கிறது. செயல்முறையில் எந்தவித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. தேயிலையின் விலை 40 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையாகும். பேக்கேஜிங் ஒரு கிலோவிற்கு 400 ரூபாய் முதல் 32,000 ரூபாய் வரை ஆகும். 

முதல் ஆண்டு இவர்களது சராசரி விற்பனை ஒரு நாளைக்கு 500 ரூபாயாக இருந்தது. இன்று Café-ல் தேநீர், உணவு, ஸ்னாக்ஸ் விற்பனை, கார்ப்பரேட் ஆர்டர்கள், வெளியே சப்ளை செய்வது என ஒரு நாளைக்கு 8 முதல் 10,000 வரை ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.

குழு விவரம்

Buddies Café-ன் நிறுவனர் மற்றும் சிஇஓ நிர்மல் ராஜ். ஹோட்டல் சர்வீஸ் துறை மற்றும் ஃப்ரான்சைசிங் பிரிவில் ஆறு வருட அனுபவம் கொண்ட விவேக் நடராஜ் இணை நிறுவனராக உள்ளார். தற்போது Café-ல் இரண்டு ஊழியர்களும் ஒரு டெலிவரி ஊழியரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக ஒரு சில சம்பவங்களை நினைவுகூர்ந்தார் நிர்மல்.

“ஒரு முறை ஒரு வாடிக்கையாளர் Buddies Café-ல் இருக்கும்போது அம்மாவின் மடியில் படுக்கும் உணர்வைப்போல ஏற்படுத்துவதாகவும், தேநீரின் சுவையும் அருமையான சூழலும் இனிமையான பாடல் தொகுப்புகளும் மனதிற்கு இதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.”

சமீபத்தில் மற்றொரு வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு, எங்களின் momos சுவையாக இருப்பதாகவும் உடனே அதை சுவைக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதை எடுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றபோது அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார் நிர்மல்.

எதிர்கால திட்டம்

கபே-வை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்மல், இந்தியா முழுவதிலும் ஃப்ரான்சைஸ் உரிமம் பெற 40 விசாரணைகள் வந்துள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். இதற்கென தனிப்பட்ட முறையில் நிதியை உயர்த்த திட்டமிட்டு வருகின்றனர். சில எக்ஸ்பிரஸ் ஃப்ரான்சைஸ் உரிமம் ஏற்கனவே வழங்கியுள்ளனர். 

கோவையின் Ci gusta மற்றும் மைசூருவின் Home Café ஆகிய இடங்களில் இவர்களது தேநீர் கிடைக்கிறது. கோவையின் பாப்பிஸ் ஹோட்டலிலும் இவர்களின் டீ வகைகள் அறிமுகப்படுத்த உள்ளனர். மேலும் greenbliss.com, snacksbazzaar.com ஆகியவற்றிலும் இவர்களது தேயிலை ப்ராண்டை வாங்கலாம். Danjo Tea என்கிற பெயரில் ப்ரீமியம் தேநீரை வெகு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கும் தேநீர் சுவைக்கும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளனர்.


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan