'அன்னையர் தினம்'- நினைவுகளை பகிரும் பிரபலங்கள்!

1

மனம் தளர்ந்து போய், எதைப் பற்றியும் பேசக் கூட விருப்பமில்லாமல் அமர்ந்திருப்போம். உடனே, அம்மாவிற்கு மனம் தாங்காது. ‘என்ன ஆச்சு, என்ன ஆச்சு’ என பலமுறை துருவித் துருவிக் கேட்டாவது பிரச்சினையை அறிந்துக் கொள்வார். ‘இதுக்குத் தான் இப்படி மூஞ்சியத் தூக்கி வச்சுட்டு இருந்தியா?’ என, நாம் எதிர்பார்த்தேயிராத ஒரு தீர்வையும் சொல்லிவிடுவார். எனக்கு என் அம்மாவிடம் பிடித்த குணம் இது தான்.

நிச்சயம், இது அம்மாக்களால் மட்டுமே சாத்தியம். சிந்தித்துப் பார்த்தால், பிரச்சினைகளை தனியே சமாளிக்க நிச்சயம் தடுமாறுவார்கள். ஆனால், பிள்ளைக்கென வரும் போது, தோன்றும் சுயநலமில்லாத அதீத நேசத்திற்குக் காரணமாய் இருக்கும் தாய்மை எவ்வளவு அற்புதமானது?

நன்றி: juliaswartz.com
நன்றி: juliaswartz.com

இந்த அன்னையர் தினத்தில், நாம் மதிக்கும் சில ஆளுமைகளிடம், அவர்களுடைய தாயின் எந்த குணம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனக் கேட்டோம்...

பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம் (சமூக ஆர்வலர்,தொழில் முனைவர் )

“என் அம்மாவிடம் எனக்கு பிடித்த குணம் என்னவென்று கேட்டால், அவர் எப்போதுமே நம்பிக்கை இழக்கவே மாட்டார். எப்போதுமே சரியான முடிவுகளையே எடுப்பார், அதுவும், நேரம் குறைந்ததாக இருக்கும் போதும் கூட, சரியான முடிவுகளை எடுப்பார். இன்று எனக்கு இருக்கும் முடிவு எடுக்கும் திறன் எல்லாம் அம்மாவிடம் இருந்து வந்தது தான்.”
அருணாச்சலம் முருகானந்தம்
அருணாச்சலம் முருகானந்தம்

பா.ரஞ்சித் (திரைப்பட இயக்குனர்)

“எனக்கு எங்க அம்மாகிட்ட பிடிச்ச குணம்னா, அவங்க எப்பவும் வேலை செஞ்சுட்டே இருப்பாங்க. நாங்க மூணு பேருமே பசங்க தான். வீட்ல இருக்கவே மாட்டோம், எப்பவும் கிரிக்கெட் விளையாட போயிடுவோம். எங்க வீட்ல மாடு இருந்தது. அம்மா தான் காலையில எந்திரிச்சதிலிருந்து ராத்திரி வரைக்கும், பால் கறக்குறது, மாட்டுக்கு புல் வைக்குறது, கடைக்கு போறது, சமைக்குறதுனு எல்லா வேலையும் செய்வாங்க. செருப்புக் கூட போட்டுட்டு இருக்க மாட்டாங்க.

அழுவாங்க, சின்னக் கொழந்தைங்க எல்லாம் எப்படி கண்ணீரே வராமலும் சும்மா கத்திட்டே இருக்குமோ, அப்படி அழறது அவங்களுக்கு ரொம்ப பழகிப் போன விஷயம். ஆனா, ஸ்டாராங்கா இருப்பாங்க. ‘அட்டக்கத்தி’ முடிச்சிட்டு, நான் வீட்டுக்கு போனப்போ என்னை கட்டியணச்சு முத்தம் கொடுத்தாங்க. அவங்களோட மொத்த ஆசீர்வாதம் அது.”
பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

அலெக்ஸ் பால் மேனன் (ஐ.ஏ.எஸ் அதிகாரி)

“எனக்கு என் அம்மாகிட்ட பிடிச்சது தலைமைத்துவ திறன்கள். கிராமத்தில் பிறந்தவங்க, கடைசி பெண் குழந்தை வேற. அவங்க சகோதரிகளுக்கு மத்தியில படிப்புல முன்னேறனும்னு ஒரு லட்சியம் இருந்தது அம்மாவுக்கு மட்டும் தான். ஹாஸ்டல்ல தங்கி படிச்சி, க்ரூப் 4 பரீட்சை எழுதியிருக்காங்க. ஒரு ஜூனியர் அக்கவுண்டண்டா தன் பணி வாழ்க்கையை தொங்குனாங்க, ஆனா, ஒரு மாவட்ட ஆட்சியரோட ஆளுமையும், தலைமைத்துவ திறன்களும் அவரிடம் இருக்கும். இன்னொன்னு, எந்த தராதரமும் பார்க்காம எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகுறது. தான் படிச்சு இந்த நிலைக்கு வந்துட்டோம் என்றெல்லாம் நினைக்கவே மாட்டாங்க. இன்னைக்கு அந்த குணம் என்கிட்டயும் இருக்கு.

 நான் ஊருக்கு போனா, அப்படியே பைக் எடுத்துட்டு போயிட்டு, யார் வீட்லயாவது சுட்ட கருவாடு கொடுத்தாக் கூட வாங்கி சாப்டுட்டு வருவேன். என் அம்மாவோட ‘ஆண் பிரதி’ தான் நான்.”
அலெக்ஸ் பால் மேனன் மேனன்
அலெக்ஸ் பால் மேனன் மேனன்

பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுத்தாளர்)

“உச்சக்கட்ட பொறுமை. எனக்கு அம்மாவிடம் பிடிச்சது இந்த உச்சக்கட்ட பொறுமை தான். அம்மா இந்த விஷயத்துக்குத் தான் கோபப் படுவார், இதற்கு உணர்ச்சிவசப்படுவார் என்றெல்லாம் யூகிக்கவே முடியாது. சகிப்புத் தன்மையும், பொறுமையும் அதிகமாகவே இருக்கும்". 

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்
"அம்மா தீவிரமான வாசிப்புப் பழக்கம் உடையவர். நான் பிறந்த போது வெளியான குமுதத்தில் பிரசுரம் செய்யப்பட்ட ஒரு சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘பிரபாகர்’. அப்படி தான் எனக்கு பெயர் வந்தது. எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்ததும் அம்மாவால் தான். என்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கப்படுத்தி, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற ஆதரவாய் இருந்ததும் அம்மா தான்.”

அம்மா இருக்கும் இடம் தானே வீடாய் படுகிறது? வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்துக் கொண்டு, அடிக்கடி அம்மாவை பார்க்க முடியாமல், சிறு சிறு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள அம்மாவிற்கு போன் அடித்துக் கொண்டு, அம்மாவின் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்கும் ஒவ்வொருவரின் சார்பாகவும் நான் சொல்கிறேன்,

லவ் யூ மா ! 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'இக்கட்டான சூழலிலும் பொறுப்பை தட்டிக்கழிக்காது எதிர்கொள்ளும் துணிவை என் தாயிடம் கற்றேன்'- கவின்கேர் சிகே.ரங்கநாதன்

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha