40 வயதில் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி டெல்லி ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநர் ஆன முதல் பெண்!

0

டெல்லியைச் சேர்ந்த 40 வயதான ஷனூ பேகம் மோசமான சூழ்நிலையிலும் இடிந்து போய் மனம் தளர்ந்துவிடவில்லை. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இவருக்கு மூன்று குழந்தைகள். மன உறுதியும் துணிச்சலும் நிறைந்த இவரது வாழ்க்கை பலருக்கு உந்துதளிக்கிறது. இவரது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகள் பிஏ படித்துக்கொண்டிருக்கிறார். மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஷனூ சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துக்களை எல்லாம் தகர்த்தெறிந்துள்ளார்.

ஷனூவை அவரது கணவர் தினமும் அடித்துத் துன்புறுத்துவார். ஒரு நாள் அவரது வன்முறை மிகவும் மோசமாகி மாவரைக்கும் கல்லைக் கொண்டு ஷனூவைத் தாக்கினார். ஷனூ அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை அறைந்தார். பிறகு அதிக ரத்தப்போக்கினால் மயங்கி விழுந்துவிட்டார். அவரை யார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள் என்பதுகூட ஷனூவிற்கு நினைவில் இல்லை. எப்படியோ உயிர் பிழைத்தார். இந்தச் சம்பவம் நடந்து முடிந்த மூன்றாண்டுகளில் அவரது கணவர் உயிரிழந்தார்.

அப்போதிருந்து அவரது வாழ்க்கையே மாறிப்போனது. தனது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களைக் கருத்தில் கொண்டே ஷனூ கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் என சிஎன்பிசி பதிவு ஒன்று தெரிவிக்கிறது. ஆசாத் ஃபவுண்டேஷன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆறு மாத கால ஓட்டுநர் பயிற்சி வகுப்பு எடுத்தது. ஷனூ அவரது மகளின் வலியுறுத்தலின் பேரில் இந்த ப்ரோக்ராமிற்கு விண்ணப்பித்ததாக Mashable தெரிவிக்கிறது.

மதிப்பெண் சான்றிதழ் இல்லாத காரணத்தால் ஷனூ தனது 40-வது வயதில் மீண்டும் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதியது குறித்து நினைவுகூர்ந்தார். ஷனூ இரவெல்லாம் கண்விழித்து இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தார். அதன் பிறகு வணிக உரிமத்திற்கு விண்ணப்பித்தார். 

பின்னர் டெல்லியில் பெண்களை மட்டுமே கொண்டு இயங்கி வந்த கார் சேவையளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான சக்காவில் இணைந்தார். தற்போது டெல்லியில் ஊபர் நிறுவனத்தின் ஒரே பெண் ஓட்டுநர் ஷனூ மட்டுமே.

சாலையில் கார் ஓட்டிச் செல்லும்போது பெரும்பாலான ஆண் ஓட்டுநர்கள் பெண் ஓட்டுநர்களைக் காட்டிலும் தங்களை உயர்வானவர்களாக காட்டிக்கொள்ள விரைவாக முந்திச் செல்வார்கள் என பெண் ஓட்டுநராக இருப்பதால் சந்திக்க நேரும் சிக்கல்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில் தெரிவித்தார். பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாததே இந்த அமைப்பில் காணப்படும் மிகப்பெரிய குறையாகும் என்கிறார்.

”சற்றும் மனம் தளராமல் மிகுந்த ஆர்வத்துடன் உங்களது லட்சியத்தை நோக்கிச் செல்லுங்கள். பெண்கள் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தவரகள் அல்ல,” என்பதே மற்ற பெண்களுக்கு அவர் சொல்ல விரும்பும் கருத்தாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL