நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் சிக்கல்களை வேடிக்கையாக அணுகும் பலகை விளையாட்டு!

பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமண வரன் தேடும் படலத்தை ஒரு பெண் அணுகும் போது சந்திக்கும் பிரச்சனைகளை விளையாட்டாக சுட்டிக்காட்டும் கேம்!

0

ஒய்வு நேரத்திலும், உடல் புத்துணர்ச்சி பெறவும் நாம் ஓர் சில விளையாட்டை விளையாடுகிறோம். அந்த விளையாட்டு அறிவு சார்ந்ததாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதன் பயன் இரட்டிப்பு ஆகும். இது போன்று நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சர்ச்சைக்குரிய மற்றும் முக்கிய கலாச்சார செயல்பாடுகளை பலகை விளையாட்டாக உருவாகுகிறார் நியூயார்க்கைச் சேர்ந்த அனுபவமிக்க வடிவமைப்பாளர் நஷ்ரா பலகம்வாலா.

நஷ்ரா பலகம்வாலா - வடிவமைப்பாளர்
நஷ்ரா பலகம்வாலா - வடிவமைப்பாளர்

பாகிஸ்தானில் இருந்து வந்து நியூயார்க்கில் பணிபுரியும் நஷ்ரா ரோட், ஐலேண்ட் ஸ்கூல் ஆப் டிசைனில் வடிவைப்பு பயின்றுள்ளார். மேலும் ஹாஸ்ப்ரோ இன்க் நிறுவனத்தில் பணிபுரிந்துளார்.

இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மணப் பெண்ணின் சம்மந்தம் இல்லாமல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் உணர்ச்சி ரீதியாக அச்சுறுத்தப்பட்டும், கட்டாய திருமணமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட நஷ்ரா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ’Arranged’  என்கிற பலகை விளையாட்டை வடிவமைத்துள்ளார்.

“இதை உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது என் சொந்த வாழ்க்கை மற்றும் என் நெருங்கிய நண்பர்களின் கட்டாய திருமணம். இதை பற்றி பேசி மக்களுக்கு புரியவைப்பதை விட விளையாட்டின் மூலம் சொல்வது மிகவும் சுலபமானது,” என்கிறார் நஷ்ரா.
Arranged விளையாட்டு
Arranged விளையாட்டு

இது ஒரு விளையாட்டாய் மற்றும் பார்த்து விளையாடினால் கூட விளையாட்டின் அடுத்த அடுத்த கட்டம் போகும்போது, இதை பற்றிய கலந்துரையாடல் நிச்சியம் ஏற்படும் என இந்த விளையாட்டின் ஆழத்தை கூறுகிறார் நஷ்ரா.

“என் அக்காவின் திருமணத்தின் போதே என் திருமணத்திற்கான பளு என் மேல் சுமத்தப்பட்டது. அப்பொழுது எனக்கு வயசு 18, அந்த வயதில் கல்யான பந்தத்திற்கு நான் தயாராக இல்லை. வருடம் முழுவதும் எனக்கேற்ற வரன்களை சந்தித்தேன், அதேபோல் அதை தவிர்க்கவும் புது யோசனைகளை கையாண்டேன்,” என்கிறார்.

இந்த விளையாட்டில் ரிஷிதா ஆன்டி என்கிற தரகர் இளம்பெண்களை விரட்டி தான் பார்க்கும் மணமகனுக்கு மணமுடிக்க செய்வார், பெண்கள் அதை தவிர்க்க புது யுத்திகளை கையாளுவர். மேல் படிப்பு படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும் போன்ற காரணங்களை காட்டி தவிர்க்கலாம்.

இதுமட்டும் அல்லாமல், இந்த விளையாட்டு இன்னும் சில சுமைகளை கோடிட்டு காட்டுகிறது. அதாவது திருமணத்திற்காக பெண்கள் மீது சுமத்தப்படும் வரதட்சணை சுமை, காதலை விடும் நெருக்கடி, வெள்ளை சருமத்திற்காக பயன்படுத்தபடும் கட்டாய அழகு பொருள்கள் போன்ற பல இதில் உள்ளது.

விளையாட்டின் ஒரு தருணத்தில் தரகர் ரிஷிதா அனைத்து பெண்களும் விரும்பும் தங்கமான சிறந்த மணமகனை அறிமுகப்படுத்துவாள். ஒரு புள்ளியில் விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டு பெண்கள் அனைவரும் ரிஷிதா ஆன்டியை விரட்டுவர். பெண்கள் தங்களுக்கு பிடித்த மணமகனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையும், ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இது தற்பொழுது பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலின் பிரதிபலிப்பாகும் என்கிறார் நஷ்ரா.

அனைத்து பெண்களும் தங்களுக்கு பிடித்து மணமகனையோ அல்லது தரகர் தேர்ந்தெடுத்த மணமகனை மணமுடித்த பின் இந்த விளையாட்டு நிறைவுப்பெறும்.

இந்த விளையாட்டின் தயாரிப்புகாக நஷ்ரா Kickstarter மூலம் நிதி திரட்டி வருகிறார். பல மாதங்களாக இந்த விளையாட்டிற்கான சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தயாரிப்புக்கு முழுமையாக தயாராகி உள்ளது. அடுத்த வாரம் இந்த பலகை விளையாட்டின் அச்சிடுதல் தொடங்கும், டிசம்பர் முதல் பகுதியில் இது சந்தைக்கு வந்துவிடம்.

இந்த Arranged விளையாட்டு மிக முக்கியமான தலைப்புகளை மிக எளிய வழியில் பேச வழிவகுக்கும். இது அனைவருக்குமான விளையாட்டு, பெண்கள் தங்கள் பெற்றோர்களுடன் விளையாடும்போது தங்கள் கருத்தை பேசுவதற்கு வழி செய்யும். ஆண்கள் விளையாடும் பொழுது “எங்களை திருமணம் செய்ய நீங்கள் இதை எல்லாம் கடக்க வேண்டுமா” என்று கேட்கின்றனர். இதையே இந்த விளையாட்டின் கருவாய் பார்க்கிறார் நஷ்ரா.


Related Stories

Stories by YS TEAM TAMIL