’இந்தியாவில் வெற்றி அடையும் எங்கள் தயாரிப்புகள் உலகளவில் செயல்பட உகந்ததாக இருக்கிறது ’- சுந்தர் பிச்சை  

0

கூகுளின் சிஇஒ சுந்தர்பிச்சையின் இந்திய வருகை இந்தியா உட்பட உலகளவில் அனைவருக்கும் முக்கிய நிகழ்வாக விளங்கும் என்று கருதப்பட்டது. இந்தியாவில் ஏற்கெனவே 300 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளது. இந்த எண்ணிக்கையை 2020-ல் 520 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது கூகுள். கூகுளின் வளர்ச்சிக்குக் காரணம் எப்போதும் பெரிய நோக்கத்துடன் செயல்படுவதுதான் என்கிறார் சுந்தர் பிச்சை.

கூகுளின் டிஜிட்டல் அன்லாக்ட் நிகழ்விற்காக சுந்தர் பிச்சையின் புதுடெல்லி வருகையினால் எவையெல்லாம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் இந்தியாவை தொடர்புப்படுத்தி கூகுளின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்றும் பலரிடையே குறிப்பாக இந்தியாவின் சிறிய நகரங்களில் வாழ்பவர்களிடையே பெரும் சலசலப்புகள் இருந்தது. தன் உரையை தொடங்கிய பிச்சை, கடந்த கால நிகழ்வுகளை அலசினார்.

”நான் சென்னையில் ஒரு மாணவனாக படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தகவல்களை தெரிந்துகொள்வது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவந்தது. ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்கு கிடைக்கும் அதே தகவல்களை கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு மாணவனால் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியும்.”

பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக கூகுள் துவங்கப்பட்ட போது உலகில் ஒவ்வொருவருக்கும் தகவல்கள் சென்றடையவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. தகவல்கள் மற்றும் அணுகுதல் ஆகியவை சக்திவாய்ந்தது. இந்த சக்தியை இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அளிக்க நினைக்கிறது கூகுள் நிறுவனம். சிறு வணிகங்களே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று நம்புகிறது கூகுள். மெட்ரோக்களில் வசிப்பவர்களுக்கு இணையம் மற்றும் ஸ்மார்ட்ஃபோனின் சக்தியைக் குறித்து விவரிக்கத் தேவையில்லை என்றாலும் இந்தியாவின் பெரும் பகுதியினர் இதன் சக்தியை புரிந்துகொள்ளவில்லை என்று நம்புவதாக தெரிவிக்கிறார் பிச்சை. அவர் கூறுகையில்,

”ஒவ்வொரு சிறு வணிகத்தை நடத்துபவரும் இணையம் மற்றும் தகவல்களின் சக்தியை பயன்படுத்திக்கொண்டால், பொருளாதாரம் செழிக்கும். அப்படிப்பட்ட வணிகங்களுக்கு இந்த சக்தியை அளிப்பதையே கூகுள் இலக்காக கொண்டுள்ளது.”

டிஜிட்டல் அன்லாக்ட் திட்டத்தின் மூலம் சிறு வணிகங்களுக்கு கீழ்கண்டவாறு உதவ திட்டமிட்டு வருகிறது:

1. டிஜிட்டல் திறனில் பயிற்சி, FICCI மற்றும் ISB சான்றிதழ் பெற்ற அமர்வுகள். இதனால் வணிகர்களுக்கு மொபைல் தளங்கள், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் இ-காமர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்கிற தகவல்கள் தெளிவுபடுத்தப்படும்.

2. வலைதளங்களை மற்றும் மொபைல் தளங்களை உருவாக்க உதவும்

3. ஆர்டர் படிவங்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கட்டணம் செலுத்துவதும் முறை போன்றவற்றை ஆன்லைனில் செயல்படுத்தும் முறைகள்.

இணைப்பு மற்றும் நெட்வொர்க் பிரச்சனைகளால் முதலில் யூட்யூப்கோ-வை அறிமுகப்படுத்தி வீடியோக்களை குறைந்த நெட்வொர்க் வேகத்தில் பார்க்க உதவுகிறது. சிறு வணிகங்கள் தங்களது வலைதளத்தையும் மொபைல் தளத்தையும் குறைந்த இணைப்போ அல்லது இணைப்புகள் இல்லாமலோ செயல்படுத்த கூகுள் உதவும்.

1.25 பில்லியம் மக்கள்தொகையுள்ள நாட்டையே கூகுள் தேர்ந்தெடுக்கிறது. ஏனெனில் இதில் 300 மில்லியன் மக்கள்தான் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துகின்றனர்.

”எங்களது தயாரிப்புகளுக்கு இந்தியா வடிவம் கொடுக்கும். இந்தியாவில் ஏதாவது செயல்படுத்தப்பட்டால் அது நிச்சயம் உலகளவில் செயல்படுதுவதற்கு உகந்ததாக இருக்கும்.”

இதற்காக சிறு நிறுவனங்களையே அணுகுகிறது. “இணையம் என்பது எல்லோருக்குமானது. இந்தியாவின் பெரும்பகுதியினர் இந்த சக்தியை பயன்படுத்தாதது வெட்கப்படத்தக்கதாகும்.” என்கிறார். கடந்த சில மாதங்களாக பரபரப்பான 110 இரயில் நிலையங்களில் ஹை-ஸ்பீடு வைஃபை வழங்கும் கூகுள் ஸ்டேஷன்ளை உருவாக்குவம் பணியில் கூகுள் இயங்கிவருகிறது. இந்தியாவிற்கு அவசியம் தேவைப்படும் ஒரு வலிமையான டிஜிட்டல் சேவையை அளிப்பதுதான் கூகுளின் நோக்கம்.

பின்னர் தான் பயின்ற ஐஐடி கரக்பூருக்கு சென்ற சுந்தர் பிச்சை அங்கு குழுமியிருந்த 3000 மாணவர்களுக்கு முன்பு இன்போஎட்ஜ் சிஇஒ ராஜன் ஆனந்தன் கேள்விகள் கேட்க பதில்களை அளித்தார். சுந்தர் பிச்சை தன் வருங்காலத்தை குறித்து பேசத் தொடங்காமல் தனது கடந்த காலத்தை நினைவுக்கூர்ந்து பேசத் தொடங்கினார். 

ஐஐடி கரக்பூரில் சுந்தர் பிச்சை
ஐஐடி கரக்பூரில் சுந்தர் பிச்சை
”23 வருடங்களுக்கு முன் நான் ஐஐடி கரக்பூரை விட்டு சென்றபோது வருத்தமாக இருந்தது. இன்று இங்கு வந்ததும் என்னுடைய அறையைப் பார்த்தேன். அப்படியே மாறாமல் இருக்கிறது” என்றார்.

ஆனால் இன்று ஒரு சில விஷயங்கள் மாறியுள்ளதாக குறிப்பிட்டார். அதாவது மாணவர்கள் ஐஐடிக்காக எட்டாம் வகுப்பிலிருந்தே தயாராகிறார்கள். உலகளவில் இந்திய கல்வி முறை சிறந்ததாக இருந்தாலும் பள்ளி அல்லது கல்லூரி பாடப்படிப்பைச் சார்ந்தே கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

10 வருட திட்டம் குறித்து கேட்கையில்,

”10 வருடங்கள் என்பது நீண்ட காலமாகும். 1980-ல் இணையம் கிடையாது. அதற்கடுத்த 10 வருடங்களில் ஸ்மார்ட்ஃபோன்கள் கிடையாது. அதனால் அடுத்த 10 வருடங்களில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் எப்போதும் கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் தயாரிப்புகளை உருவாக்கவே விரும்புகிறேன்.”

கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதைவிட பெரிய நோக்கம் என்னவாக இருக்கும்? மேலும், ”பல விஷங்களில் கவனம் செலுத்துங்கள். அதிகப்படியான உயரத்தை எட்டுவதையே நோக்கமாக கொள்ளுங்கள். திட்டமிட்ட நோக்கத்தை அடையமுடியாமல் தோல்வியுற்றாலும் அதை நோக்கிச் சென்ற பயணத்தில் நிச்சயம் எதாவது அடைந்திருப்பீர்கள்,” என்றார்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகையில்,

”வாழ்க்கையில், பாதையை நிர்ணயித்து அதை பின்பற்றி அதை நோக்கியே பயணிப்பதற்காக அதிகமான அழுத்தத்தை உணர்கிறோம். ஆனால் வெற்றி என்பது வேறுபட்ட பல புதிய செயல்களை புதுமையாக ரிஸ்க் எடுத்து செய்வதன் மூலமாகவே அடையமுடியும். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. பின்னடைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்குள் இருக்கும் உந்துசக்திதான் முக்கியம்.”

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீங்கள் சிறக்கலாம். ஒரு பிரபலமான நிறுவனத்தில் நுழைவது வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆனால் உங்கள் உந்துசக்தி அதை அளிக்கவல்லது. பொறியியலில் மட்டுமல்ல அனைத்திலும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் பல உள்ளன. நீங்கள் செய்வதை விரும்பிச் செய்தாலே போதும்” என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார் சுந்தர் பிச்சை.

ஆங்கில் கட்டுரையாளர்: சிந்து கஷ்யப்