பிட்காயின் விலை உயர்வுக்குக் காரணமாக இருந்த 6 யூகங்கள்!

1

திரும்பிய இடமெல்லாம் பிட்காயின் பற்றித்தான் பேச்சு... அதன் மதிப்பு இம்மாதம் கண்ட உயர்வே இதைப்பற்றி மக்களிடையே பேசவைத்தது. தற்போது பல மடங்கிற்கு பிட்காயின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றாலும், க்ரிப்டோகரன்சி அதாவது எண்ம நாணயம் பற்றி சில சர்ச்சைகளும், சந்தேகங்களும், யூகங்களும் எழுந்துள்ளது.

பிட்காயினின் விலை $9900 இல் இருந்து $17000 ஆக நவம்பர் 30 முதல் டிசம்பர் 11-க்குள் உயர்ந்தது. அப்போதில் இருந்து எல்லாரும் இதில் முதலீடு செய்ய தவறிவிட்டோமே என்று ஆதங்கப்பட்டோம், சிலர் பின்னாளில் இது என்னாகும் என்ற குழப்பத்துடன் விவாதிக்கின்றனர். 

தற்போது பிட்காயின் பற்றி சந்தையில் நிலவும் சில யூகங்களை பட்டியிலிட்டுள்ளோம். 

பிட்காயின் விலை $1,00,000 விரைவில் தாண்டும்

பிட்காயின் விலை பற்றிய சலசலப்பு இருந்துகொண்டே இருக்கிறது. லெபனீஸ்-அமெரிக்கன் எஸ்ஸேயிஸ்ட் மற்றும் ஹெட்ஜ் பண்ட் மேனேஜர் நாசிம் நிக்கோலஸ் தலேப், பிட்காயினின் விலை சீக்கிரத்தில் 1 லட்சம் டாலரை தொடும் என்கிறார். 

”பிட்காயின் பற்றிய அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஏறியது போல், 1லட்சம் ஆகும் என்பதையும் மறுக்கமுடியாது,” என்று ட்வீட்டினார். 

அமேசான் பிட்காயினை அனுமதிக்கும்

கடந்த மாத செய்திகளின் படி, அமேசான் க்ரிப்டோகரன்சி சம்மந்தமாக மூன்று டொமைன்களை வாங்கியதாக தெரிகிறது. அவை amazonethereum.com, amazoncryptocurrency.com, amazoncryptocurrencies.com. இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இருப்பினும் அமேசானின் பாட்ரிக் காதியர் அக்டோபர் மாதம் குறிப்பிடுகையில், எண்ம நாணயம் பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றார்.

காயிண்டெஸ்க் படி, மேற்குறிப்பிட்ட மூன்று டொமைன்களும் அமேசானின் அமேசான் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக தெரிகிறது. Futurism.com தளத்தின் படி, அமேசான் AmazonBitcoins.com என்ற தளத்தை 2013 முதலே கொண்டுள்ளது என்கிறது. 

கோல்ட்மேன் சாச்ஸ் பிட்காயின் வர்த்தகத்தை நடத்தும்

ஜேபி மார்கனின் சிஇஒ ஜாமி டைமன், முறைப்படுத்தப்படாத பிட்காயினை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்களின் போட்டியாளரான கோல்ட்மேன் சாச்ஸ் அதிலுள்ள வாய்ப்பை சாதகப்படுத்துவது போல் தெரிகிறது. அக்டோபர் மாதம் வால் ஸ்டீர்ட் ஜர்னல் செய்தியின்படி, சாச்ஸ் எண்ம நாணய வர்த்தகத்துக்கான சில டூல்களை தயார் செய்ய உள்ளதாக தகவல் வந்தது. 

கோல்ட்மேன் தங்களின் நாணயப் பிரிவை இந்த பகுதிக்கு பயன்படுத்தி, தங்க மதிப்பு வர்த்தகத்தை போன்று பிட்காயின் முதலீடு வர்த்தகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. 

உள்ளூர் பிட்காயின் பரிமாற்றங்களை நிறுத்தும் சீனா

இது பல நாட்களாக உலாவும் ஒரு செய்தி. செப்டம்பர் மாத செய்திகளின் படி, சீனா உள்ளூரில் உள்ள பிட்காயின் பரிமாற்றங்களை நிறுத்தப்போவதாக தகவல் வெளிவந்தது. சீன பரிமாற்ற நிறுவனங்களான Bitfinex, BTCC மற்றும் OkCoin சர்வதேச சந்தை மதிப்பில் 45 சதவீத அளவு கொண்டிருப்பதாக செய்தி வந்தது. 

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின் படி, ஒருங்கிணைப்பில்லா, முறையில்லா செயல்பாடுகள் காரணமாக இந்த மூடல் இருக்கும் என்று கூறியது. 

பிட்காயினை நாஸ்டாக் வருங்காலத்தில் அனுமதிக்குமா?

CBOE (Chicago Boards Options Exchange) மற்றும் CME (Chicago Mercantile Exchange) பிட்காயின் ப்யூச்சர்ஸ் அறிமுகப்படுத்திய உடன் நாஸ்டாக் இந்த களத்தில் குதித்தது. 

நாஸ்டாக், சர்வதேச சந்தை விலையின்படி 50 பிட்காயின் பரிமாற்ற விலையை அடித்தளமாக கொண்டு விலை நிர்ணயிக்கும் என்றது. CBOE, Bitcoin Futures டிசம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்தது. 

உலகிலுள்ள மொத்த பிட்காயினின் 40 சதவீதத்தை 1000 பேர் மட்டுமே கொண்டிருக்கிறார்கள்

இதுதான் சந்தையில் நிலவும் சூடான பேச்சு. ப்ளூம்பர்க், AQR Capital-ன் ஆரன் ப்ரவுன், உலகில் உள்ள 1000 பேர் மட்டுமே 40% மொத்த பிட்காயின் பங்கை வகிக்கின்றனர் என்றார்.

இந்த கூற்று சரியாக இருந்தால், அந்த மக்கள் மட்டுமே பிட்காயினின் சந்தை விலையை நிர்ணயிக்க வல்லவர்களாக இருப்பார்கள். 

வழக்கறிஞர் கேரி ராஸ், 

பிட்காயின் ஒரு டிஜிட்டல் நாணயம் மட்டுமே அது பாதுகாப்பானது அல்ல என்கிறார். மேலும் இது முறைப்படுத்தாது செய்யப்படும் வர்த்தகம், ஒரு சில குழுக்களால் மட்டுமே கையாளப்படுவதால் விலை எப்படி வேண்டும் என்றாலும் போகும் என்கிறார். 

அரசுகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் இந்த க்ரிப்டோகரன்சியை மெல்ல புரிந்து கொள்ள முயல்கின்றனர். நம் நாட்டின் ஆர்.பி.ஐ-ன் ஆளுனர் குறிப்பிடுகையில், நம் வங்கிகளுக்கு இதுபோன்ற அரசு நிர்ணயிக்காத எண்ம நாணயங்கள் சரியானதல்ல என்றுள்ளார். 

பிட்காயின் காலத்தின் உணர்ச்சிகளால் உருவானது, அதில் சர்ச்சைகள் இருப்பதில் ஆச்சரியங்கள் ஒன்றும் இல்லை.

ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா