அமேசான் இந்தியா: சொந்த கிடங்குகளில் இருந்து மளிகைப் பொருட்கள் விநியோகத்தை துவங்கியது!

4

இந்தியாவில் அமேசான் நிறுவனம் அதன் மளிகை விநியோக செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் உள்ளூரில் ப்ரெஷான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யத்துவங்கியுள்ளது. பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ’அமேசான் நவ்’ Amazon Now வாயிலாக தனது சொந்த கிடங்கிலிருந்தே விநியோகிக்கத் துவங்கியுள்ளது.

அமேசான் நவ் இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. புது விளைச்சல்கள் உட்பட மளிகைப் பொருட்களை ஹைப்பர்சிட்டி, பிக்பஜார் ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்குள் விநியோகம் செய்து வந்தது.  அமேசான்  விநியோக பணிகளை மட்டுமே கையாண்டு வந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியை நேரடியாக அறிந்த நபர் ஒருவர் குறிப்பிடுகையில்,

நான்கு நகரங்களிலுள்ள அமேசான் கிடங்குகளிலிருந்து பொருட்களை விநியோகம் செய்யும் வசதியை இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற பகுதிகளில் இன்னும் செயல்படத் துவங்கவில்லை.

இந்தக் கிடங்குகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக அணுகமுடியாது. எனவே இவை வட்டார மொழியில் ‘டார்க் ஸ்டோர்ஸ்’ எனப்படுகிறது. புத்தம்புது காய்கறிகள், பழங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள், சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றை நவ்ஸ்டோர் என்று அழைக்கப்படும் இந்தக் கிடங்குகளிலிருந்து விநியோகம் செய்கிறது.

இந்த முயற்சி ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது?

அமேசான் கடந்த இரண்டாண்டுகளாகவே இந்தியாவில் மளிகைப் பொருட்கள் பிரிவில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வணிக முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அமேசான் நவ், பேண்ட்ரி ஆகிய இரண்டும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. நவ்ஸ்டோர் ஏற்கெனவே குறிப்பிட்டது போல உள்ளூரில் பொருட்களை விநியோகம் செய்கிறது. பேண்ட்ரியில் புத்தம்புது விளைச்சல்கள் கிடைக்காது. ஆனால் உணவுப் பொருட்கள் உட்பட பேக்கேஜ் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களை பேண்ட்ரியில் வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பொருட்கள் ஒரு பெட்டியில் பேக் செய்யப்பட்டு மறுநாள் விநியோகிக்கப்படும். 30-க்கும் அதிகமான நகரங்களில் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது. அடுத்த நாளே விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய பேண்ட்ரிக்கான பொருட்கள் பிராந்தியம் வாரியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

மளிகைப் பொருட்கள் பிரிவு நுகர்வோரை பெரிதும் கவர்ந்து வருகிறது. இதனால் மின்னணு வர்த்தக நிறுவங்களுக்கு இந்தப் பிரிவு அடுத்தகட்ட இலக்காக மாறக்கூடும். பிக்பாஸ்கெட், க்ரோஃபர்ஸ் ஆகிய இரு நிறுவனமும் இந்தியாவில் மின்னணு வாயிலாக மளிகை பிரிவில் செயல்படும் முன்னணி நிறுவனங்களாகும். ஆனால் மொபைல் ஃபோன், ஃபேஷன் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆர்டர் அளவு மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டு இறுதியில் பிக்பாஸ்கெட்டின் சராசரி தினசரி ஆர்டர் அளவு சுமார் 50,000 ஆகவும் க்ரோஃபர்ஸ் ஆர்டர் அளவு சுமார் 25,000 ஆகவும் இருந்தது.

இந்தப் பிரிவில் அமேசானின் செயல்பாடுகள் ஆரம்பகட்டமாக இருப்பினும் அதன் நிதி நிலையை கருத்தில் கொண்டு ஆராய்கையில் அமேசான் சந்தையின் மிகப்பெரிய பகுதியை கைப்பற்றக்கூடும்.

ஆர்டர் அளவைப் பொருத்தவரை அமேசான் ஏற்கெனவே க்ரோஃபர்ஸ் அளவை எட்டிவிட்டதாக யுவர் ஸ்டோரியுடன் உரையாடிய இரண்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஃப்ளிப்கார்ட் சமீபத்தில் 'சூப்பர்மார்ட்' என்கிற அதன் சொந்த மளிகைப் பிரிவை அறிமுகப்படுத்தியது. ஆனால் பால் பொருட்கள், முட்டை ஆகியவற்றைத் தவிர புத்தம்புது விளைச்சல் வகைகளை விநியோகிப்பதில்லை. அலிபாபா, பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் பிக்பாஸ்கெட் நிறுவனத்திற்கு முதலீடு செய்ய மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தப் பிரிவில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவப்போகிறது என்பது தெளிவாகிறது.

அமேசான் நான்கு நகரங்களில் தனது டார்க் ஸ்டோர்ஸ் மூலமாக மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வதை இந்த வகையில்தான் நாம் பார்க்கவேண்டும். அமேசான் தற்போது விநியோக மாதிரியில் மட்டும் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனம் மளிகைப் பொருட்களை அதிவிரைவாக விநியோகிக்க நகரங்களுக்குள் சிறிய பூர்த்திசெய்யும் மையங்களை அமைத்துள்ளது என்று அமேசானுடன் பணிபுரிந்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார். இந்த மையங்கள் விரைவாக விற்பனையாகும் பிற பொருட்களையும் சில மணி நேரங்களில் விநியோகம் செய்துவிடும். இந்த மையங்கள் குறிப்பாக பிரீமியம் சந்தாதாரர்களுக்கு அதிவிரைவாக விநியோகம் செய்யப்படும் ‘ப்ரைம்’ திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

க்ளௌட்டெயில் நிறுவனத்துடன் இணைப்பு

க்ளௌட்டெயில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நவ்ஸ்டோர் செயல்படுத்தப்படுவதாக அமேசான் நவ் செயலி குறிப்பிடுகிறது. அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயணமூர்த்தியின் குடும்ப நிறுவனமான கட்டமரான் வென்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்தான் க்ளௌட்டெயில். க்ளௌட்டெயில் நிறுவனம் அமேசானில் மிகப்பெரிய விற்பனையாளர். ஒரு காலகட்டத்தில் அமேசான் இந்தியாவின் தளத்தின் மொத்த விற்பனையில் 70 சதவீதம் க்ளௌட்டெயில் பங்களித்ததுள்ளது. எனினும் ஒரு தளத்தின் விற்பனையில் ஒரே ஒரு விற்பனையாளர் 25 சதவீதத்திற்கு மேல் பங்களிக்கக்கூடாது என 2016-ம் ஆண்டு அரசாங்கத்தால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு ப்ராண்டுகளுக்கான மின்னணு சில்லறை வர்த்தகம் அனுமதிக்கப்படாததால் தங்களது மொத்த மற்றும் சில்லறை வர்த்தக செயல்பாடுகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் சிக்கலான வணிக கட்டமைப்புகளை உருவாக்கியது. எளிமையான வரிகளில் குறிப்பிடுவதானால் சந்தைப்பகுதிகள் நேரடியாக ப்ராண்டுகளை கையாளும். ஆனால் பொருட்கள் ’குறிப்பிட்ட’ விற்பனையாளர் வாயிலாகவே மட்டுமே விற்பனை செய்யப்படும். அதாவது பொருட்கள் மற்றும் விலைகளை அந்தத் தளங்களே நிர்ணயிக்கும்.

இந்த காரணத்திற்காகவே 25 சதவீத பங்களிப்பு என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தளத்தின் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே க்ளௌட்டெயில் பங்களித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. அமேசான் நிறுவனத்திற்கு க்ளௌட்டெயில் போன்று ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு WS ரீடெயில் விளங்குகிறது.

க்ளௌட்டெயில் பங்களிக்கும் சதவீதம் குறைந்தாலும் நவ்ஸ்டோர் போன்ற புதிய முயற்சிகளுக்கு கூட்டு நிறுவன மாதிரியையே அமேசான் தேர்வு செய்யும் என்பது தெளிவாகிறது. ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அமேசன் நவ் வாயிலாக இரண்டு மணி நேரத்திற்குள் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்கிறது க்ளௌட்டெயில் உடனான இணைப்பு.

குறைந்தபட்சம் நான்கு நகரங்களிலுள்ள ’ப்ரைம்’ உறுப்பினர் மட்டுமாவது இரண்டு மணி நேரங்களில் பொருட்களை பெற இயலுமா? ஆம். ஏனெனில் அமெரிக்காவில் அமேசான் நவ் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அமேசான் இந்தியாவின் தலைவர் டிசம்பர் மாதத்தில் யுவர் ஸ்டோரி உடனான ஒரு நேர்காணலில் இது குறித்து குறிப்பிடுகையில்,

அமேசான் நவ் ப்ரைம் உறுப்பினர்களின் வசதிக்கானது. ப்ரைம் உறுப்பினர்கள் தொகுப்பை நாங்கள் உருவாக்குகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்திய உடனேயே அவர்கள் இந்த சேவையை ஏற்றுக்கொள்வார்கள். எனவே நாங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நான்கு நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ளோம்.

அமேசான் இந்த சேவையை மளிகைப் பொருட்களுக்கான சில்லறை வணிகத்தில் இணைக்குமா என்பது தெளிவாகவில்லை. அமேசான் இந்த வணிகத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான (எஃப்டிஐ) அனுமதி பெற்றுள்ளது. 2016-ம் ஆண்டு அரசாங்கம் உணவுப் பொருட்கள் சார்ந்த சில்லறை வர்த்தகத்திற்கு 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இந்த அனுமதியின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களை (wholly-owned subsidiaries) அமைத்து உணவு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.

ஆங்கில கட்டுரையாளர் : ராதிகா பி நாயர்