சினிமாவை ஆட்சி செய்த ஆச்சி! 

தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு... 'ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்ற மனோரமா மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.

0

நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர்.

கோபிசாந்தா என்னும் அந்தச் சிறுமியின் தந்தை ராஜமன்னார்குடியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மிகுந்த செல்வச்செழிப்புமிக்க ரோடு கான்ட்ராக்டர். பிறக்கும்போதே `பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட வளம்கொழிக்கும் குடும்பத்தில் 1943-ம் ஆண்டு, மே 26-ம் தேதி பிறந்த மாணிக்கம்தான் கோபிசாந்தா. ஆனால், என்று கோபிசாந்தாவின் அம்மா, தனது தங்கையை இரண்டாம் தாரமாக தன்னுடைய கணவருக்குத் திருமணம் செய்துவைத்தாரோ, அந்தத் தருணம் அவர்களது வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டது. 


பட உதவி: The Hindu
பட உதவி: The Hindu
சொந்த அக்காவையும் அக்கா பெற்ற மகளையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார் அந்தச் சித்தி. அப்பாவும் அதற்குத் துணை. ஒருகட்டத்தில் துன்பம் பொறுக்க முடியாத தாயார், வீட்டிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்ய முயன்றார். அதிலிருந்து மீண்டவர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடைக்கலம் தேடி சென்ற இடம் காரைக்குடிக்கு அருகில் அமைந்துள்ள பள்ளத்தூர். அந்த ஊர்தான் அவர்களுக்கு வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தது. கோபிசந்தாவுக்கு சினிமா உலகில், ஆச்சி' என்னும் அடைமொழியையும் கொடுத்தது. ஊசிமுள்ளாகக் குத்திய வலிகளைத் துடைத்தெறிந்துவிட்டு, பார்க்கும் ஒவ்வொருவரையும் சிரிக்கவைத்து தமிழ் சினிமாவின் சகாப்தமாக நிலைத்துவிட்ட கோபிசந்தாவுக்கு, வெள்ளித்திரை கொடுத்த பெயர் ‘ஆச்சி’ மனோரமா. 

பள்ளத்தூரில் வாழ்க்கையைத் தொடங்கிய மனோரமாவின் அம்மா, சிறிய பலகாரக் கடையை நடத்தி, இருவரது ஜீவனத்தையும் நடத்திவந்தார். செல்வவளத்தைப் பறித்துக்கொண்டாலும், கடவுள் மனோரமாவுக்கு அறிவுவளத்தையும் குரல் வளத்தையும் அள்ளிக் கொடுத்திருந்தார். அந்தக் குரல்வளம், 12 வயதிலேயே மேடை நாடக வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அதே மேடையில், 'மனோரமா' என்னும் பெயரும் அவருக்குக் கிடைத்தது. தெளிவான வசன உச்சரிப்பு, கேட்போரை ஈர்க்கும் குரல்வளம், சிறந்த நடிப்பு, பாட்டுத்திறன் எல்லாமே மனோரமாவை உச்சத்தில் கொண்டுவைத்தன.

'யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம். 'அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம். நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு 'மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய 'வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். 


ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கருணாநிதியுடன் இணைந்து மேடை நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா., என்.டி.ஆர் ஆகியோருடன் திரைப்படங்களில் சரிக்குச் சமமாக நடித்தார் மனோரமா. 5,000-க்கும் மேற்பட்ட நாடக மேடைகள், 1,200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்... மனோரமாவின் நடிப்புத் திறமைக்குக் கட்டியம் சொல்கின்றன இந்த எண்ணிக்கை.

நாடகங்களில் ஜொலித்துக்கொண்டிருந்த மனோரமாவை, திரைத் துறையில் கால் பதிக்கவைத்தவர் கவியரசு கண்ணதாசன். 1958-ம் ஆண்டு தான் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் மனோரமாவை அறிமுகப்படுத்தினார் கண்ணதாசன். 1963-ல் `கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் நாயகியானார். ஆனால், மனோரமா என்னும் நகைச்சுவை அரசியின் வாழ்க்கையில் மைல்கல் இன்றளவும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம்தான். 

முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.


சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், சோ, நாகேஷ் என எத்தனை ஜாம்பவான்கள் படத்தில் இருந்தாலும், அத்தனை பேருடைய நடிப்பையும் தாண்டி மனோரமாவின் நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றேதீரும். `வா வாத்தியாரே வூட்டாண்டே...' என்று சென்னைத் தமிழில் பாடும் மனோரமாவால், அப்படியே மாற்றி “ஏன்னா... வாங்கிண்டுதான் வாங்கோளேன்” என அய்யராத்து பாஷையையும் வெளுத்துக்கட்ட முடியும். காலம் அவரை சகலகலா வித்தகியாக மாற்றியிருந்தது. 

ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் சோ, இவரை 'பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார். மனோரமா கடைசியாக சிவாஜியை சந்தித்த போது, அவர் தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது'' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா நெகிழ்ந்தார். 'பெண் நடிகர் திலகம்' என்று மனோரமாவுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டினார்.

'நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று. 

கதாநாயகி, குணச்சித்திர நடிகை, அம்மா, பாட்டி என மூன்று தலைமுறைகளுக்கும் மேற்பட்ட நடிகர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. `கம்முனு கெட' இன்றும் ஆச்சி ரசிகர்களின் டிரேட் மார்க் டயலாக். கடினமான பூர்விக வாழ்க்கை, கசந்துபோன குடும்ப வாழ்க்கை இரண்டையுமே என்றும் அவர் தனது நடிப்பில் காட்டியதில்லை என்பதுதான் மனோரமாவின் ப்ளஸ் பாய்ன்ட். தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதை சரியாகப் புரிந்துவைத்திருந்த ஆச்சியின் மனமுதிர்ச்சி, நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம்.

“ஆண்களின் அதிகார உலகம்” என்று வர்ணனை செய்யப்படும் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக, அதுவும் நகைச்சுவை நடிகையாக அரை நூற்றாண்டு காலம் அரியணையை அலங்கரித்திருந்தார் மனோரமா. பத்ம ஸ்ரீ, கின்னஸ் சாதனை, கலைமாமணி, மக்கள் கலை அரசி... இப்படி எத்தனை எத்தனையோ விருதுகள், மனோரமாவின் சினிமா சிம்மாசனத்துக்கு அழகு சேர்த்தன.

மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

“கதாநாயகிக்கு சினிமா ஃபீல்ட் ரெண்டு, மூணு வருஷம்தான். காமெடி நடிகையானால் ஆயுசுக்கும் நீ நடிகைதான்” மனோரமாவை வெள்ளித்திரையில் மின்னவைத்த கண்ணதாசன் சொல்லிய வார்த்தைகள் இவை. இதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு ஒருமுறை மனோரமாவே நெகிழ்ந்திருக்கிறார். இன்பம் துன்பம் இரண்டையும் தராசு தட்டில் சரியாகப் பங்கிடத் தெரிந்த மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது மிகப் பொருத்தம். அரை நூற்றாண்டு சாதனை போதும் என்பதாலோ என்னவோ, அந்த அதிசய மனுஷி நம்மிடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு விடை பெற்றுக்கொண்டார்.


1989ம் ஆண்டு 'புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, 'சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு   வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.

என்றேனும் உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் எழுந்தாலோ மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். இளமையில் வறுமை, பதினைந்து நாள்கள் மட்டுமே நீடித்த மணவாழ்க்கை... என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள், அதையே அவர் படிக்கற்களாக மாற்றிக்கொண்ட திறமை, புடம்போட்ட தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறுவலிக்க சிரிக்கவைத்த நகைச்சுவை உங்களை ஒரே நொடியில் வாழ்க்கைமீது அதீத காதல்கொண்டவர்களாக மாற்றிவிடும். 

அன்பான பாட்டியாக, ஆதரவான அம்மாவாக, தோழியாக, ஆசிரியராக நம்மை சிரிக்கவைத்த  ஆச்சியின் அரசாட்சி என்றும் தொடரும்....

Related Stories

Stories by Jessica