மாற்றுவழியே மகிழ்வானது; அதை நிரூபித்துள்ள சப்னா பாவ்நானி

0

வித்தியாசமாக இருப்பது, ஒரு வித அழகு. அவருடைய குட்டை முடியில் இருந்து டாட்டூஸ்கள் வரை, சப்னா பாவ்நானிக்கு இது மரபு வழி வந்தது அல்ல. திறமையானவர், தீவிர ஆர்வம் உடையவர், பைத்தியக்காரத்தனமானவர் என அவரை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவருடைய கதை அவரைப் போலவே தனி விதமானது, அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.

மும்பையில் வளர்ந்தவர்

சப்னா தன்னுடைய மூன்றாவது கிரேடு வரை ப்ரீச் கேண்டி பள்ளியில் படித்தார், அதன் பின்னர் பாந்த்ராவிற்கு சென்றுவிட்டடார். “பாந்த்ரா உண்மையில் 70களில் வளர்ந்து வந்த ஒரு நல்ல இடம்” என்று அவருக்கு அங்கு பிடித்த விஷயங்களை நினைவு கூர்கிறார் சப்னா, அங்குள்ள சிறு சந்துகளில் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தையும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி பார்க்கிறார் அவர். சிறு பெண்ணாக இருந்த போதும் சப்னா மிகவும் வித்தியாசமாகவே இருந்தார், அவர் தன்னுடைய முடியை சிறிதாக வெட்டிக்கொண்டு, குட்டைப்பாவாடையுடன் தன் நண்பர்களோடு புகைபிடிக்கவும் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதை செய்ய பயப்படுவார்கள். இதுவே அவர் யார் என்று அவரே கண்டுபிடிப்பதற்கான பயணத்திற்கு வழிவகுத்து. அவருடைய தூய்மையான வெகுளித்தனம் அவருக்கு சொந்த பாடங்களை கற்றுக் கொள்ள உதவியது, உலகத்தை பற்றி கவலைப்படாததும் அவருடைய தனித்தன்மைக்கு உருவம் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது. "நான் பெண்கள் பள்ளியில் படித்தேன், நான் உண்மையில் பகிர்ந்து கொள்ளக் கூடிய அழகான விஷயங்களை மற்ற பாலினத்திவரிடம் பகிர்ந்துகொள்வேன். பதிலுக்கு அவர்கள் எனக்கு எப்படி மோட்டார்சைக்கிள் ஓட்டுவது என்று கற்றுக்கொடுத்தார்கள். நாம் தெரிந்து கொள்ள பல்வேறு அம்சங்கள் இருப்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன்” என்று கூறுகிறார் அவர்.

வாழ்க்கையே ஒரு கதை

சப்னா தன்னுடைய பாட்டியின்பால் ஈர்ப்புக்கொண்டிருந்தார், அதற்குக் காரணம் அவருடைய கதைகளே சப்னாவிற்கு ஊக்கமளித்தன. “அவர் நிறைய கதைகளைச் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார், அவை உண்மை தானா என்று கூட எனக்குத் தெரியாது, ஆனால் அவை அனைத்தும் மிகவும் அற்புதமாக இருக்கும்,” என்கிறார் சப்னா. அந்தக் கதைகள் இன்னும் தன்னுடைய நினைவில் இருப்பதாகவும் அவர் சொல்கிறார். “உனக்கு குழந்தைகள் வேண்டும் என விரும்பினால் நீ நிறைய கதைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று என் பாட்டி என்னிடம் அடிக்கடி கூறுவார்.” அதன் பின்னர் அவர் செய்த அனைத்துமே நாடகத்தனமாகவும் வியப்பானதாகவும் இருந்தன. அவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு சுவாரஸ்யமான கதையாக மாற்றினார், அது தான் அவருடைய வாழ்வை இன்று வரை நறுமணமூட்டும் ஒரு விஷயமாக உள்ளது என்று கூட சொல்லலாம். “அனைத்துமே ஒன்று கூடி வருவது போல தோன்றியது. டாட்டூக்கள் கதைகளாக மொழிபெயர்ந்தன, பாட்டி சொன்ன கதைகளோடு நான் ஒன்றிப்போனேன்,” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் அவர்.

அனுபவங்கள்

சப்னாவின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது 1989ம் ஆண்டு அவருடைய தந்தை இறந்தபோது. அதன் பின்னர் சப்னா அமெரிக்காவில் இருந்த அவரின் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். “என் அம்மாவிற்கு பல்வேறு விஷயங்களை கையாள வேண்டி இருந்தது, அதில் என்னை வளர்ப்பது அவருக்கு உண்மையிலேயே கடினமானதாக இருந்தது” என்று தன் தாயாரின் முடிவைப் பற்றி கூறுகிறார் சப்னா. அவர் அமெரிக்காவில் 14 வருடங்களை செலவு செய்ததை யாரும் மறுக்கமுடியாது. “சிக்காகோவில் வாழ்ந்ததுதான் எனக்கு பலவிஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஒருவேளை அந்த வாழ்வு கிடைத்திருக்காவிட்டால் அந்த அனுபவங்களும் கிடைத்திருக்காது. அதேப்போல், இந்தியாவிலேயே இருந்திருந்தாலும் நான் இதுபோலவே இருந்திருப்பேன்” என்கிறார் சப்னா. தனது வாழ்கைப்பயணத்தில் கடுமையான சிக்கல்கள் வந்தபோதிலும், ஆடை வடிவமைப்பு பயின்று அமெரிக்காவில் ஸ்டைலிஸ்ட்டாக வேலைபார்த்து மும்பை திரும்பியிருக்கிறார் சப்னா.

மேட் ஓ வாட்?

சப்னா இந்தியா திரும்பிய நேரம் ஆடைவடிவமைப்புத்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. என்ன செய்யப்போகிறோம் என்று எந்த பிடிமானமும் இல்லாத நிலையில்தான் தனது வாழ்வை மும்பையில் தொடங்கினார் சப்னா. அவரது தலைமுடி அலங்காரத்திறன் தான் சப்னாவிற்கு உதவியது. தனது சிறுவயதுமுதலே சிகை அலங்காரத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமல், சுயமாக பல முயற்சிகளை செய்துபார்த்திருக்கிறார். அதிலிருந்தே சிறந்த ஒப்பனைக் கலைஞராக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சிகை அலங்கார கலைஞர் அதுனா அக்தரிடம் பயிற்சி பெற்ற சப்னா அமெரிக்காவிலும் பயிற்சிகளை மேற்கொண்டார்.

சப்னா ஏன் சொந்தமாக சலூன் தொடங்கினார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. “ஒருநாள், பணியாளர்கள் அனைவரும் சீருடையை கட்டாயம் அணியவேண்டும் என்று அதுனா உத்தரவிட்டார். அது நம்பமுடியாத ஒன்றாக இருந்தாலும், அது எனக்குப்பிடிக்கவில்லை. இந்த சம்பவத்திலிருந்துதான் மேட் ஓ வாட்(Mad o Wat) என்ற எனது சொந்த சலூன் ஆரம்பமானது” என்று விவரிக்கிறார் சப்னா. ஆனால் தலைசிறந்த சலூன்களில் ஆடைக்கட்டுப்பாடு தேவையான ஒன்று என்பதை புரிந்துகொண்டாலும், சப்னா தனது எண்ணத்திற்கு மதிப்பளிக்க தவறவில்லை. இன்று, சப்னா மிகவும் பிரபலமான சிகை அலங்கார கலைஞராக திகழ்கிறார். மகேந்திர சிங் தோனி, பிரியங்கா சோப்ரா, ரன்வீர்சிங் என இவரின் நட்சத்திர வாடிக்கையாளர்களின் பட்டியல் நீளுகிறது.

தங்கமான மனசு

"உங்களுக்கு நீங்கள் உண்மையாக நடந்துகொள்வதுதான் மிகப்பெரிய உதாரணமாக இருக்கமுடியும்” என்கிறார் சப்னா. நாடுமுழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக பல செயல்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் சப்னா. ஷீரோஸ் என்ற அமைப்பில் அங்கமாக செயல்பட்டுவருகிறார். இந்த அமைப்பு அவரது நண்பர் அலோக் தீக்ஷித் என்பவரால் அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்ட கபே ஆகும். அதேப்போல, மகாராஷ்டிராவில் சில கிராமங்களை தத்தெடுத்துள்ளார். அங்கு குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான திட்டங்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார். ’ஐ ஹேவ் எ டிரீம்’ என்ற தொடர்பிரச்சாரத்தையும் தொடங்கும் தருவாயில் உள்ளார். அமில வீச்சிற்கு ஆளானவர்கள் தங்களது சொந்தக்காலில் நிற்பதற்கும், யாரையும் நம்பாமல் சுயமரியாதையுடன் வாழவும் இந்த பிரச்சாரம் உதவும் என்கிறார் சப்னா.

உண்மையான ஒரு வழி

இளவயதில் பரத்தையர் என்று ஒருவரை அழைக்கப்படுவது அதிர்ச்சியான ஒன்று. ஆனால் அது தனது வாழ்வின் தொடக்கத்திலேயே கற்றுக்கொள்ள உதவியதாக சப்னா கருதுகிறார். இருக்கமான சிறிய ஸ்கர்ட் அணிந்துகொள்வது, தலைமுடியை சிறிதாக வெட்டிக்கொண்டு, பசங்களுடன் பேசிக்கொண்டிருப்பது யாருக்காவது பரத்தையர்தனமாக தெரிவதில் அல்லது இந்தியரல்லாதவராக தெரிவதில், தேசியத்தை கலக்க விரும்பவில்லை என்கிறார் சப்னா. உடை அல்லது பாவனையை வைத்து உங்களை தீர்மானிக்கமுடியாது. ஆனால் மக்கள் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். அடங்காத போக்கு மற்றும் உங்களுக்கு எதுபிடிக்குமோ அதை செய்வது, இந்த இரண்டிலும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள்.

இந்த உலகில் எதைமாற்ற விரும்புகிறீர்கள் என்றால், “எதையுமில்லை” என்கிறார் சப்னா. சிறிய யோசனைக்குப்பிறகு, “உங்கள் மனதை திறந்து வையுங்கள், நான் யோகா கலைக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், ஏனென்றால் எனதுவாழ்வில் யோகா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் நான் இன்று மனிதத்தன்மையுடன் இருக்கிறேன். நல்லதையே செய்யுங்கள் அது உங்களுக்கு நல்லதையே கொண்டுவரும். உங்களுக்கு சிலவை பிடிக்கவில்லை என்றால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று சாதாரணமாக அடுக்கினார் சப்னா.

அன்பு, அமைதியைக் கண்டறிதல், உங்களை நீங்களே உணருங்கள் என்பது சப்னாவின் கதை மற்றும் அணுகுமுறையில் நன்கு புலனாகிறது. இவை தோற்றத்தால் உண்டாக்கப்படுவதில்லை, மனநிலை மாற்றத்தல் உண்டாக்கப்படுபவை.

சப்னா இறுதியாக புல்லீ ஷாவின் அழகான வரிகளுடன் தன் கதையை முடிக்கிறார்.

கடவுளை வெளியே தேடாதீர்கள், அவர் உங்களுக்குள்ளாகவே இருக்கிறார்.

கட்டுரை: பிரதீக்ஷா நாயக் | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்