தந்தையின் கனவு மெய்ப்பட வேண்டி புறப்பட்ட வேலூர் இளைஞரின் ஒலிம்பிக் பயணம்!

தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தின் வெற்றிக் கதை!

0

உலக அளவில் 'விளையாட்டுப் போட்டிகளின் எவரெஸ்ட் உச்சம்' என்பது ஒலிம்பிக் போட்டிகள்தான்..!

2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரியோ டி ஜெனீரோவில் தொடங்க இருக்கிறது.

அந்த பிரமாண்ட விளையாட்டு திருவிழாவில் கலந்துகொள்ள கடந்த 25 ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பளுதூக்கும் வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம்.

"இந்திய நாட்டுக்காக விளையாட தேர்வு செய்யப் பட்டிருப்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ரியோ சென்று அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி அந்த நாட்டு கால நிலைக்கு ஏற்ற சூழலில் பயிற்சி எடுப்பதற்காகத்தான் இன்றே புறப்பட்டுவிட்டேன். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வாக்கில்தான் பளுதூக்கும் போட்டிகள் தொடங்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். தங்கம் வெல்வதுதான் எனது இலக்கு. கடந்த முறையை விட இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்றுத்தருவார்கள். அதில் ஒருவனாக நானும் இருப்பேன்..." 

என்று விமானம் ஏறுவதற்கு முன்பாக தமிழ் யுவர் ஸ்டோரியிடம் தனது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டார்.

வேலூரை அடுத்துள்ள சத்துவாச்சாரிதான் சதீஷின் சொந்த ஊர். அப்பா சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். ஓய்வுக்குப் பின் தற்போது வேலூர் வி.ஐ.டி நிகர்நிலை பல்கலை கழகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அம்மா தெய்வானை. ஒரே சகோதரர் பொறியியல் படித்து வருகிறார். இதுதான் 25 வயது சதீஷின் குடும்பம்.

"நான் ஒரு அத்தலெட் ஆவேன் என்று சிறு வயதில் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்பாதான் என்னை இந்த விளையாட்டு துறைக்குள் அழைத்து வந்தார். அவரும் ஒரு பளுதூக்கும் வீரர்தான். ஆனால், தேசிய அளவைத் தாண்டி அவரால் செல்ல முடியவில்லை. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்கிற அவர் கனவை நிறைவேற்றவே அவர் என்னை உருவாக்கினார். அவருடைய ஆர்வம், தூண்டுதல் எல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு பளு துக்கும் வீரராக உருவாக்கியது," 

என்று தனது கதையை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

பளு தூக்கும் போட்டி என்பது அதிகம் செலவு பிடித்த விளையாட்டு. அதற்காக அவருடைய தந்தை தனது ஊதியத்தில் பெரும்பகுதியை செலவிட்டு சதீஷை உருவாக்கி உள்ளார். அம்மாவும் அதற்கு ஏற்ப குடும்ப செலவுகளை குறைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பெரோஸ்பூரில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றிருக்கிறார். அது சதீசுக்கு மட்டுமல்ல அவரது தாய், தந்தையருக்கும் பெருமையை தேடித்தந்தது. அப்போது அவருக்கு 15 வயது. அந்த தங்கம் தந்த தொடக்கம்தான் அவரை இந்தத் துறையில் முன்னோக்கி பயணிக்க செய்துள்ளது.

அதன் பிறகு தொடந்து கடின உழைப்பு, பயிற்சிகள் மூலம் தன்னை இந்த அளவுக்கு தயார்படுத்தி இருக்கிறார். 18,19 வயதில் சீனியர் லெவல் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதில் தங்கம் வென்று சாதனை படைத்ததற்கு பரிசாக தெற்கு ரயில்வே அவருக்கு வேலை கொடுத்து கௌரவித்தது. அந்த வேலை மூலம் கிடைத்த வருவாயோடு சேர்த்து, அப்பாவின் சம்பளத்தின் ஒரு பகுதியையும்சேர்த்து செலவிட்டு தரமான பயிற்சிகளை தொடர முடிந்திருக்கிறது. பயிற்சி மட்டுமல்லாது டயட் உணவு என்பது முக்கியம். பணம் இருந்தால்தான் எல்லாம் சாத்தியம் என்று இந்த விளையாட்டின் கஷ்டங்களை விளக்கினார் சதீஷ்.

"அந்த பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. அதன்பிறகுதான் 2010 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகள் என்கிற அப்பாவின் கனவை நிறைவேற்றினேன். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது. அது ஒரு புது உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது."

பின்னர், புது பயிற்சியாளர், வேலூர் ஜிம் ஒன்றில் பயிற்சி என்று பயணித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு கிடைத்த அனுபவம் அவரை தொடர்ந்து உச்சத்துக்கு பயணிக்க உதவியுள்ளது.

அந்த 4 ஆண்டு பயிற்சிதான் 2014 -ல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கத்தை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது. அது சதீஷின் முதல் சர்வதேச சாதனை. நாடு அவரை திரும்பி பார்க்கச் செய்த சாதனை. அதனை கௌரவிக்கும் விதமாக 2015 -ல் இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது. தமிழக அரசும் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது.

இந்த தொடர் வெற்றிப் பயணத்தின் அடுத்த இலக்காக ஒலிம்பிக்கை குறிவைத்து பயணிக்கத் தொடங்கிய போதுதான் திடீர் சருக்கலாக அந்த விபத்து நடந்தது. அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் தகுதி தேர்வு போட்டியில், பலு தூக்கும் போது திடீரென முதுக்குப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு தேர்வாக முடியாமல் போனது.

"எங்கே ஒலிம்பிக் கனவு சிதைந்து விடுமோ என்கிற பயம் லேசாக இருந்தாலும், அதனை மறந்துவிட்டு சிகிச்சையையும், பயிற்சியையும் தொடர்ந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகள் இந்த அளவுக்கு என் வாழ்க்கையில் போராடியது இல்லை. கடுமையான வலியையும் தாங்கிக் கொண்டே பயிற்சியைகளை எடுத்தேன். இந்த வலியிலும் நம்மால் முடியுமா என்று சில நேரங்களில் யோசித்தேன். ஆனால், இன்று ஒலிம்பிக் போட்டிக்கு நானும் தேர்வு செய்யப் பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. எனது பயிற்சியாளர் மற்றும் பெற்றோரின் இடைவிடா முயற்சிதான் என்னை தேர்வு செய்ய வைத்தது."

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகளுக்குப் பிறகு இறுதியாக பாட்டியாலாவில் நடைபெற்ற இறுதி சுற்று போட்டியில் 77 கிலோ பிரிவில் 336 கிலோ எடையை தூக்கி இந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ளார் சதீஷ். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று ஆறு பதக்கங்களை இந்தியா பெற்றது. இந்த முறை அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும், அதில் தாமும் ஒருவனாக இருப்பேன் என்று சதீஷ் குமார் சிவலிங்கம் நம்பிக்கையுடன் பறந்துள்ளார்!

சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெல்ல தமிழ் யுவர் ஸ்டோரியின் வாழ்த்துக்கள்..!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்