டெக் ஆக மாறிய கறிச் சோறு போட்டு களைக் கட்டிய ‘மொய் விருந்து’ 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஆடி மாத மொய் விருந்து திருவிழாவில் ரூ.500 கோடி வசூலானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0

இயந்திரமயமான இன்றைய வாழ்க்கை ஓட்டத்திலும் கூட, இன்றும் கிராமங்களில் சில கலாச்சாரங்கள் திருவிழாக்களாகக் கொண்டாடப்பட்டு தான் வருகின்றன. அப்படிப்பட்டவைகளில் ஒன்று தான் மொய் விருந்து.

பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களை, உறவினர்கள், ஊர்மக்கள் சேர்ந்து கை தூக்கி விடுவதற்காக நடத்தப்படுவது தான் இந்த நிகழ்ச்சி. இன்னும் எளிதாகக் கூறுவதென்றால் தொழில் அல்லது விவசாயம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை முன்னேறச் செய்ய அளிக்கப்படும் வட்டியில்லாக் கடன் தான் இந்த மொய்.

நம் முன்னோர்கள் எந்தவொரு காரியத்தையுமே சரியான காரணமில்லாமல் செய்து விடவில்லை. ஆனால், கால ஓட்டத்தில் அவை எல்லாம் சம்பிரதாயமாக மாறி, அதன் வடிவங்கள், உருவங்கள் சிதைந்து போனது தான் கொடுமை.

மொய் என்ற ஒன்றுகூட அப்படித்தான். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் ஆகட்டும், துக்க நிகழ்ச்சிகள் ஆகட்டும் சம்பந்தப்பட்டவர்களின் நிகழ்ச்சி செலவுக்கு ஆகும் பணத்தை உறவினர்கள் மொய், செய்முறை என்ற பெயரில் சம்பிரதாயமாக மறைமுகமாக தந்து உதவினர். 

பெண்களின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு இன்றளவும் கிராமங்களில் பாத்திரங்கள், தங்க நகைகளை செய்முறையாக செய்வதை நாம் பார்க்கலாம். காரணம் அது பின்னாளில் அப்பெண்ணின் திருமணத்திற்கு உதவும், பெற்றோரின் சுமையைக் கொஞ்சம் குறைக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தான். ஆனால், காலத்தின் மாற்றத்தால் இந்த கலாச்சாரங்களின் உண்மையான சாராம்சத்தை விட்டு விலகி, நாகரீகம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படாத அலங்கார பரிசுப் பொருட்களை நாம் அன்பளிப்பாக அளித்து வருகிறோம் என்பது வேதனையான உண்மை.

பட  உதவி: தினகரன்
பட  உதவி: தினகரன்

ஆனால், கால ஓட்டத்தால் வாழ்வியல் முறைகள் எவ்வளவு மாறினாலும், பழமையை மீட்டெடுக்கும் முயற்சியாக இன்றும் கிராமங்களில் சில சம்பிரதாய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அப்படிப்பட்டவைகளில் ஒன்று தான், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட கிராமங்களில் தொன்று தொட்டு நடந்து வரும் மொய் விருந்து.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த மொய் விருந்தானது ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இப்பகுதி கிராமங்களில் நடத்தப்படுகிறது. இதில், கோடிக்கணக்கில் வர்த்தகம் ஒருபுறம் நடைபெற, மற்றொரு புறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர்.

மொய் விருந்து:

கலாச்சாரம் சார்ந்த நிகழ்வாகத் தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்தின் தாய் வீடு தஞ்சை மாவட்டம் எனலாம். பேராவூரணி பகுதியைச் சுற்றிய கிராமங்களில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் வந்து விட்டாலே, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றிய கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் திகைக்க வைக்கும் மொய் விருந்து பிளக்ஸ் பேனர்களை பார்க்க இயலும்.

காலமாற்றத்தால் தற்போது மொய் விருந்துகள் வர்த்தக ரீதியான வாழ்வாதாரமாக மாறிப்போனாலும், விருந்து வைப்போருக்கு இவை நிச்சயம் பலனளிப்பதாகவே உள்ளன. அதாவது, 

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு மொய் விருந்து என்ற பெயரில் உறவினர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற தொகையை அளிக்கின்றனர். அந்தத் தொகையின் மூலம் சம்பந்தப்பட்ட நபர் விவசாயம் அல்லது தொழில் செய்து தன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் தனக்கு மொய் அளித்தவர்கள் வீட்டு விஷேசத்தில் தான் பெற்ற மொய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இது தான் மொய் செய்யும் முறை.

இந்த மொய் விருந்தானது தஞ்சை மாவட்டம் பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆலங்குடி போன்ற கிராமங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

Photo Courtesy: Dinamalar
Photo Courtesy: Dinamalar

ஆடி முதல் நாள் முதல் இந்த மொய் விருந்து திருவிழா போல் ஆரம்பமாகி விடும். ஒரே நேரத்தில் எட்டு பேர் முதல் 32 பேர் வரை, பொதுவாக பந்தல் அமைத்தோ அல்லது மண்டபங்களிலோ கூட்டாக சேர்ந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரையில் மொய்த் தொகையைப் பெறுவர். பின்னர் அந்த மொய்த் தொகையைக் கொண்டு திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவர். மற்றவர்கள் இப்பணத்தை தொழிலில் முதலீடு செய்வர். 

மொய்ப் பெற்றவர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து, தாங்கள் பெற்ற பணத்தை திருப்பி செலுத்தினால் போதுமானது. இதனால் பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும், வட்டி, அது போடும் குட்டி போன்ற நெருக்கடிகள் இவர்களுக்கு ஏற்படுவதில்லை.

ஆட்டுக் கிடாய் விருந்து:

மொய் செய்ய வருபவர்களை விழாதாரர்கள் மாலை அணிவித்து வரவேற்கின்றனர். அதோடு அவர்களுக்கு ஆட்டு கிடாய் விருந்தும் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் பலர் கூட்டாக சேர்ந்து ஒரே விழாவாக இந்த விருந்தை நடத்துவதால், சம்பந்தப்பட்ட விழாதாரர்களுக்கு செலவு குறைகிறது.

பணப்பரிமாற்றம், வர்த்தகம் என்பது ஒருபுறம் இருக்க, இத்தகைய மொய் விருந்து நிகழ்ச்சிகளால் ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு சமைக்கும் பணி இருப்பதால் சமையல் கலைஞர்கள், விழா மேடை, பந்தல் அமைப்பவர்கள், பத்திரிக்கை விநியோகம் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று பல தரப்பினருக்கு ஆடி மாதத்தில் வருமானம் கிடைக்கிறது. 

அதேபோல் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள், ஆடு வியாபாரிகள், இலை வியாபாரிகள், பத்திரிக்கை மற்றும் ப்ளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம்முழுவதும் நல்ல வருவாய் கிடைப்பதோடு பலகோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெறுகிறது.

அதோடு, அப்பகுதியில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொய் எழுதும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. தினமும் மொய் எழுதும் பணி செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு செயலி:

ஆரம்பத்தில் நோட்டுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டு வந்த இந்த மொய் விபரங்கள் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, கணினியில் வரவு, செலவு விபரங்களாக சேமித்து வைக்கப்படுகிறது. மொய் செய்தவர்களுக்கு ரசீதும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இருந்து தான், மொய் விருந்தில் பணம் எண்ணும் இயந்திரம் பயன்படுத்துவது, வங்கி அலுவலர்களை வரவழைத்து பணியை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள பெரியாளூரில் நடந்த மொய் விருந்து நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் மூலம் மொய் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதோடு, மொய் செய்தவர்களுக்கு ரசீதோடு, அவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்ஸும் அனுப்பப்பட்டுள்ளது.

Photo Courtesy : Dinamalar
Photo Courtesy : Dinamalar

மொய் விருந்திற்கென இம்முறை சிறப்பு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘மொய் டெக்’ ஆகும். இந்த செயலி மூலம் மொய் விருந்திற்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் மொய் விபரங்களை ஆண்ட்ராய்டு போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாங்கள் யாருக்கெல்லாம் மொய் செய்துள்ளோம் என்பதையும் இச்செயலி மூலம் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

கட்டுப்பாடுகள்:

இந்த மொய் விருந்திற்கென்று சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதாவது, ஆடிமாதத்தில் மட்டுமே விழா நடத்த வேண்டும், ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மொய் விருந்து விழா நடத்த வேண்டும், தான் பெற்ற மொய் பணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் முறையாக திருப்பி செய்த பின்னரே அடுத்த முறை விழா வைக்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் இன்றளவும் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ரூ.400 கோடி வரையில் இந்த மொய் விருந்து விழாவால் பணப் பரிமாற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டு இது ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடகாடு கிராமத்தில் மட்டும், ஒரு சில தனி நபர்களின் வீட்டில் நடந்த மொய் விருந்தில், ஐந்து கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவே குறைவு என்கின்றனர் சிலர். விவசாயத் தொழில் நலிவு, தொழில் நஷ்டம் என பலர் கடன் வாங்கி பதில் மொய் செய்யும் நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது.

Photo Courtesy : Dinakaran
Photo Courtesy : Dinakaran
ஆனால், “மொய் விருந்து என்பது வரப்பிரசாதம். அதனால் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்துள்ளன,” என்கின்றனர் மொய் விருந்தால் பலனடைந்தவர்கள்.

மொய் விருந்துக்கு கடன்:

மொய் விருந்து வைப்பதற்கென உள்ளூரில் இருக்கும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே கடன் வழங்குகிறார்கள். இதற்கு கைமாறாக மொய் விருந்து வைப்பவர்கள், மொய் விருந்து முடிந்த பிறகு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

Stories by jayachitra