கோவையில் இரண்டு தொழில்முனை நிறுவனங்களை திறம்பட நடத்திச் செல்லும் காயத்ரி ராஜேஷ்

2

கோவை ஆர் எஸ் புரத்தின் பேரிரைச்சலுக்கு மத்தியிலும் அவ்வளவு அமைதியாய் இருக்கிறது காயத்ரி ராஜேஷின் அலுவலகம். இணையதள வடிவமைப்பு மற்றும் இணைய சந்தைப்படுத்துதல் சேவைகள் செய்யும் ‘சேர்ச்-அண்ட்-ஸ்கோர்’ (SearchnScore) என்னும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை வேறு பங்குதாரர் யாரும் இன்றி ஒற்றையாளாய் வெற்றிகரமாய் நடத்திக் கொண்டே, ‘பை தி ஸ்டார்ட் அப்ஸ்’ (ByTheStartups) என்னும் தொழில்முனைவின் வழியே, தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்களை ஒரு இணையமாக்கும் அமைப்பையும் சத்தமின்றி நடத்திக் கொண்டிருப்பவர், காயத்ரி ராஜேஷ்!

காயத்ரி ராஜேஷ்
காயத்ரி ராஜேஷ்

தொழில் முனைவின் தொடக்க காலம்

காயத்ரியின் பிறப்பிடம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை. பத்தாம் வகுப்புவரை ஆனைமலையில் பயின்ற காயத்ரி, பதினொன்றாம் வகுப்பில் கோவை க்ருஷ்ணம்மாள் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, தொடர்ந்து அங்கேயே கல்லூரிப் படிப்பையும் முடித்திருக்கிறார்.

பள்ளிக் காலத்திலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காயத்ரி, ஆங்கில இலக்கியத்தில் இளங்கலையும், முதுகலையும், ஒரு ஆய்வுப் பட்டமும் பெற்றிருக்கிறார். ஆங்கில இலக்கியம் கற்ற காயத்ரி, தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கிய கதை, ஓர் முன்னுதாரணம்!

“கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, இங்கிலாந்தில் தலைமையகம் அமைந்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கோவைக் கிளையில் கண்டெண்ட் ரைட்டராக சேர்ந்தேன். அங்கே முதல் வருடம் மட்டுமே கண்டெண்ட் ரைட்டராக வேலை செய்தேன். பிறகு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் துறையில் வேலை செய்யத் தொடங்கினேன்.”

அக்காலத்தில், அவர் கற்றுக் கொண்டவைகளைக் கொண்டு ஓர் எதிர்காலம் அமையவிருக்கிறது என்பதை யூகித்திருப்பாரா எனத் தெரியவில்லை. எனிலும், இன்று, தான் செய்பவைகளை திறம்படச் செய்ய காயத்ரி தவறுவதில்லை.

“எனக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இருவரையும் கவனித்துக் கொண்டே வேலையையும் சமாளிக்க முடியவில்லை. அவர்களோடு நேரம் செலவிட முடியவில்லை. அப்போது தான் சுயமாய் எதாவது செய்ய வேண்டுமென முடிவு செய்தேன்.”

அப்போது, 'சேர்ச்-அண்ட்-ஸ்கோர்' தொடங்க காயத்ரிக்கு பெரும் உதவியாய் இருந்தது ஆறு வருட பணி வாழ்க்கையின் அனுபவம். 2011ல் சேர்ச்-அண்ட்-ஸ்கோர் நிறுவிய போது, எனக்கு என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்த புரிதல் இருந்தாலுமே, ஒரு நிறுவனத்தை தொடங்கி அதை வழி நடத்துவது பற்றியெல்லாம் பெரிதாய் தெரிந்திருக்கவில்லை” என தொழில்முனைவில் ஆரம்ப காலம் குறித்துச் சொல்கிறார். இந்நேரத்தில், காயத்ரியின் வாழ்க்கைத் துணை, ராஜேஷ் உதவிக்கு வந்திருக்கிறார். ராஜேஷின் எம்.பி.ஏ படிப்பு அதற்கு பக்கபலமாய் இருந்திருக்கிறது.

தனியாளாய் வேலை செய்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு முதல் துணையாய் வந்தவர் உஷா. அப்படி இருவர் குழுவாய் இயங்கிக் கொண்டிருந்த சேர்ச்-அண்ட்-ஸ்கோரில் இன்று, பத்து பணியாளர்களும், 5-6 ஃப்ரீலானர்களும் இருக்கின்றனர்.

“என் நிறுவனத்தின் சொத்தாய் நான் பார்ப்பது என் குழுவைத் தான். உஷா, சபிதா, ஷீபா எல்லோரும் மிகவும் அர்ப்பணிப்பானவர்கள். நான் இங்கே எட்டு மணி நேரம் இருக்கிறேனென்றால், முழுமையாக இங்கேயே இருக்க மாட்டேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள், அலுவலக வேலைகள் என எல்லாவற்றையும் கலந்து கலந்து தான் செய்துக் கொண்டிருப்பேன். ஆனாலும், அவர்களுடைய ஈடுபாடு அதிகம் இருப்பதனால், வேலை விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி.”

(உரையாடல் முடியும் வரை, காயத்ரி பல முறை, பல இடங்களில் தன் குழுவை மெச்சினார் என்பதை எப்படிச் சொல்லாமல் இருப்பது...?)

SearchnScore குழுவுடன் காயத்ரி ராஜேஷ்
SearchnScore குழுவுடன் காயத்ரி ராஜேஷ்

'பை தி ஸ்டார்ட்-அப்ஸ்' அறிமுகம்

ஸ்டார்-அப்களுக்கான தளமாக இயங்கும் 'பை தி ஸ்டார்ட் அப்ஸ்' உருவானது குறித்துப் பேசிய போது, “கடந்த வருடம், நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென உதித்த எண்ணம் தான் கோவையில் இயங்கும் தொழில் முனைவுகளை ஒருங்கிணைக்கும் தளமாக ‘பை தி ஸ்டார்ட்-அப்ஸை’ உருவாக்குவது. பிராண்டிங் போன்ற வேலைகளில், நண்பர் ஷமீரின் உதவியோடு, ‘பை தி ஸ்டார்ட்-அப்ஸை’ தொங்கினேன்’. அந்தச் சமூகம், மிகச் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது.” என்று பூரிப்புடன் கூறுகிறார் காயத்ரி.

வேறு நிதி உதவியோ, முதலீடோ இல்லாமல் சேர்ச்-அண்ட்-ஸ்கோரைத் தொடங்கிய காயத்ரி, சேர்ச்-அண்ட்-ஸ்கோரின் வழியே கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே ‘பை தி ஸ்டார்ட்-அப்ஸை’ நிறுவியிருக்கிறார்.

“உதாரணமாக, ஸ்டார்ட்-அப்களுக்கு நல்ல வழிகாட்டிகள் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சின்ன சின்ன விஷயத்திலும் நிறைய சந்தேகங்கள் இருக்கும். ஒரு யோசனை இருக்கும் ஆனால் அது எந்த அளவு மக்களை சென்றடையும் என்பது தெரிந்திருக்காது. ஒரு கவனம் இருக்காது. யோசனையோடு வருபவர்களுக்கு அவர்களுடைய இலக்கை தெளிவாக்குவோம். அவர்களுடைய வணிகத்தில் எந்த அளவு ஆற்றல் இருக்கிறது என வழிகாட்டிகள் சொல்லிக் கொடுப்பார்கள். நிதி, தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலுமே எங்களுக்கு மெண்டர்கள் இருக்கின்றனர்,” 

என ‘பை தி ஸ்டார்ட்-அப்ஸின்’ இயங்குமுறை குறித்துச் சொன்னார் காயத்ரி.

பல மெண்டர் நிறுவனங்களோடு டை-அப் செய்திருக்கும் ‘பை தி ஸ்டார்ட்-அப்ஸ்’, ஒரு தொழில்முனைவு நிறுவனத்தை பதிவு செய்வது தொடங்கி, முதலீடு பெறுவது வரையுள்ள பல சிக்கல்களுக்கு தீர்வாய் அமைகிறது.

பெண்களின் தொழில் முனைவும் சவால்களும்

மேலும், பெண் தொழில் முனைவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாய், ‘பெண்கள் தொழில்முனைவு செல்’ (All Women Entrepreneur Cell- AWEC)என்னும் இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.

“பெண் தொழில் முனைவர்களுக்கு எந்த அளவு உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உதவ வேண்டுமென்பது தான் இதன் நோக்கம். ஃபேஸ்புக் பக்கம் ஒன்று இருக்கிறது. அங்கே பெண் தொழில் முனைவர்கள் சந்திகும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடி, முடிவெடுப்போம். கடந்த மார்ச் ஐந்தாம் தேதி, மகளிர் தினத்திற்காக, மும்பையிலிருந்து 'மெண்ட்ரப்ருனர்' என்றொரு வழிகாட்டுதல் நிறுவனம் சார்பாய் நடத்தப்பட்ட ‘வுமன் பவர்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டோம். அங்கே பெண்களின் தொழில் முனைவு நிறுவனங்களின் புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல பேச்சாளர்கள் கலந்துக் கொண்ட சபை ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. பெண் தொழில் முனைவர்கள் இப்போது தான் வந்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் பலர் தம் கணவரின் நிறுவனத்திற்கு உதவும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

பணி வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சமாளிப்பது தான் இன்று பெண் தொழில் முனைவர்கள் சந்திக்கும் சவால்கள், நிர்வாகத்தை இயக்குவதிலும் நிறைய சவால்கள் இருக்கும். நிதி ரீதியாகவும் பல பிரச்சினைகள் இருக்கும். ஆனால், நான் சேர்ச்-அண்ட்-ஸ்கோர் தொடங்கிய போது எனக்கு சில புராஜெக்டுகள் கையில் இருந்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் போனது. அது இல்லாமல் இருந்திருந்தால், லோன் போன்று எதாவது முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.”

இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் தொழில் முனைவு

கோவை நகரில் ஓர் நிறுவனத்தை நடத்தும், காயத்ரியின் அனுபவம் இப்படியாக இருப்பின், நம் செவிகளுக்கு எட்டாத இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களின் நிலை என்னவாய் இருக்கும்?

“இரண்டாம் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இப்போது தான் தொழில் முனைவு வளர்ந்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போது பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கு முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்கள். அது, அந்த தொழில் முனைவின் யுக்தியைப் பொறுத்தது. உதாரணமாய், மதுரையைச் சேர்ந்த நேன் (NAN - NATIVE ANGEL NETWORK) என்றொரு குழு இருக்கிறார்கள். அவர்கள் மதுரை மட்டுமல்லாமல், பிற தமிழக நகரங்களில் இருக்கும் ஸ்டார்-அப்களில் முதலீடு செய்கிறார்கள். எங்களுடைய மெண்டர் நிறுவனங்களே பல முதலீட்டாலர்களுடன் டை-அப் செய்தி வைத்திருக்கின்றனர்.

தொழில்நுட்பம் சாராத முனைவுகளுக்கு நிதி உதவி கிடைக்கத்தான் செய்கிறது. அதற்கு தொழில் யுக்தி மட்டுமே அவசியம்.. பத்மஸ்ரீ முருகானந்தம் அருணாச்சாலம் அவரை எடுத்துக் கொண்டாலே தெரியும். அவருடைய யுக்தியும், தயாரிப்பும் பிரமாதமானவை. இன்று முப்பத்து ஆறு சதவிகிதம் தொழில் முனைவுகள் தான் வெற்றியில் முடிகிறது. அந்த வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளாய் இருப்பது தயாரிப்பின் எதிர்கால வளர்ச்சி, அதன் வெளியேறுதல் திட்டம் எப்படிப்பட்டது (எக்ஸிட் ஸ்ட்ரேட்டஜி) போன்றவைதான்”.

எதிர்காலத் திட்டங்கள்

காயத்ரியின் இரண்டு நிறுவனங்களின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில்,

“சேர்ச் அண்ட் ஸ்கோர் தற்போது, கோவையில் இணைய வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் முதல் ஐம்பது இடத்திற்குள் இருக்கலாம் என காயத்ரி நம்புகிறேன். எதிர்காலத்தில் அதை முதல் இடத்திற்கு கொண்டு வர வைப்பதற்கான உழைப்பைக் கொடுக்க வேண்டும்.

‘பை தி ஸ்டார்ட்-அப்ஸ்’ வழியே சிறு நகரங்களில் இருக்கும் தொழில் முனைவுக் குழுக்களை ஒன்றாக்கும் முயற்சியில் இருக்கிறோம். நாங்கள் வருவதற்கு முன்னரே, கோயம்புத்தூர் ஸ்டார்ட்-அப்ஸ் இருக்கிறார்கள். இருவருமே ஒரே நோக்கம் கொண்ட குழு என்றாலுமே, அவர்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கிறது. இப்படி பல குழுக்களாக முளைத்திருக்கும் தொழில் முனைவு சமூகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். எங்களுக்கு பேராசை எல்லம் இல்லை, மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறித்துக் கவலை இல்லை”, என்றார்.

கோவையின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நோக்கினால், அரைநூற்றாண்டுக்கு மேலாகியும் வலிமையாக தடம் பதித்து, கோலோச்சும் பல நிறுவனங்கள் தலைமுறை தலைமுறையாய் வணிகம் செய்துக் கொண்டிருப்பது தெரிய வரும். சிறு சிறு பிரமாதமான தொழில் முனைவு நிறுவனங்களின் தேவைகளையும், சாதனைகளையும் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதைக் குறித்தும் யோசிப்பதாய் சொல்லி முடிக்கிறார் காயத்ரி.

இணையதள முகவரி: SearchnScore   BytheStartups

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ரத்தன் டாட்டாவை கவர்ந்த கோவை நிறுவனம் 'ஆம்பியர் எலெக்ட்ரிக்'

நான்கு கணினியுடன் தொடங்கி ஒரு கோடி வரை ஈட்டும் கோவை நிறுவனம்!


வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha