மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி: எதிர்த்து போராடும் பார்வை குறைபாடுள்ள பெண்!

0

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% முதல் 18% வரை இனி ஜிஎஸ்டி வரிவிதிப்பு போடப்பட்டுள்ளதால் அவர்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் ஒரு சில பொருட்கள் மலிவாகவும் பலப்பொருட்களின் விலை அதிகரித்தும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் அவர்களுக்கு அரசு சலுகைகள் ஏதும் வழங்க முன்வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

23 வயதாகும் சந்தனா சந்திரசேகர் என்ற கண் பார்வை குறைபாடுள்ள பெங்களுரு பெண், இதை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளார். 2016 பட்ஜெட்டில், பார்வையற்றோர் படிக்க பயன்படுத்தும் ப்ரெய்லி மற்றும் துணைக் கருவிகளுக்கான 41 சதவீத இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகைகள் குறைக்கப்பட்டு மீண்டும் வரிவிதிப்புக்குள்ளாகி விட்டது. ஜிஎஸ்டி-ல் தன்னை போன்றோருக்கு அநீதி வழங்கப்பட்டதாக அவர் கருதுகிறார். 

சுயமான தைரியமான சந்தனா

பிறவியில் இருந்தே கண் பார்வை கோளாரால் பாதிக்கப்பட்ட சந்தனாவுக்கு ரெட்டினைடிஸ் பிக்மெண்டோசா என்ற பிரச்சனை கண்களில் இருந்தது. கண் பார்வை குறைந்து கொண்டே வந்ததால் அவருக்கு வாழ்க்கை கடினமாக இருந்தது.

ஐசிஎஸ்சி போர்டில் பள்ளிப்படிப்பை எப்படியோ முடித்த அவர், ஏழாம் வகுப்பு முதல் பிரெய்லி முறையில் படிக்க கற்றுக்கொண்டார்.

”என் பள்ளி எனக்கு ஆதரவாக இருந்தது. என் குறைப்பாட்டை மறந்து பல போட்டிகளில் என்னை ஊக்குவித்து, மேலும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அவர்கள் வளர்த்தனர்,” என்கிறார் சந்தனா. 

71% எடுத்து பத்தாம் வகுப்பை முடித்தார். பின்னர் பன்னிரண்டாம் வகுப்பில் 81% எடுத்து தேர்ச்சி பெற்றார். மவுண்ட் கார்மல் கல்லூரியில் பி.காம் பட்டத்திலும் சேர்ந்தார். தன் பெற்றோர்கள் தனக்கு பக்கபலமாக இருந்து சவால்களை கடக்க உதவியதாக கூறுகிறார். 

“மற்ற குழந்தைகளை போலவே என்னையும் அவர்கள் வளர்க்க விரும்பினார்கள். வாழ்க்கையில் எல்லாரையும் போல் வாழ கற்றும் கொடுத்தனர்,” என்றார். 

தற்போது பி.காம் டிகிரியை முடித்துள்ள இவர், தினமும் மெட்ரொ ரயிலில் பயணித்து பணிக்கும் செல்லத்தொடங்கியுள்ளார். அதைத்தவிர நேரம் கிடைக்கும் போது பார்வை குறைபாடுள்ளோருக்கு கணினி மற்றும் அக்கவுண்ட்ஸ் பாடங்களை கற்று தருகிறார்.

ஜிஎஸ்டி வரி எதிர்த்த போராட்டம்

நவம்பர் 2015-ல் ராஹுல் காந்தி மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு வந்தபோது, சந்தனா பிரெய்லி மற்றும் கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் துணை கருவிகளுக்கான 41 சதவீத இறக்குமதி வரி பற்றி அவரிடம் ஒரு கோரிக்கையை அளித்தார். அதன் பின்னர் ராஹுலுக்கு மெயிலில் தன் கோரிக்கையை எழுதிய சந்தனா,

“பிரெய்லி போன்ற கருவிகள் தன்னை போலுள்ளவர்களுக்கு கல்வி, பணியிடம், மற்றும் செல்லும் இடங்களில் பயன்படும் அத்தியாவசியமானது என்றும் அதன் மீது அதிகபட்ச வரி விதிப்பின் மூலம் பலர் பாதிக்கப்படுவதாக எழுதினார். மேலும் இவை தினசரி பயன்பாட்டு சாதனமே ஒழிய படாடோபப் பொருட்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். இந்த வரியை ஒழிப்பதன் மூலம் பொருளாதார வசதியில்லாத கண் பார்வையற்றோரும் வாழ்க்கையில் இதன் உதவியுடன் முன்னேற முடியும் என்றும் விளக்கினார். மேலும் இந்த கோரிக்கையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்று இதற்கு தீர்வுகாண கேட்டுக்கொண்டார்.”

அதன்படி, 2016 பட்ஜெட்டில் இதற்கான வரி விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து சந்தனா மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் முந்தைய வரிச் சட்டங்கள் மாறி இந்த கருவிகள் மீண்டும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெற்று வரிவிதிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று ஆய்வுகள் கூறும் நிலையில், அவர்களுக்குத் தேவையான பொருட்களுக்கு வரிவிதிப்பு பல்லாயிரம் பேரை பாதிக்கும் என்றும் அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் சந்தனா உறுதியாக இருக்கிறார்.