இந்திய வர்த்தகத்தில் அமேசான் ரூ.2,600 கோடி முதலீடு...  

0

வால்மார்ட் நிறுவனத்தின் முதலீடு ஃபிளிப்கார்ட்டிற்கு வருவதற்கு முன்னரே, அமேசான் நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் 2,600 கோடியை முதலீடு செய்திருக்கிறது.

அமேசான் இந்தியா நிறுவனம், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட அதன் குழும நிறுவனமான அமேசான் கார்ப்பரேட் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிட் மற்றும் மொருஷியசைச் சேர்ந்த அமேசான் டாட்காம் ஐஎன்சி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.600 கோடி பெற்றிருப்பதாக ரிஜிஸ்டார் ஆப் கம்பெனிஸ்- ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

அமேசான் செல்லர் சர்விசஸ் பிரைவட் லிட் நிறுவனத்தால் நடத்தப்படும் அமேசான் இந்தியா மேல் சொன்ன இரண்டு நிறுவனங்களுக்கும் ரூ.10 முகமதிப்பு கொண்ட 260 கோடி பங்குகளை அளித்துள்ளது. அமேசான் மற்றும் வால்மார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் இருந்ததாக கூறப்படும் காலத்தில், 2018 ஏப்ரல் 26 ல் இது நிகழந்துள்ளது.

அமேசான் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள இந்த முதலீடு, அதன் அமெரிக்க போட்டியாளரான வால்மார்ட்டால் வாங்கப்பட்டுள்ள ஃபிளிப்கார்ட்டுடன் போட்டியிட உதவும் என கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமேசான் இந்தியா வர்த்தகத்தில் ரூ.1,950 கோடியை முதலீடு செய்தது. ரிஜிஸ்டார் ஆப் கம்பெனிஸ்- ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலின் படி, 2017 நிதியாண்டியில் அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனம் 41 சதவீத உயர்வுடன் ரூ.3,128 கோடி வருவாயை எட்டியுள்ளது.

அமேசான் இந்தியாவுக்கு புதிய முதலீடு மேலும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நுகர்வோர் மற்றும் விற்பனையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. அமேசானின் சர்வதேச அளவிலான நஷ்டம் முந்தைய ஆண்டு மார்ச் வரையான காலாண்டில் 481 டாலராக இருந்ததில் இருந்து 2018 மார்ச் வரையான காலாண்டில் 29 சதவீதம் உயர்ந்து 622 மில்லியன் டாலராக இருந்தது. இந்நிறுவனத்தின் ஆண்டு அடிப்படையிலான நஷ்டம் இந்திய வர்த்த முதலீட்டால் மேலும் அதிகரித்துள்ளது.

அண்மையில் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் படி, நிறுவனம் நஷ்டத்தை மீறி தொடர்ந்து முதலீடு செய்யும் என அதன் சி.எப்.ஓ பிரைன் ஆஸ்லாவ்ஸ்கி கூறியுள்ளார். 

“விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரில் கணிசமான வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வோம். இங்கு காணும் வளர்ச்சி ஊக்கம் அளிக்கிறது. இந்தியாவில் துவக்கப்பட்டுள்ள பிரைம் திட்டம் மற்ற நாடுகளில் பிரைம் திட்டத்தைவிட நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. உள்ளூரு மற்றும் காணொலி உள்ளடக்கத்தை சேர்த்து வருகிறோம். சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறோம். அலெக்சாவுக்கான திறன்களை இந்திய டெவல்லப்பர்கள் உருவாக்கி வருவதை காண்கிறோம். அவர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருவதும். தங்கள் திறனுக்கேற்ப வளர்ந்து வருவதும் எங்களுக்கு முக்கியமானது,” என அவர் கூறியுள்ளார்.,

ஆங்கிலத்தில்: சமீர் ரஞ்சன் | தமிழில்: சைபர்சிம்மன்