ஆதார் அடையாள எண் வாயிலாக உள்ள தனிநபர்கள் குறித்த விவரங்கள் பாதுகாப்புடன் உள்ளதாக மத்திய அரசு தகவல்!

0

கடந்த ஐந்தாண்டுகளில் 400 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் அடையாளத்தின் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்ற போதிலும் ஆதார் உடற்குறியீடுகளைத் தவறாகப் பயன்படுத்தி அடையாளத்தின் அடிப்படையிலான திருட்டு, நிதி ரீதியிலான இழப்பு ஆகிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தனித்துவ அடையாளத்திற்கான இந்தியாவின் ஆணையம் தெரிவித்தது.

ஆதார் குறித்த புள்ளிவிவரங்கள் கையாடப்பட்டன என்றும், உடற்குறியீடுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்றும், தனிநபர் குறித்த தகவல்கள் மீறப்பட்டன என்றும், இதற்கு இணையான புள்ளிவிவர தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கடந்த சில நாட்களாக பல்வேறு நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வந்த செய்திகள், கட்டுரைகள் ஆகியவை தவறான தகவல்களைத் தெரிவிப்பவை என விரிவாக விளக்கம் தெரிவித்த தனித்துவ அடையாளத்திற்கான இந்தியாவின் ஆணையம், இந்தச் செய்திகளை மிகுந்த கவனத்துடன் தாங்கள் விசாரித்ததாகவும், ஆதார் குறித்த புள்ளிவிவரங்கள் எந்தவகையிலும் அத்துமீறலுக்கு ஆட்படவில்லை என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும், ஆணையத்தின் பொறுப்பில் உள்ள தனிநபர்கள் குறித்த தனிப்பட்ட விவரங்கள் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தது.

இதே போன்ற தற்காலத்திய முறைகளை ஒப்பிடும்போது ஆதார் அடிப்படையிலான அடையாளத்தை நிர்ணயிக்கும் முறை மிகவும் செயல்துடிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது என ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது. உடற்குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தவும், அடையாளத்தைத் திருடவும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சி குறித்தும் விசாரித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திறமையைக் கொண்டதாகவே ஆதார் அமைப்பு உள்ளது என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

புள்ளிவிவரங்களை சேமிப்பது; பரிமாறிக் கொள்வது ஆகியவற்றுக்கென புள்ளிவிவரங்களை மறைத்துவைக்கும் குறியாக்க முறைகளுக்கான மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றையே ஆணையம் பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, கடந்த ஏழு ஆண்டுகளில் ஆணையத்திடம் உள்ள நாட்டு மக்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அத்துமீறலுக்கு ஆளானதாகவோ அல்லது கசியவிடப்பட்டதாகவோ எவ்வித அறிவிப்பும் எழவில்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

இணைய வலையத்தில் தோன்றி வரும் புதிய அச்சுறுத்தல்களையும் ஆணையம் கவனித்து அதற்கேற்ற வகையில் தனது பாதுகாப்பு வரைமுறைகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பாதுகாப்பு குறித்த ஆய்வுகளையும் அது மேற்கொள்வதோடு, தனது பாதுகாப்பு அம்சங்களை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது. உடற்குறியீடுகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வதற்கு பதிவு செய்யப்பட்ட கருவிகளை மட்டுமே பயன்படுத்துவது எனவும் ஆணையம் முடிவு செய்துள்ளதோடு, இவ்வாறு பதிவு செய்யப்படும் உடற்குறியீடுகள் அந்த நிலையிலேயே புள்ளிவிவரங்களை மறைத்துவைக்கும் குறியாக்க முறையில் பதிவு செய்யப்படுகின்றன. இது ஆதார் செயல்பாட்டு முறையின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

செய்தித்தாள் ஒன்றில் வெளியான உடற்குறியீட்டைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவத்தைப் பொறுத்தவரையில், வங்கி ஒன்றின் வணிகத் தொடர்பாளரின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது உடற்குறியீட்டையே தவறாகப் பயன்படுத்த முயன்ற சம்பவமே தவிர வேறெதுவுமல்ல என்று குறிப்பிட்ட ஆணையம், ஆணையத்தின் உள் பாதுகாப்பு முறையினால் இந்த முயற்சி கண்டுபிடிக்கப்பட்டு, ஆதார் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

இந்த ஆதார் செயல்பாட்டு முறையில் இதர அமைப்புகளையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்வது பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வாறு கூட்டாளிகளை சேர்த்துக் கொள்வது, அவர்களோடு இணைந்து செயல்படுவது, புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டு ஆதார் குறித்தி தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஆதார் சட்டத்தின் கீழ் கண்டிப்பான வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆணையம் தெரிவித்தது.

இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறித்த செய்திகள், இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களின் சுக்கமான வடிவம் பொதுவெளியில் எளிதாகக் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆகியவை குறித்து கருத்துத் தெரிவித்த ஆணையம் இந்த பதிவேற்றப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களின் சுருக்கமான வடிவம் அடையாளப்படுத்தும் பயன்பாட்டாளர் முகமைகள் மற்றும் இணையம் மூலமான வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பயன்படுத்துவோர் முகமைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதோடு அங்கீகரிக்கப்பட்ட அடையாளப்படுத்தும் சேவை முகமைகள் மூலமே இவை வழங்கப்படுகின்றன. 

மேலும் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள், வரையறைகள், தரவீடுகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு உகந்த வகையில் மத்திய அடையாளங்கள் சேமிப்புக் கிடங்குடன் தொடர்பு கொண்டு அடையாளம் காட்டுவதற்கென பாதுகாப்பான வலைப்பின்னல் தொடர்பையும் இந்தச் சேவை முகமைகள் உருவாக்கியுள்ளன.

இணையம் மூலமான வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்து வைப்பது, அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் முறையான ஒழுங்குமுறைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிடும் செய்திகள், உயர்தர புகைப்படத்திலிருந்து கண்மணியைப் பதிவு செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிடும் செய்திகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், அவற்றைச் சேமிப்பது, பகிர்ந்து கொள்வது உள்ளிட்டு இணையம் மூலமான வாடிக்கையாளர்களின் விவரங்கள் குறித்து ஆதார் (அடையாளப்படுத்தும்) ஒழுங்குமுறைகளில் மிகவும் கடுமையான விதிமுறைகள் உள்ளன என்று ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. 

இவ்வாறு விவரங்களைச் சேமிப்பது, பகிர்ந்து கொள்வது ஆகிய இரண்டிற்குமே குறிப்பிட்ட அந்த நபரின் ஒப்புதல் மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய அங்கீகாரம் அல்லது ஒப்புதல் பெறாத வகையில் கருவிழித்திரை (IRIS) அல்லது விரல் ரேகைகளைப் பதிவு செய்வது அல்லது சேமிப்பது அல்லது உடற்குறியீடுகளை மறுசுழற்சி செய்வது அல்லது அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய எந்தவொரு முயற்சியும் ஆதார் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாகும்.

கைபேசி சேவைகளை வழங்குவோரும், வங்கிகளும் இணையம் மூலமான வாடிக்கையாளர் விவரங்களை சேகரிப்பதற்கென தனியார் முகமைகளை பயன்படுத்தி வருவதால் இத்தகைய புள்ளிவிவரங்கள் அதற்கு இணையான புள்ளிவிவரத் தொகுப்புகளிலும் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றது என்றும் நாட்டில் தனிநபரின் தனிமை குறித்த சுதந்திரத்திற்கென சட்டம் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய பலவீனங்கள் உள்ளன என்று செய்தித் தாள்களில் வெளியாகும் அறிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கை கருத்து தெரிவித்தது. இவ்வகையில் ஆதார் குறித்த அடையாளப்படுத்தும் ஏற்பாடுகள் அல்லது இணையம் மூலமான வாடிக்கையாளர் விவரங்கள் போன்றவற்றை அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் எனப்தோடு, இவைகளை நியமனம் செய்வது, அவற்றின் பொறுப்புகள், சட்டரீதியான கடமைகள், அவற்றை மீறுகையில் தண்டனைக்கான ஏற்பாடுகள் ஆகியவை ஆதார் சட்டத்தில் மிகத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. 

அச்சட்டத்தின் கீழ் இவை குறித்த வழிகாட்டி நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. வங்கிகளோ அல்லது கைபேசி சேவை நிறுவனங்களோ தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரங்களை ஆணையத்திடமிருந்து பெறுவதற்கு அதன் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர் முகமை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை முகமையாக மாற வேண்டும். தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகே இந்த இணையம் மூலமான வாடிக்கையாளர் விவரங்கள் ஆணையத்தால் இந்த முகமைகளுக்கு வழங்கப்படும். அதுவும் எந்த நோக்கத்திற்காக இவை பெறப்பட்டதோ அதற்கு மட்டுமே அவற்றால் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு கைபேசி சேவை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இணையம் மூலமான விவரங்களைப் பெறலாம். 

எனினும் உடற்குறியீடுகள் அற்ற புள்ளிவிவரங்களை மட்டுமே அது தனது பதிவேடுகளில் வைத்திருக்க முடியும் என்பதோடு, கைபேசி சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே இந்தப் புள்ளிவிவரங்களை அதனால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே போன்றே, வங்களும் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய இணையம் மூலமான வாடிக்கையாளர் விவரங்களை பெற்றுக் கொண்ட பிறகு உடற்குறியீடுகள் அற்ற புள்ளிவிவரங்களை மட்டுமே அது தனது பதிவேடுகளில் வைத்திருக்க முடியும் என்பதோடு வங்கிச் சேவையை வழங்குவதற்காக மட்டுமே இந்தப் புள்ளி விவரங்களை அது பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளரின் ஒப்புதல் பெறாமல் வேறெந்த நோக்கத்திற்காகவும் அவற்றைப் பயன்படுத்த முடியாது. 

மேற்கூறிய விதிமுறைகளை மீறுவதென்பது ஆதார் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியதாகும் என்பதோடு அது கண்டிப்பாகவும் நடைமுறைபடுத்தப்படும். சிறந்த நிர்வாகத்திற்கும், மக்களுக்கு வலுச்சேர்ப்பதற்கும் மிக முக்கியமானதொரு கருவியான இது ஆதார் அடிப்படையிலான இணையம் மூலமான வாடிக்கையாளர் விவரங்களின் மூலம் 4.47 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக் கணக்குகளைத் துவக்க உதவியுள்ளது. பஹல் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுவிற்கான மானியம், கல்வி உதவித்தொகைகள், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், ஓய்வூதியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்த அரசிற்கு உதவியுள்ளது. 

இதன் மூலம் ஊழல், பணம் வேறுவழிகளில் செலவழிக்கப்படுவது, இடைத்தரகர்களால் களவாடப் படுவது போன்றவற்றையும் இது அகற்றியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் மூலம் ரூ. 49,000 கோடியை அரசு சேமிக்க முடிந்துள்ளது. ஆதார் அடிப்படையிலான பொது விநியோக முறை பெறுவதற்குரிய பயனாளிகளுக்கு மட்டுமே உணவுப்பொருட்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, மோசடிப் பேர்வழிகள், ஊழல் பேர்வழிகளால் இவை கபளீகரம் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள சாதாரண ஆண்கள், பெண்களின் வாழ்க்கையை ஆதார் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதற்கு இவை சில உதாரணங்களே ஆகும். மக்களுக்கு உதவிடும் வகையில், அவர்களை ஒன்றிணைத்துக் கொண்ட வகையில், பாதுகாப்பான வகையில் செயல்பட வேண்டிய இக்கடமையினை வழுவாது மேற்கொள்ள இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (ஆதார்) தளரா உறுதிபூண்டுள்ளது.