உஷார் ரிப்போர்ட்: அதிக ஊக்கத் தொகைக்காக ஓலா, உபெர் கார் ஓட்டுனர்கள் செய்யும் தில்லுமுல்லுகள்!

5
"சில சமயம் புக் செய்த பயணிகளுக்காக காத்திருப்பது முட்டாள்தனமானது, அதுவும் அதிக போக்குவரத்து இருக்கும் நேரங்களில். அதனால் நாங்கள் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, வாடிக்கையாளரை அதற்கு அபராதம் கட்டவைப்போம். இப்படி செய்தால் எங்களின் சலுகை பணம் கழியாது...,” 

என்று ஒப்புக்கொண்டார் ஓலா மற்றும் உபெர் கார் ஓட்டும் ஓட்டுனர் ஒருவர். 

இது ஓலா, உபெர் டிரைவர்கள் செய்யும் பொதுவான குறுக்குவழி. இதில் தவறு செய்ததாக அவர்கள் மீது எந்த கேள்வியும் எழாது. பல சமயங்களில், ஒரு வாடிக்கையாளர் காரை புக் செய்து, காரே வராமல் அவர்கள் அதற்கு கட்டணம் செலுத்தவேண்டிய சூழ்நிலைகளை அடிக்கடி நிகழ்வதும் டிரைவர்களின் சாமர்த்தியத்தினால்தான் என்று பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. 

ஓலா, உபெர் பயணிகள் பலர் தாங்கள் சந்தித்த இன்னல்களையும், டிரைவர்களால் ஏமாற்றப்பட்டதை பற்றி ட்வீட் செய்யும்போதே இது போன்ற தில்லுமுல்லுகள் வெளியில் வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் நஷ்டமடைவதோடு, டிரைவர்கள் எந்த பாதிப்பும் இன்றி அதிக வருமான ஈட்டுவதே கொடுமை. 

பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒலாவில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர்,  டிரைவர்கள் ஈடுபடும் பல குறுக்குவழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

ஓலா, உபெர் ஓட்டுனர்கள் தொழில்நுட்பத்தை உடைத்து செய்யும் தில்லுமுல்லுகள்: 

கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை பெற செய்யும் மோசடி- ஓலா டிரைவர் ஒருவர் கூறுகையில்,  

”நான் இதற்கு முன் வேலைக்கே போனதில்லை. எனக்கு ஊர் சுற்றப்பிடிக்கும். அப்போது ஓலா ஒரு சிறந்த வழி என்று நினைத்தேன். அதில் கிடைக்கும் ஊக்கத்தொகை மூலம் ஒரு நாளைக்கு ரூ.8000 முதல் ரூ.10000 வரை கிடைக்கும் என்று தெரியவந்தது. நான் ஒரு நாளைக்கு செய்யும் அதிக சவாரிகளின் அடிப்படையில் அந்த தொகை எனக்கு கிடைக்கும் என்று அறிந்தேன். ஓலா தொடங்கிய புதிதில் ஓலா டிரைவர்கள் பல லட்சம் சம்பாதித்தனர்.” 

அதிக சவாரிகளை காண்பித்து அதிக வருமானத்தை டிரைவர்கள் ஈட்டத் தொடங்கினர். அதற்கு அவர்கள் பல குறுக்குவழிகளையும், தில்லுமுல்லுகளையும் செய்துவருகின்றனர் என்றார். 

பொதுவாக ஒரு ஓட்டுனரிடம் இரண்டு போன்கள் இருக்கும். அதில் ஒன்று ஓலா டிரைவர் ஆப், மற்றொன்று வாடிக்கையாளர் ஆப். இதில் சவாரிகளை புக் செய்து அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் படி அவர்களே செய்வர். இதன் மூலம் ஒரு டிரைவர் ஒரே நாளில் சுமார் 30 ட்ரிப்கள் அடித்ததாக கேப் அலுவலக சிஸ்டத்தில் காட்டும். 

தில்லுமுல்லு 1: நண்பர் உதவியுடன் பயணம் புக் செய்தல்: உதாரணத்திற்கு டிரைவர் ஏ ஒரு ஏரியாவில் காருடன் இருக்கிறார். மதிய நேரப்பொழுதில் அங்கே சவாரி ஏதும் கிடைக்கவில்லை. அவரது நண்பர் பி அதே ஏரியாவில் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஓலாவின் மேப் ரியல்டைமில் கேப் இருக்கும் இடத்தை காட்டும் வசதி கொண்டது. எனவே அவரின் நண்பர் பி’ யின் உதவியோடு, ஏவின் கேப் இருக்கும் இடத்தில் மேப்பின் பின்னை வைத்து ஒரு சவாரியை புக் செய்வார், ஒரு சவாரி சென்றது போல் காட்டிவிடும். இதன்மூலம் சிஸ்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து டிரைவர்கள் பயனடைந்து வருகின்றனர்.  

தில்லுமுல்லு 2: இரவு வீடு திரும்பும்போது செய்யும் புக்கிங்- பொதுவாக ஒரு ஓட்டுனர் தனது ஒரு நாள் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பவேண்டும் என்றால் காலியாக காரை ஓட்டிச்செல்வது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். கடைசியாக முடித்த ட்ரிப் வேறு ஏதோ ஏரியாவில் இருந்தால், அவர்களின் வீடு வரை செல்ல பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த ஓலா, உபெர் ஓட்டுனர்கள் ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்துள்ளனர். தங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் வகையில், தனது நண்பர் ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து வீடு இருக்கும் பகுதிவரை ஒரு ட்ரிப் புக் செய்யச்சொல்வார் ஓலா டிரைவர். 

“இப்படி செய்வது மூலம், டிரைவருக்கு ஊக்கத்தொகையுடன் பெட்ரோல் செலவுக்கான தொகையும் கிடைத்துவிடும். இதில் அவர் சொந்த செலவு ஏதும் இருக்காது,” என்றார் ஓலாவின் முள்ளாள் ஊழியர். 

தில்லுமுல்லு 3 : புறநகர்களில் சுற்றுவது- பல கார்களும் டிரைவர்களும் ஓலா, உபெர் தளங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் விதிமுறைகளின் படி இயங்காமல் உள்ளனர். பொதுவாக பதிவுசெய்துள்ள கார்கள் மற்றும் ஓட்டுனர்கள் நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லவேண்டும், ஆனால் அதில் ஒரு சிலர் குறிப்பாக புறநகர்களில் உள்ள கார் ஓட்டுனர்கள் அதேப்பகுதிக்குள்ளாகவே சவாரிகளை ஏற்றிச்செல்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் மற்ற இடங்களுக்கான சவாரி அழைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்துவிடுகின்றனர். 

தில்லுமுல்லு 4: தாங்கள் இன்னொரு சவாரி புக் செய்யமுடியுமா மேடம்/சார்? - ஓலாவின் விதிமுறைகள் படி ஒரு டிரைவர் 18 சவாரிகளை ஒரு நாளில் முடித்தால் மட்டுமே அவருக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். பெரும்பாலான டிரைவர்கள் அதை முடித்தாலும் சிலரால் அது முடிவதில்லை. அது போன்ற சமயங்களில் அவர் என்ன செய்வார் தெரியுமா?

நீங்கள் பயணியாக உங்கள் பயணத்தை முடித்து இறங்கும்போது, அவர் உங்களிடம் மீண்டும் ஒரு ட்ரிப் புக் செய்யுங்கள் என்று கேட்பார்கள். நீங்களும் பாவம் என்று செய்ய நேரிடலாம். ஓலா மணி மூலம் நீங்கள் புக் செய்தால் அந்த சவாரிக்கான தொகையையும் அவர்கள் உங்களுக்கு தர முன்வருவார்கள் ஏனெனில் அப்போதுதான் அது ஒரு சவாரியாக அவர்கள் கணக்கில் விழும், ஊக்கத்தொகையும் கிடைக்கும். நீங்கள் அவ்வாறு புக் செய்தால் குறிப்பிட்ட தூரம் வரை சென்றுவிட்டு அந்த பயணத்தை  முடித்துக்கொள்வர். 

நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை- முன்பெல்லாம் பயணி தாங்கள் புக் செய்யும் இடத்தின் அருகில் காட்டும் கார் மீது பின்னை வைத்து பயணத்தை புக் செய்யமுடியும். அப்படி செய்யும்போதே நண்பர்கள் உதவியுடன் டிரைவர்கள் தில்லுமுல்லு செய்வதால், தற்போது பயணி புக் செய்யும்போது தானியங்கியாக காரை அதுவே தேர்ந்தெடுத்து அனுப்பும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

“தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த பிரச்சனையை கையாள்கிறோம். இதற்காக குறிப்பிட்ட டிரைவர்களை நாங்கள் தண்டிக்கவில்லை,” என்றார் ஓலாவின் முன்னாள் ஊழியர். 

அதேபோல் ஓலா, ஒரு பயணி உண்மையானவரா அல்லது டிரைவரின் கூட்டாளியா என்று கண்டுபிடிக்க சில சட்டத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஒரு உண்மையான வாடிக்கையாளர் பல இடங்களில் தனது பயணத்தை புக் செய்வார். அதுவும் வெவ்வேறு டிரைவர்களை புக் செய்வதே வழக்கம். ஒரு பயணி குறிப்பிட்ட ஒரே இடத்தில் இருந்துகொண்டு ஒரே டிரைவரை புக் செய்வது போல் தெரிந்தால் நாங்கள் அவரை டிரைவரின் கூட்டாளி என்று அறிந்துகொள்வோம் என்றும் அவர் கூறினார். 

தில்லுமுல்லு 5: தொழில்நுட்ப ஹேக்கர்- ஓலா மற்றும் உபெர் கூட்டமைப்பு முறையில் இயங்குவதால், தனிப்பட்ட ஓட்டுனர்கள் முதல் டிரைவர்கள் குழு நிறுவனம் வரை எவர் வேண்டுமென்றாலும் இவர்களின் தளத்தில் பதிந்துகொள்ளமுடியும். அதனால் 15 முதல் 20 டிரைவர்கள் கொண்ட சிறு நிறுவனங்கள் புக்கிங்கை போன் மட்டுமின்றி கணினி மூலமும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.  

“இதுபோல் செய்ய சந்தையில் பல மென்பொருட்கள் உள்ளது. இதற்காக சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவரை பணியமர்த்தி, போன் மூலம் மட்டுமே செய்யப்படவேண்டிய புக்கிங்கை கணினிகள் கொண்டு செய்ய, இது போன்ற குழுக்கள் குறுக்குவழிகளை கண்டுபிடித்துள்ளனர்,” என்றார். 

நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை- இதை தவிர்க்க, எல்லாவற்றையும் மறைகுறியாக்கி உள்ளனர். இதனால் கணினி மூலம் சுலபமாக ஹேக் செய்யமுடியாது. 

தில்லுமுல்லு 6: உயர்த்தப்பட்ட கட்டணம்- பயணத்தின் கட்டண உயர்வை எதிர்த்து கடுமையான விதிமுறைகள் இருப்பினும், டிரைவர்கள் சில குறுக்குவழிகளை கையாண்டு கட்டணத்தை உயர்த்தி காட்ட முற்படுகின்றனர். 

டிரைவர்கள் ஒரு சிலர் இணைந்து ஒரு ஏரியாவில் இருக்கும்போது, அதில் உள்ள பலரும் தங்களின் டிவைசை அணைத்துவிடுவர். சிலர் மட்டுமே ஆன்லைனில் இருப்பது போல் காட்டிக்கொள்வர். அந்த இடத்தில் டிமாண்ட் இருப்பது போல் காட்டினால், கட்டணம் அதிகமாக மாறும் என்று அவர்களுக்கு தெரியும். குறைவான கேப்கள் இருப்பதைக் கண்டு அலுவலகத்தில் அதிக கட்டண விகிதத்தை ஆன் செய்தவுடன் அங்குள்ள மற்ற டிரைவர்கள் தங்கள் டிவைசை ஆன் செய்துவிடுவர். உடனே பீக் ப்ரைசிங் என்று சொல்லப்படும் கட்டளை பயணிகளுக்கு வரத்தொடங்கிவிடும். இதன்மூலம் டிரைவர்கள் அதிகம் சம்பாதிக்கமுடியும். 

நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை- ஓலா இதை தடுக்க, 10 டிரைவர்கள் ஒரே நேரத்தில் தங்களின் டிவைசை அணைத்துவைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அதே போல் ஒரே சமயத்தில் அவை அணைக்கப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகின்றனர். 

தில்லுமுல்லு 6: வெளியூர் பயணம்- ஓலா அண்மையில் தான் வெளியூர் பயண சேவையை தொடங்கியுள்ளது. ஆனால் டிரைவர்கள் அதற்குள்ளாகவே தங்களின் கைவரிசையை காட்டத்தொடங்கி உள்ளனர். 

ஒரு வாடிக்கையாளர் வெளியூர் பயணத்தை புக் செய்து அதன் கட்டணம் ரூ.2500 என்றால், அந்த டிரைவருக்கு அதில் 800 கழித்து வரும் தொகையை ஓலா கமிஷனாக வழங்குகிறது. அதனால் பல சமயங்களில், ஓட்டுனர்கள் அந்த புக்கிங்கை கான்சல் செய்ய சொல்லிவிட்டு அந்த கட்டணத்தை விட குறைவாகம் அதாவது ரூ.2000 க்கு வருவதாக வாடிக்கையாளர்களை ஆசைக்காட்டுகின்றனர். இந்த முறையில் ஓலாவை கமிஷனுக்காக ஓட்டுனர்கள் ஏமாற்றிவிடுகின்றனர். 

நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை- ஒரு சில சந்தர்பங்களில் அவ்வாறு நடக்கலாம் ஆனால் நாங்கள் அதை கண்டுபிடித்துவிடமுடியும் என்கிறார் ஓலாவில் முன்னாள் ஊழியர். ஒவ்வொரு முறை ஒரு ட்ரிப் கான்சல் செய்யப்படும் போதும் சில நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். குறிப்பாக வெளியூர் பயணத்தில் அவ்வாறு புக்கிங் ரத்து செய்யப்பட்டால் அது தில்லுமுல்லு என்று எளிதாக கண்டுபிடித்து விடமுடியும் என்றார். 

இதைத்தவிர டிரைவர்களே ஒப்புக்கொண்ட சில தில்லுமுல்லுகள் இதோ...

ஓலா-உபெர் இரட்டை சவாரி: சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த உபெரும் பெங்களுருவை சேர்ந்த ஓலாவும் தொழில் போட்டியில் முட்டிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப்பற்றி கவலையின்றி இருக்கும் ஓட்டுனர்கள் இரண்டு தளங்களிலும் சேர்ந்தே இணைந்துள்ளனர். பல சமயம் நீங்கள் ஓலாவில் புக் செய்தால் அதே டிரைவர் உங்களை உபெரிலும் அவரை புக் செய்யச்சொல்வார். இரண்டிலும் சவாரியாக காண்பித்து அதே இடத்தில் இருந்து பயணித்து ஊக்கத்தொகையை இரு நிறுவனங்களிடம் இருந்தும் பெற்றுவிடுவர். 

கார் பழுது மற்றும் சொந்த உபயோகம்: ஓலா பார்ட்னர் ஆப்பில் ‘கார் பழுது அல்லது சொந்த உபயோகத்திற்காக பயணத்தை ரத்து செய்யமுடியும்’ என்று ஒரு வசதி உள்ளது. டிரைவர்கள் இதை தங்கள் நன்மைக்கு பயன்படுத்திக்கொள்வர். ஒரு வாடிக்கையாளர் 10 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட பயணத்துக்கு காரை புக் செய்தால், ஒரு சிலநேரத்திற்கு பின் டிரைவர் பயணியை அழைத்து தங்களின் கார் டயர் பன்க்சர் அதனால் நீங்களே புக்கிங்கை கான்சல் செய்துவிடுங்கள் என்று கோரிக்கை வைப்பார். பயணியும் அதை நம்பி கான்சல் செய்து வேறு புக்கிங் செய்வார். 

இது தொடர்ந்து நடந்ததால் உஷாரான ஓலா, பயணிகளின் நேரடி கருத்துகள் கேட்டு தற்போது இந்த முறை கான்சலை தவிர்த்துள்ளது. 

’ஓலா மணி’ பிரச்சனை: இது ஒரு அதிமுக்கிய பிரச்சனை. பெரும்பாலான சமயத்தில் டிரைவர்கள் ஓலா மணியில் இருந்து பயணி கட்டணம் செலுத்துவதை விரும்புவதில்லை. அப்படி நீங்கள் செய்யும் சவாரியின் போது ஓலா டிரைவர்களின் ஒப்பாரியை கேட்டே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இரண்டே நாட்களில் ஓலா, டிரைவர்களுக்கு பணத்தை அனுப்பிவைத்தும் பலமுறை ஓட்டுனர்கள் ‘ஓலா மணி’ சவாரியை ஏற்றுக்கொள்வதில்லை. 

இது போன்ற அடுக்கடுக்கான தில்லுமுல்லுகள் இந்தியாவில் மட்டும் நடப்பவை அல்ல. உலகம் முழுதும் கேப் டிரைவர்கள் பின்பற்றும் குறுக்குவழிகள் தான் இவை. எந்த தொழில்நுட்பமும் எல்லாவற்றையும் சமாளிக்க வல்லமை படைத்தது இல்லை. ஒரு பிரச்சனையை சரிசெய்தவுடன் வேறு ஒரு வழியை டிரைவர்கள் கண்டுபிடித்துக்கொண்டே தான் போவார்கள். வாடிக்கையாளர்கள் ஆகிய நாம் தான் மேலும் உஷாராக இருக்கவேண்டும். 

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப்