ஆங்கிலத்தை மட்டுமே நம்பிய காலம் இனி இல்லை, தொழிலில் மேம்பட தாய்மொழி போதுமே!

0

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டம் நமது தாய்மொழிகளின் துணை இல்லாமல் வெற்றியடைய முடியாது. இந்தியாவில் உள்ள 56 பெருநகரங்களை தவிர்த்து ஏனைய 65 சதவீத மக்கள் கிராமப்புறங்களில்தான் வசிக்கிறார்கள். ஆனால் இன்னும் இரண்டு தசாப்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களை நோக்கி நகர்வார்கள். அப்போது அந்த புதிய பெருநகர குடிமக்களுக்கு ஆங்கிலம் கை கொடுக்கப் போவதில்லை. மத்திய, மாநில அரசுகள் உண்மையிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க விரும்பினால் நம் உள்ளூர் மொழிகளை பயன்படுத்தவேண்டியது அவசியம்.

ஏதோ இந்திய வர்த்தகமே ஆங்கில மொழியை நம்பி இயங்குவதை போன்ற மாயை இங்கு நிலவுகிறது. ஆனால் விவசாயம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது. ஆங்கிலம் தெரியாதது கவுரவக் குறைச்சலாக கருதப்படுகிறது. முன்னேற தடைக்கல்லாய் உருவகப்படுத்தப்படுகிறது. தற்காலிக தீர்வாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் செயலிகளை அவர்களுக்கு பரிச்சயப்படுத்தலாம். ஆனால் அந்த 400 மில்லியன் மக்களுக்கு அது நிரந்தர தீர்வாக இருக்கவே முடியாது.

உள்ளூர் மொழிகளை உதாசீனப்படுத்தவதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பும், சமூக அமைப்பும் ஆங்கிலம் பேசும 40 மில்லியன் மக்களின் கையில் சேர வாய்ப்பிருக்கிறது. சென்சஸ் கணக்கின்படி இந்தியாவில் 100 மில்லியன் மக்களால் ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனால் 850 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழிகளில் உருவாகும் வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அந்த சென்சஸ் கணக்கின்படி, 75 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள். 74 மில்லியன் மக்கள் தெலுங்கு பேசுகிறார்கள். 38 மில்லியன் மக்கள் கன்னடம் பேசுகிறார்கள். 400 மில்லியன் மக்கள் இந்தி பேசுகிறார்கள். இவர்களுக்கு தேவைப்படும் விவரங்களை இவர்கள் மொழியிலேயே தர சின்ன சின்ன முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் உபெர், ஓலா என ஆங்கிலத்தை பிரதானமாக முன்னிறுத்தும் நிறுவனங்களைத் தாண்டி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

'பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கிலம் முக்கியமானதாக இருந்தாலும் உள்ளூர் மொழிகளில் கவனம் செலுத்துவது தொழில்துறையை மேலும் வளர்க்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்தின் இடத்தை இந்த மொழிகள் பிடித்துக்கொள்ளும்' என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.எப்.ஓவான மோகன்தாஸ் பாய்.

இதனால்தான் கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வரை அனைவரும் உள்ளூர் மொழிகளில் கவனம் செலுத்துகிறார்கள். இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களும் அடுத்து உள்ளூர் மொழிகளின் துணையோடு இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம் எப்போது வரும்? அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?

நம் தொழிற்சாலைகளுக்கு தேவை நம் மொழி

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இயந்திர கையேடுகள் அந்தந்த நாட்டு மொழிகளில்தான் உள்ளன. இவர்கள் பயன்படுத்தும்போது நம்மால் ஏன் முடியாது? இதோ உங்கள் புரிதலுக்காக சில தகவல்கள்.

சென்னையில் உள்ள ஹுண்டாய் பேக்டரியில் வேலை பார்க்கும் 3000 பேரும் அரைகுறை ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ஆனால் நம்புங்கள் இவர்கள் வாட்ஸ் அப்பில் தமிழில்தான் உரையாடுகிறார்கள். கதை, கவிதை என அத்தனையையும் தமிழில்தான் சொல்கிறார்கள். சில சமயங்களில் இயந்திரங்களை பற்றியும். இயந்திரங்களை பற்றி இப்படி தமிழில் உரையாடுவது ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம். ஒருவேளை கையேடுகளும் தமிழில் இருந்தால்? மணிக்கணக்கில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலை இல்லையே.

பெங்களூரில் டொயோட்டோவும் போஸ்ச் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு மெஷின்கள் குறித்து பயிற்சி அளிப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றன. ஸ்மார்ட்போன்களும், உள்ளூர் மொழிகளைக் கொண்ட செயலிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊழியர்களுக்கு உள்ளூர் மொழிகளில் மேனுவல் தயாரிக்கும் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் ஒரு சர்வதேச நிறுவனத்தின் உயரதிகாரி. ஆங்கில மொழி தெரியாத ஊழியர்கள், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த முதலாளிகள்- இந்த முரண்பாடுதான் சமூகத்தின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம். 

உள்ளூர் மொழிகள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் வியாபாரத்திற்கு லாயக்கற்றவர்கள் என்ற பொதுவான எண்ணம் இங்கு நிலவுகிறது. ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை.

'மெஷின் மேனுவலை உள்ளூர் மொழிகளில் தயாரிப்பது பெரிய வேலையே அல்ல. சொல்லப்போனால் அப்படி செய்வது நமது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்' என்கிறார் குருராஜ் தேஷ்பாண்டே. சுயதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தேஷ்பாண்டே பவுண்டேஷனின் நிறுவனர் இவர்.

ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

இணைய நிறுவனங்களே இலக்கு

இ-காமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தகம் மிகப் பெரிது. ஆனால் அவர்கள் இனியும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்தாமல் இருந்தால் தொழில் செய்வது கஷ்டம். அந்த நிறுவனங்களில் பதிவு செய்துள்ள 200,000 வியாபாரிகளில் வெறும் 15 சதவிதம் பேரே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். மொழிப்பிரச்னை தான் இதற்கு காரணம். இவர்களை செயல்பட வைப்பதற்காகவே சில மொழி பெயர்ப்பாளர்களை வேலைக்கு வைத்திருக்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள்.

'இணைய உலகை ஆங்கிலமே ஆள்கிறது. ஆனால் அது மற்ற உள்ளூர் மொழிகளை ஓரங்கட்டுவதும் நடக்கத்தான் செய்கிரது' என்கிறார் வைத்தீஸ்வரன் என்ற ஆலோசகர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சில குறிப்பிட்ட இடங்களை தேர்ந்தெடுத்து அங்கே உள்ளூர் மொழிகளில் தங்கள் வியாபாரத்தை பரீட்சித்துப் பார்ப்பது அவசியம் என்கிறார் இவர்.

ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் வருமானம் ஒரு பில்லியன் டாலரை தாண்டிவிட்டது. ஆனால் நிலையான வாடிக்கையாளர்களை பெற இவர்கள் உள்ளூர் மொழிகளில் கால் பதிக்க வேண்டியது அவசியம். ஆனால் இதற்காக தங்கள் மென்பொருளையே அவர்கள் மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். மேலும் மொழிப்புலமை உள்ளவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். செலவு பிடிக்கும் வேலை இது.

கோடிக்கணக்கான பணம் புழங்கும் இந்தத் துறையில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டம் தான்.

'இப்படி மொழிவாரியாக வகைப்படுத்த செலவாகும்தான். ஆனால் காஸ்ட்லி இல்லை. மேலும் இது வருமானம் பெருக்கும் வழிதானே' என்கிறார் Reverie Technologies நிறுவனத்தின் இணை நிறுவனர் அர்விந்த் பானி.

சாக்கு சொல்லாதீர்கள்

இந்த பணியை செய்வதற்கு பல செயலிகள் இருக்கின்றன. யுவர்ஸ்டோரியின் 'பாஷா' தளம் உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பங்களை உருவாக்கும் தொழில் முனைவோர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களை பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்தியாவில் ஏகப்பட்ட மொழிகள் இருப்பதுதான் பிரச்னை என்பார்கள் சிலர். ஆனால் அது உண்மை இல்லை. சினிமா, ஸ்போர்ட்ஸ் போன்றவை நம்மை ஒன்றிணைத்தது போல இனி வர்த்தகமும் ஒன்றிணைக்கும். அப்படி நடந்தால் இந்தியா முன்னேற்ற பாதையில் மிக வேகமாய் பயணிக்கும். 'மேல்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களின் ரசனைகளை குறை கூறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. இதை மாற்ற மொழியால் மட்டுமே முடியும்' என்கிறார் ஸ்டீவன் பிங்கர்.

ஆக்கம்: விஷால் க்ருஷ்ணா | தமிழில்: சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப்களை அடையாளம் காட்டிய 'பாஷா' திருவிழா

கைபேசிகளில் உள்ளூர் மொழிகளின் அறிமுகம் வெற்றிக்கு வித்திடும்!

இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவும் 'ஃபர்ஸ்ட் டச்'