இசைப்புயல் ரஹ்மான் உடன் இசைக் கலை தொடர்: அமேசான் பிரைம் வீடியோவில்! 

’ஹார்மோனி வித் ஏ.ஆர். ரஹ்மான்’ என்ற தலைப்பில் புனைக் கதை சாராத இசைக் கலை தொடரினை முதன் முதலாக தயாரித்துள்ளது  கே.பாலசந்தரால் நிறுவப்பட்ட கவிதாலயா ப்ரொடக்சன்ஸ்!  

0

காலத்தால் அழியாத திரைக் காவியங்களை உருவாக்கியவரும் 'தாதா சாகிப் பால்கே விருது' பெற்றவருமான கே.பாலசந்தரால் நிறுவப்பட்ட கவிதாலயா புரடக்சன்ஸ் நிறுவனம், “ஹார்மோனி வித் ஏ.ஆர். ரஹ்மான்” (Harmony with AR Rahman) என்ற தலைப்பில் புனைக் கதை சாராத இசைக் கலை தொடரினை முதன் முதலாக உருவாக்கி, அதனை அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்ப உள்ளது.

பண்டைய இந்திய இசையின் மரபு சார்ந்த பெருமையையும், எதிர்கால புதுமைப் போக்குகளையும் ஒருங்கிணைத்து ’ஹார்மனி வித் ஏ.ஆர். ரஹ்மான்’ என்ற பண்ணிசைத் தொடர் செவிக்கு இனிய இசை விருந்தாகவும் திரையில் கண்டுகளிக்கக்கூடிய நிகழ்வாகவும் வெளிவரவுள்ளது. 

ஒலிகள் ஏராளமாக இருந்தாலும் இசை என்பது மனம், உடல், ஆன்மா ஆகிய இயற்கையுடனான ஒருங்கிணைப்புதான், இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய இத்தொடர் ஆகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரபு சார்ந்த இசை கலைஞர்கள் வாழும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய கலை மரபின் செழிப்பான செல்வங்களை வெளிக் கொணரும் வகையில் இந்த தொடர் 5 பாகங்களாக ஒளிப்பரப்பப்படவுள்ளது. இத்தகைய இசைக் கலைஞர்களை பற்றிய இந்த தொடரில், 

அவர்களின் அன்றாட கலை பயிற்சி முறை மற்றும் அவர்களுடைய இசைப் பயணத்தின் பல்வேறு காலக் கட்டங்கள், மாணவர்களுக்கு அக்கலையை அவர்கள் கற்பித்த விதம், அவர்கள் வாழ்வில் சந்தித்த சவால்கள் ஆகியவற்றையும் ஏ.ஆர். ரஹ்மான் தத்ரூபமாக வெளிப்படுத்தவுள்ளார்.

21-ஆம் நூற்றாண்டின் இன்றைய இளைய தலைமுறையினர் பண்ணிசையை அதன் மரபு நுட்பங்களுடன் புரிந்துகொள்ளும் வகையில் இது வெளி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத் திரையிலும், வெள்ளித் திரையிலும் 30-ஆண்டுகளுக்கும் மேலாக கதை சொல்லும் கலையில் கைதேர்ந்து விளங்கும் கவிதாலயா புரடக்சன்ஸ் வலைத் திரையில் (OTT Platform) கால் பதிப்பது பற்றி இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் புஷ்பா கந்தசாமி கூறுகையில், 

"பொழுதுபோக்கு தொழில்துறையில் உலக அளவிலும் தற்போதைய போக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இக்கால பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த புதிய முயற்சியினை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். உள்ளடக்கத்திலும், முன்னேற்ற போக்கிலும் தக்க மாற்றங்களை மேற்கொண்டு வலைத் திரை தளத்தில் நாங்கள் வெற்றிகரமாக கால்பதித்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

’ஹார்மோனி வித் ஏ.ஆர். ரஹ்மான்’ அறிமுக விழாவில்  கவிதாலயா மேலாண் இயக்குனர் புஷ்பா கந்தசாமி உட்பட விருந்தினர்கள்
’ஹார்மோனி வித் ஏ.ஆர். ரஹ்மான்’ அறிமுக விழாவில்  கவிதாலயா மேலாண் இயக்குனர் புஷ்பா கந்தசாமி உட்பட விருந்தினர்கள்

இந்திய இசை பாரம்பரியத்தின் பெருமையையும் உன்னதத்தையும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற உலகத் தளத்திற்கு கொண்டு செல்லும் கவிதாலயாவின் போற்றுதலுக்குரிய முயற்சி பற்றி ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், 

"கணினிமயமான தற்கால போக்குக்கு ஏற்ப கவிதாலயா மேற்கொண்டுள்ள இத்தகைய புதிய முயற்சியை நான் மனதார பாராட்டுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் புகழ்பெற்ற இயக்குனர் இமையம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட கவிதாலயா நிறுவனம் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று தெரிவித்தார்.

மொத்தம் 5 பாகங்களை கொண்டுள்ள இந்த தொடரின் முதல் 4 பகுதிகளில் கேரளா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் தாமே நேரில் சென்று பழம்பெரும் இசைக் கலைஞர்களை சந்தித்து அந்த அனுபவத்தை காவியமாக வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இசையின் பழம்பெருமையைப் பறைசாற்றும் அரிய இசைக்கருவிகளையும் அவற்றை பரம்பரை பரம்பரையாக கையாண்டுவரும் இசை விற்பன்னர்களையும் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் நேரில் கண்டு, அவர்களுடைய அனுபவப் புதையல்களை கேட்டறிந்து இத்தொடர்களில் வெளிப்படுத்தியுள்ளார். 

இசையின் ஏற்றங்களையும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அவற்றைப்பற்றிய செய்திகளை காட்சித்திரையில் அவர் எடுத்து விளக்கியுள்ள விதம் இன்றைய தலைமுறையினரையும் ஈர்க்கவல்லது. 

கேரளாவில் உள்ள கள மண்டலத்திற்கு சென்று மிழவு என்னும் தோல் கருவியை இசைக்கும் சஜித் விஜயனுடைய அரிய அனுபவங்களை இத்தொடரில் காணலாம். மகாராஷ்டிராவில் ருத்ர வீணையை இசைக்கும் பகவுதின் தகர், மணிப்பூரைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் லுரம்பம்பம் பேத்தாபதி தேவி, சிக்கிமைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாங்டொங் பலித் ஆகிய இசைக் கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களையும் சேர்த்து தற்கால இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் இணைத்து மாபெரும் இசை விருந்தினை படைக்கும் தொடராக இதனை ஏ.ஆர். ரகுமான் அவர்கள் சிறப்புறச் செய்துள்ளார். 

இசைப் பயணமே இனிய தொடராக டிஜிட்டல் வடிவில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து மகிழத்தக்க வகையில் இத்தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

Related Stories

Stories by YS TEAM TAMIL