சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வீடுகளை உருவாக்கும் சமூக அக்கறை நிறுவனங்கள்!

0

இந்தியா கோடை காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. வெப்பம் குறித்த எச்சரிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளது. வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஒரு டிகிரி செல்ஷியல் அளவிற்கு கூடுதல் வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கிறது.

இதை மேலும் மோசமாக்கும் வகையில் பசுமை போர்வை குறைந்து வருகிறது. அத்துடன் பல்வேறு நகரங்களில் குறிப்பாக பெங்களூரு, சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. மெட்ரோ நகரங்களில் நவீன கட்டிடங்கள் நிரம்பியுள்ளது. இதனால் இயக்கையை பாதுகாக்கும் விதத்தில் அமையாத கட்டிடக்கலை மற்றும் நகர்புற திட்டமிடலும் ஏற்படுத்தக்கூடிய பேரழிவுகள் குறித்து ஒரு சில தனிநபர்களும் ஸ்டார்ட் அப்களும் கவலை கொள்கின்றனர்.

கார்பன் தடங்களை குறைக்கும் நோக்கத்துடனும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடனும் செயல்படும் அப்படிப்பட்ட சில நிறுவனங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. திதி காண்ட்ராக்டர் (Didi Contractor)

திதி குழந்தைப் பருவத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து வீடுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு வீடுகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஆர்வம் இருந்தது. அவரது அப்பா ஒரு ஜெர்மானியர். அம்மா அமெரிக்கர். திதி என அழைக்கப்படும் தாலியா அறுபதாண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்தார்.

இன்று தர்மசாலா அருகில் இருக்கும் சித்பாரி பகுதியில் இருக்கும் 84 வயதான இவர், மண் மற்றும் கற்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டும் நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இது உள்ளூர் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

பதினைந்து வீடுகளை கட்டியுள்ளார். 14 அறைகளைக் கொண்ட முதியோர் இல்லம் ஒன்றும் இதில் அடங்கும். இவர் பயன்படுத்தும் நுட்பத்தில் சில சிறப்பு அமசங்கள் உள்ளன. இந்த வீடுகள் வெப்பநிலையை சுயமாக கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குளிர் காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக உள்ளூர் பொருட்களைக் கொண்டு கட்டப்படுகிறது. மண் வீடுகள் சமவெளிக்கானது அல்ல. அவை சிமெண்ட் வீடுகள் பொருத்தமாக இல்லாத பகுதியான மலைப்பாங்கான நிலப்பரப்புகளுக்கு ஏற்றதாகும்.

கடந்த முப்பதாண்டுகளில் வீடு கட்டும் பணி மட்டுமல்லாது இளம் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். சுற்றுச்சூழலின் மதிப்பை கற்பிக்கிறார். உள்ளூர் திறன்களுக்கு புத்துயிர் அளிக்கிறார். கருணைமிக்க வாழ்க்கைக்கான தர்மாலயா மையமான ’நிஷ்தா’ சமூக கிளினிக் மற்றும் பொது கொள்கைகளுக்கான நிறுவனமான ’சம்பாவனா’ வாயிலாக இதை மேற்கொள்கிறார்.

மனதளவில் மாணவியாகவே இருக்கும் இவர் பாரம்பரிய அழகியல் மற்றும் வட்டார மரபுகளை படித்து அதை சமகாலத்தில் நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறார்.

2. டெவலப்மெண்ட் 2050

சுற்றுச்சூழலுக்கு அபாயம் ஏற்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் 28 வயதான குமார் சஷ்வத் இயற்கையை பாதுகாப்பதில் பங்களிக்க விரும்பினார். பட்டப்படிப்பை முடித்ததும் 2016-ம் ஆண்டு ’டெவலப்மெண்ட் 2050’ நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் பசுமை கட்டுமானம், மழை நீர் சேகரிப்பு, மைக்ரோ சுற்றுச்சூழலை புதுப்பித்தல் போன்றவற்றின் வாயிலாக டெல்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழலை நிலையாக மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மக்கள் இயற்கையான சூழலை ஆதரித்து பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என குமார் விரும்புகிறார். அப்போதுதான் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனே அதை பராமரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

தற்சமயம் டெவலப்மெண்ட் 2050 குருக்ரம் பகுதியில் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம், மாடித் தோட்டம் போன்ற அம்சங்களுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரது குழுவினர் ஆரோவல் பகுதியில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிக்கும் பணிகளையும் தடுப்பணைகள் கட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த ப்ராஜெக்டின் நோக்கமாகும்.

சமூகத்தை பசுமையாக புதுப்பிக்கும் முயற்சியில் மக்களை ஈடுபடுத்தவேண்டும் என்பதே அவரது நோக்கம்.

3. ஷரணம் கிராமப்புற மேம்பாட்டு மையம் (Sharanam Rural Development Centre)

திருப்தி தோஷி கட்டிட வடிவமைப்பாளர். நாட்டில் பொருளாதார மேம்பாடு என்கிற பெயரில் நிலையற்ற வளர்ச்சியே காணப்படுகிறது என்பதை உணர்ந்தார்.  

”என்னுடைய ப்ராஜெக்ட் ஒன்றில் தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக பிரபலமான செட்டினாடு சுண்ணாப்பு ப்ளாஸ்டர் பயன்படுத்த விரும்பினேன். 250 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்து ஒரு சிறிய கிராமத்தில் சுமார் நாற்பதாண்டுகளாக தனது கலையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த 83 வயது முதியவர் ஒருவரை கண்டறிந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் திருப்தி.

மண், சுண்ணாம்பு, மீட்டெடுக்கப்பட்ட மரம் போன்ற பல இயற்கையான பொருட்கள் உள்ளன. இவை விலை மலிவானதாகும். ஆனால் இவற்றை பயன்படுத்த இது குறித்த அறிவுத்திறன் அவசியம். இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட கைவினைஞர்கள் பலர் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தின் கிராமப்புறத்தில் ஷரனம் கிராமப்புற வளர்ச்சி மையத்தை உருவாக்கினார். இது ’ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி’ என்கிற சர்வதேச என்ஜிஓ-வின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் தலைமையகமானது. பாரம்பரிய அறிவைக் கொண்டு அவரது குழுவினர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையும் நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஸ்டீல் மற்றும் சிமெண்ட் பொருட்களை சார்ந்திருக்கும் நிலை குறையும்.

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தில் (United Nations Environmental Programme) இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான வளர்ச்சிக்கு உகந்த மாதிரியாக ’ஷரனம் ஃபேஸ்-1’ அங்கீகரிக்கப்பட்டது.

4. பில்ட்-இன்

வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்த உதவும் வகையில் பூஜா ஆர்த்தி மற்றும் ரோஹன் ஷெனாய் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பில்ட்-இன் (Build-Inn) நிறுவனத்தை நிறுவினார்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளை உருவாக்க கட்டிட அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதே இவர்களது நோக்கமாகும்.

சமீபத்தில் இவர்களது பணி சாலை, கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த அமைச்சகம் நிலையான பொருட்களைக் கொண்டு சூரியசக்தி அமைப்பு கொண்ட சுங்கச்சாவடிகளை அமைப்பதற்காக வடிவமைப்பை உருவாக்கும் போட்டியில் விண்ணப்பிக்க இவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பில்ட்-இன் உருவாக்கிய சுங்கச்சாவடி வடிவமைப்பு இரண்டாம் பரிசு பெற்றது. பில்ட்-இன் இணை நிறுவனர் ரோஹன் கூறுகையில், 

“இந்த குறிப்பிட்ட நெடுஞ்சாலை சுங்கச்சாவடியானது அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து கார்பன் தடத்தை குறைக்கும். வாகனங்களை கண்காணிக்கும் பணிக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்படும். இவை அனைத்துமே சூரிய சக்தி ஆற்றலால் இயங்கும்.

இந்த ஸ்டார்ட் அப் மருத்துவமனைகள், பள்ளி, பொழுதுபோக்கு மையம் மாநில அரசாங்கம் சார்பில் மினரல் வாட்டர் யூனிட் ஆகியவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்துமே சுற்றுச்சூழலுலை பாதுகாக்கும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது. இவர்கள் கூரைகளுக்கான ஃபில்லர் ஸ்லாப், கட்டிடத்திற்கு குளிரூட்ட நீர் மூலம் குளிர்ச்சியடையச் செய்யும் ரேடியண்ட் கூலிங் தொழில்நுட்பம், உறுதிப்படுத்தப்பட்ட மண் ப்ளாக் கொண்ட கட்டுமானம், முன்னரே வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் (PEB), மழை நீர் சேகரிப்பு, ஆர்கானிக் மண்ணில்லா தோட்டம் போன்ற நவீன மற்றும் பண்டைய அம்சங்களையும் பயன்படுத்துகின்றனர்.

5. சித்தார்த் மேனன்

மும்பை ஐஈஎஸ் கட்டிடக்கலை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சித்தார்த் மேனன் நகர வாழ்க்கையை விடுத்து ஆரோவில் சென்றார். சமூக பொருளாதார சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சீரழிவு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கட்டிடக்கலையை பயன்படுத்தவேண்டும் என்பதே இவரது நோக்கம். 

பெரும்பாலான பகுதிகளில் இன்று காணப்படும் கான்கிரீட் கட்டிடங்கள் போலல்லாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வீடுகள் கட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்.  சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறான பசுமையான கட்டிடங்கள் கட்டப்படுவது குறித்து அவர் கூறுகையில், 

“சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் கட்டப்படுவதன் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டத்தில் பிரபலமாக பேசப்படும் ஆனால் அவை மெல்ல மறைந்துவிடக்கூடும். இன்று பின்பற்றப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெரும்பாலான நடவடிக்கைகள் தொழில்நுட்பத் தீர்வாகவே காணப்படுகிறது.”

ஆரோவில்லில் சித்தார்த் தனது முதல் மண் வீட்டை கட்டியுள்ளார். இதில் கட்டத்தின் சுவரை உருவாக்க இயற்கையான நில அமைப்பு பயன்படுத்தப்படும். பெரும்பாலும் மண்ணால் கட்டப்படும் இத்தகைய வீடுகள் சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டிடங்கள் உள்நாட்டு கட்டுமான உத்திகளைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.

சித்தார்த் ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கத்தின் சுந்தர்பன்ஸ், ஒடிசா, கர்நாடகா ஆகிய பகுதிகளின் கிராமப்புரங்களில் பணியாற்றி வருகிறார். உள்ளூர் கட்டுமான பொருட்களான மண், மூங்கில், கல், மரம் போன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய கைவினைஞர்களுடன் பணியாற்றுகிறார். அதிக பணியாளர்களைக் கொண்டு கட்டுமானம் மேற்கொள்ளவேண்டிய நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா