துப்பாக்கிக் கொண்டு இலக்கை துல்லியமாக சுடும் 83 வயது இந்திய பாட்டி!  

0

82 வயதான சந்த்ரோ தோமர் வயதில் மட்டுமே முதியவர், மனதளவில் இன்னமும் திடமாக வலம்வரும் பெண்மணி. ’ரிவால்வர் தாதி’ என்று அழைக்கப்படும் சந்த்ரோ, தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார். குறிப்பார்த்து துப்பாக்கி சுடுதலில் இன்றளவும் உலக அளவில் சிறந்து விளங்குபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உத்தர பிரதேஷ மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த ஜோஹ்ரி கிராமத்தில் பிறந்தவர் சந்த்ரோ. ஆறு பிள்ளைகளின் தாயார் மற்றும் 15 பேரன் பேத்திகளை பெற்றுள்ள இவர், துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தனது 65ஆவது வயதில் தொடங்கினார். தனது பேத்தியை துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சேர்க்கச் சென்றபோது, அந்த ரைஃபிள் க்ளப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து கச்சிதமாக இலக்கை சுட்டார் சந்த்ரோ. அங்குள்ள அனைவரும் அவரது திறமையை கண்டு வியந்தனர். 

அன்று தொடங்கிய பயிற்சியை 82 வயது ஆகியும் இன்றும் தொடர்கிறார். 

“நான் முதன்முதலில் துப்பாக்கியை கையில் எடுத்து சுட்டப்போது என்னையே நான் மறந்தேன். அது எனக்கு ஒரு அற்புத உணர்வை தந்தது. என் வயது எனக்கு ஒரு தடையாக தெரியவில்லை. இன்று சுமார் 25 பெண்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியில் வந்து ரைஃபிள் க்ளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்,” என்கிறார் இந்த ரிவால்வர் தாதி. 

சந்த்ரோவை கண்டு அவரது கிராமத்தைச் சேர்ந்த பலரும் ஊக்கமடைந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள முன்வருகின்றனர். 2010 இல் சந்த்ரோவின் மகள் சீமா, ரைஃபிள்-பிஸ்டள் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்பது கூடுதல் தகவல். சந்த்ரோவின் பேத்தி நீட்டு சோலங்கியும் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். 

சந்த்ரோவின் 77 வயது நாத்தனார் ப்ராகாஷி தோமரும் அவரை பின்பற்றி வருகிறார். 

“ஒரு முறை ப்ராகாஷி டிஎஸ்பி ஒருவரை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தோற்கடித்தார். அதனால் அவருக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு வர அவர் மறுத்துவிட்டார். ஒரு வயதான பெண்மணி தன்னை தோற்கடித்ததை அந்த போலீஸ்காரரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” 

என்று இந்திய விளையாட்டு மைய கோச் நீட்டு ஷெரன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறி இருந்தார். 

கட்டுரை: Think Change India