75% பெண் ஊழியர்களை கொண்ட பிங்க் லெமனேட் நிறுவனம்!

1

இந்திய தொழில்முன்முயற்சி (Start-up) நிறுவனங்களில் ஆண் பெண் விகிதாசரம் சம நிலையில் இல்லாத சூழலில், "பிங்க் லெமனேட்" (Pink Lemonade) நிறுவனம் இதை தகர்த்துள்ளது. 8 ஆண்கள் உள்ள நிறுவனத்தில் 25 பெண்கள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இல்லை. பிங்க் லெமனேடின் நிறுவனர் டீனா கார்க் இதில் மிகவும் பெருமை கொள்கிறார்.

கண்டென்ட், தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பு ஆகிய துறையில் நிபுணத்துவம் கொண்டது பிங்க் லெமனேட். ராணுவ பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த டீனா, அதுவே தன்னை விடாமுயற்சியுடன் செயல்பட வைக்கிறது என்கிறார். "ஜாம்" என்ற பத்திரிகைக்காக அவர் முதன் முதலில் எழுதினார். பின்னர் ஆக்கபூர்வ எழுத்து மற்றும் பத்திரிகை துறையில் பயிற்சி பெற லண்டன் சென்றார். பிங்க்  லெமனேட் பற்றியும் , அதிகமாக பெண்களை பணி அமர்த்தியது குறித்தும் டீனாவிடம் உரையாடினோம்.....

பிங்க் லெமனேட் தோற்றுவிக்க என்ன காரணம்?

வடிவமைப்பு மற்றும் எழுத்தின் மேல் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் இருந்தது. Ernst &Young நிறுவனத்தில் தொடர்பு துறையிலும் பின்னர் மற்றொரு நிறுவனத்தில் படைப்பு துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த பொழுது, இத்துறையில் இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன். பிங்க் லெமனேட் நிறுவனம் எனக்கு தானாக அமைந்த வாய்ப்பாகவே நினைக்கிறேன்.

பிடித்தமான வேலையில் நாங்கள் அனைவரும் பணியாற்றுவதால், அந்த ஈடுபாடே சந்தோஷத்தையும் நிறுவனத்தின் வளர்சிக்கும் உதவுகிறது. நமக்கு பிடித்த துறையில் இருந்தால், வேலை மட்டுமே செய்கிறோம் என்ற சோர்வு என்றுமே இருக்காது என்பது என் ஆழமான நம்பிக்கை.

பிங்க் லெமனேட் பெயர்க்காரணம்?

இன்றைய சூழலில் அனைத்து நிறுவனங்களும் தங்கள்  பணியாளர்களுக்கான அறிக்கைகளாகட்டும், வெளி உலக தொடர்பாகட்டும், புதுமை மற்றும் புத்துணர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். எங்கள் நிறுவனத்தின் பெயர் புத்துணர்ச்சியை நினைவூட்டும் பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். லெமனேட் சாதாரண பெயர், ஆகவே பிங்க் லெமனேட் என்று பெயர் சூட்டினோம். இந்தப் பெயர் அரிதாகவும், புதுசாகவும் இருப்பதால் பல நேரங்களில், எங்கள் பெயரை கேள்விப்பட்டு, மறக்காமல் எங்கள் வாடிக்கையாளர் ஆகியுள்ளனர். அந்த வகையில் இந்த பெயரே எங்களுக்கு பெரிய பலம்.

அதிகமான பெண்கள் கொண்ட நிறுவனமாக எப்படி அமைய பெற்றது?

உண்மையை சொல்ல வேண்டுமானால், சரி விகிதத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினோம், ஆனால் சரியான தகுதியுள்ள பெண்கள் அதிக அளவில் சேர்ந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து இங்கே பணிபுரிவது, தானாகவே அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். நிறைய தாய்மார்களும், நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைக்கு வரும் பெண்மணிகளும் இங்கு உள்ளதால், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்கள் திறமைக்கு ஏற்ற தளமாகவும், நிறுவனத்தை வளர்த்திருக்கிறோம்.

அதிக பெண்களை கொண்ட நிறுவனமாக இருப்பது உங்களுக்கு சாதகமாக உள்ளதா?

நிச்சயமாக இது பெரிய பலமாகவே உள்ளது. பெண்கள் என்றுமே புரிதலுடனும், அக்கறையுடனும் செயல்படக்கூடியவர்கள். இந்த அடிப்படையில், திறனாக செயல்பட முடிகிறது என்பதற்கு எங்கள் வளர்ச்சியே அத்தாட்சி.

மற்ற நிறுவனங்கள் இவ்வாறு செயல்பட உங்களின் அறிவுரை?

எல்லா இடத்திலும் மனித இயல்பு என்பது ஒன்று தான். எங்களின் வளர்ச்சிக்கு அளவுகோலாக நாங்கள் நம்புவது டிஎல்சி (TLC).

நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை: நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளுதல் மிக அவசியம். அவர்களை நம்பி தேவையான அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் எப்படி செயல் படுகிறோமோ, அதற்கேற்பவே அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும்.

கற்றல் மற்றும் வளர்ச்சி: நிறுவனம் வளரும்  போது, அவர்கள் கற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகை செய்ய வேண்டும். பிங்க் லெமனேடில் எல்லா வகையான ப்ராஜெக்ட்டிலும் பணி புரிய அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கிறோம். அதே போல் ஒவ்வொரு வருடமும் லாபத்தில் பங்களிக்கிறோம். அவர்களின் பங்கு மற்றும் வளர்ச்சி எங்கள் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதால் ஊக்குவிப்பு தொகையும் அளிக்கிறோம்.

கொண்டாட்டம் மற்றும் உற்சாகம்: மகிழ்ச்சியான சூழல் உருவாக்குவது வேலையை சிறப்பாக செய்ய உதவும். எங்கள் நிறுவனத்தில் சுழற்சி முறையில் பிங்க் ஹாலிடே(Pink Holiday) என்ற முறையை கடைபிடிக்கிறோம். வேலை நாளில் விடுப்பு கொடுத்து அவர்களின் கணவர் அல்லது மனைவியுடன் மதிய உணவு அல்லது ஸ்பா செல்லவோ அல்லது ஷாப்பிங் செல்லவோ அனுமதிக்கிறோம். இந்த செலவை நிறுவனமே ஏற்றுகொள்கிறது. இதை தவிர எல்லோரும் பகிர்ந்து உண்ணுதல், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் சீக்ரட் சான்டா (Secret santa) போன்றவற்றையும் மேற்கொள்கிறோம். வேலையை தவிர எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம், அதனால் சில சமயம் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே பணி முடித்து குடும்பத்துடன் இருக்குமாறும் பார்த்து கொள்கிறோம். சரியான நோக்குடன் இவற்றை கடைபிடித்தால், இதுவே மிகப் பெரிய உந்துதலை கொடுக்கும்.

நிறுவனத்தில் உள்ள பெண்கள் அணியை பற்றி உங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் ?

பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் பணியாற்றும் பொழுது, அவர்கள் தங்களின் தொழில்நுட்பத்தை விளக்கும் விதம் எங்களுக்கு சிரிப்பை வரவைக்கும். வாஷிங் மெஷினையும் , மைக்ரோவேவ் ஓவனையும் உதரணமாக எடுத்து எங்களுக்கு விளக்குவார்கள்.

நாட்கள் செல்ல செல்ல, உங்கள் திறமை மட்டுமே மேலும் வாய்ப்புகள் வர வழி செய்யும். நேரம் காலமின்றி , ஆண்களிடையே வீடியோ படப்பிடிப்பு, புகைப்படம் எடுத்தல், ஆண்கள் அதிகம் உள்ள உற்பத்தி நிறுவனங்களில் மேலாண்மை சார்ந்த தொடர்பு பயிற்சிகள், பிராண்டிங் பயிற்சிகள் இப்படி பலவற்றையும் திறமையாக மேற்கொள்வது, எங்கள் வெற்றிக்கான மகுடம்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள ஆண்கள் எப்படி பார்க்கிறார்கள்?

எங்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தும் விதம் பெருமைக்குரியது. பெண்களுக்காக குரல் கொடுப்பதில் தனி கவனம் செலுத்துகிறார்கள். இந்த சுதந்திர தினத்தில், அமைதி பேரணி நடத்தினார்கள், இதன் மூலம் பெண்கள் மீதான வன்கொடுமை, பலாத்காரம், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

நீங்கள் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புவது?

பெண்கள் எப்பொழுதுமே தங்களை பிரதானப்படுத்திக் கொள்வதில்லை. ஆண்களை போல், இவர்கள் தம் திறமையை வெளிக்கொண்டு வரும் வேலைகளை கேட்டுப் பெறுவதில்லை. நம்பிக்கையை மேலும் வளர்த்துகொண்டு முன் வர வேண்டும். எங்கள் நிறுவனத்தில் இளம் பெண்கள் கூட வேலை சேர்ந்த முதல் நாளிலேயே ஐயப்பாடின்றி செயல் பட முடிகின்றது.

ஆண் பெண் சரி சமமான பலத்துடன் செயல்பட்டால், இரண்டு பேருமே தங்கள் திறமையை சிறப்பாக வெளிக்கொணர முடியும். புரிதலும், அக்கறையும் கொண்ட பெண்கள், துணிவும் செயல் திறனும் கொண்ட ஆண்கள் - இவர்கள் இருவரும் இணைந்து செயலாற்றும் நிறுவனம் நிச்சயமாக சிறந்து விளங்கும்.