வறுமையில் வாடிய 3000 பெண்களுக்கு வழி காட்டிய 'தையல் நாயகி' சாயா!

1

பெண் என்பவள் ஒரு முழு வட்டம். படைப்பு, வளர்ச்சி, மாற்றம் போன்றவை அவளது சக்திக்குட்பட்டதே!- டியான் மேரிசைல்டு

சுயதொழில் செய்து முன்னேறும் வழியை பல பெண்களுக்கு கற்பித்துவரும் அகமதாபாத்தைச் சேர்ந்த சாயா சோனாவனேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

‘ஒரு பெண்ணுக்கு யாரையும் சார்ந்து நில்லாது, தன்னைத்தானே பார்த்துக்கொள்ள ஏதுவாக ஒருநாளைக்கு 500 ரூபாயை சம்பாதிக்கும் வழியை என்னால் சொல்லிக்கொடுக்க முடியும்.’ என்றார்.

சாயாவுடனான என் உரையாடலில் சிறப்பம்சமாக அமைந்தது இதுதான். பெரிய படிப்புகளை படிக்க முடியாமல் போனாலும், சாயா மனம் தளராது தன்னையும் மற்றவர்களையும் வாழ்க்கையில் விரும்பிய உயரத்தை அடைய வைக்கின்றார். இல்லத்தரசியாக இருந்த அவர், தனக்குத் தெரிந்த தையல் கலையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்ததன் மூலமாக ஒரு தொழில் முனைவோராக உயர்ந்தார். தனக்கு கிடைத்திராத, ஆங்கில வழிக் கல்வியை கற்பிக்கும் பள்ளியில் தனது மகன்களை சேர்த்து, பொறியியல் பாடத்தில் பட்டம் பெற காரணமானார். ஆம், அவரது இரு மகன்களும் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்று தற்போது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

‘வறுமையில் வாடி நான் வளர்ந்த பரிதாபகரமான சூழல் ஒருநாளும் எனது பிள்ளைகளின் வாழ்வில் ஏற்பட்டு விடக்கூடாது என நினைத்தேன். இந்த நினைப்புதான் எனது உந்துசக்தியாக திகழ்ந்தது. எனது இரு மகன்களும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதை நினைக்கவே பெருமிதமாக உள்ளது. எனது மகன்கள் நல்ல நிறுவனத்தில் உயரிய பணியில் உள்ளதால் நிதித்தேவைகள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் எழுவதில்லை. ஆனால், எனது வாழ்க்கையில் நிலவிய கஷ்டமான சூழலை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன,’ என்றார் சாயா.

மிகச்சாதாரணமான இளமைக்காலம்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்காவுன் மாவட்டத்தில் உள்ள தரங்காவுன் கிராமத்தில் வறுமையின் விளிம்பில் வளர்ந்தார் சாயா. அப்பா ஒருவரின் சம்பாத்தியத்தில் ஏழு உடன்பிறப்புகளுடன் வளர்ந்த சாயவின் குழந்தைப்பருவம் பொம்மைகளால் நிரம்பியிருக்கவில்லை. மாறாக, நமக்கு எளிதாக கிடைக்கும், அடிப்படை வசதிகள்கூட சாயாவுக்கு கனவாக இருந்தது. கிடைத்த குறைந்தபட்ச வசதியுடன் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார். அவருக்கு மேற்படிப்பு என்பது எட்டாக் கனியாய் இருந்தது.


குஜாராத்தில் நூற்பாலையில் பணியிலிருந்தவரை சாயாவுக்கு திருமணம் செய்துவைத்தனர். பிறகு, தம்பதியாக அவர்கள் அகமதாபாத்துக்கு குடியேறினர். எண்பதுகளில் நூற்பாலையில் பணிபுரிவது பெருமையான ஒன்றாக இருந்துவந்தது. வெகுவிரைவில், ஆலைகள் பலவும் மூடத் தொடங்கியதால், சாயாவின் கணவர் தனது வேலையை இழந்தார். பணியை இழந்ததால் உணவுக்குக் கூட வழியின்றி பசியால் தவிக்க வேண்டிவந்தது. இந்நிலையில், வேறு வழியே சம்பாத்தியத்தை தேடும் முயற்சியில் சாயாவின் கணவர் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.

நிதியியல் சுதந்திரம் நோக்கிய பயணம்

திருமணம் முடிந்து பல காலமாக கணவரது செயல்பாடுகளை வெறுமனே பார்வையிட்டு வந்த சாயா தன் பங்குக்கு குடும்பத்தை காப்பாற்ற ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவுசெய்தார். தையல் கலையை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்க ஆசைப்பட்டார். ஆனால், காலம் காலமாய் பெண்கள் பணிசெய்வதை ஏற்றுக்கொள்ளாத கட்டுப்பாடான அவரது புகுந்த வீட்டினரை சம்மதிக்க வைக்க மிகுந்த கஷ்டப்பட்டார். 

எனினும், கணவர் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் மூன்றே மாதங்களில் பெண்களுக்கான உடைகளைத் தைக்கும் விதத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது. விரைவில், வீட்டிலிருந்தபடியே அக்கம்பக்கத்தினருக்கு துணிகளைத் தைத்துக் கொடுக்க தொடங்கினார். சிறப்பாக துணிகளைத் தைத்துக்கொடுத்த சாயாவுக்கு வாடிக்கையாளர் வட்டம் கொஞ்சமாக பெருகியது.

இந்த நிரந்தர வருமானம் கொடுத்த தைரியம், தனது வியாபாரத்தை பெரிதுபடுத்தவும், தன்னைப்போல கஷ்டப்படும் சக ஏழைப் பெண்களுக்கு அவர்களது குடும்ப நிலையை சீரமைக்க தையல் கற்பிக்கலாம் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. ‘தேவ் ஸ்ரீ’ என தனது தையல் கற்பிக்கும் திட்டத்துக்கு பெயரிட்டார். 

சுயமாக சம்பாதிப்பதால் கிடைக்கும் நிதி சுதந்திரத்தைப் பற்றி தையல் கலை பயின்றுவந்த பெண்களுக்கு எடுத்துரைத்த சாயா, இந்தகாலகட்டத்தில்தான் தனது இரண்டாவது மகனை ஈன்றார். தனக்குக் கிடைக்காத ஆங்கில வழிக்கல்வி தன்னுடைய இரு மகன்களுக்கும் நிச்சயமாக கிடைக்க வேண்டும் என சாயா விரும்பினார். பணக்காரர்களது பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த கல்வியை தீர்க்கமாக நின்று தனது மகன்களுக்கும் பெற்றுத்தர பெரும் பாடுபட்டார்.

இவற்றுக்கெல்லாம் ஊக்கமாக இருந்தது என்ன? என சாயாவிடம் கேட்டபோது, ‘என் தாயாரின் நடவடிக்கைகள் என்னை தீர்க்கமாக செயல்பட ஊக்கமளித்தன. கிடைத்தவற்றை வைத்து தன்னுடைய பெரிய குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பார் என் அம்மா’ என்றார்.

எதிர்பார்த்த மாற்றதை தானே ஏற்படுத்திக் கொண்ட சாயா

தற்போது சாயா, தையல் கலை கற்பிக்கத் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், இவரிடம் தையல் கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் வரும் பெண்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.

‘வறுமையில் வாடிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுவரை தையல் கலையை கற்பித்துள்ளேன்’ என்கிறார் சாயா. தையல் கலையைக் கற்றுக்கொண்ட இந்தப் பெண்கள் தற்போது சுயமாக பலருக்கும் உடைகளைத் தைத்துக் கொடுத்து வருகின்றனர். மேலும், இந்தப் பணியில் தனக்கு பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

‘நான் தையல் கற்பித்த பல பெண்களின் மகள்கள் இன்று என்னிடம் தையல் கலையை பயில்கின்றார்கள்’ எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.

‘இந்த உலகில் நீங்கள் விரும்பும் மாற்றத்தை நீங்களே செய்யுங்கள்’ என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார் சாயா. சாயவின் மகன் ஜெய் தனது அம்மாவைப் பற்றி சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சாயாவிடம் தையல் கலை கற்பிக்குமாறு போலியோ தாக்கத்தால் மாற்றுத்திறனாளியான தனது மகளை அழைத்து வந்த அவளின் தந்தை கேட்டுக்கொண்டார்.

சாயா, பலவீனமான கால்களைக் கொண்ட அந்தப் பெண்ணுக்கென ஒரு தானியங்கி தையல் இயந்திரத்தை வரவழைத்து அவருக்கும் பாடம் கற்பித்தார். நான்கு மாதம் தையல் கலை வகுப்பு முடிந்தபோது அந்தப் பெண்ணும் முழுமையாக தையல் கற்று தனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெறும் வழியை அறிந்துகொண்டார்.

மகளிர் மேம்பாடு

‘மகளிர் மேம்பாட்டுக்காக, என்னைப்போல மற்ற பெண்களுக்கும் தையல் கலையைக் கற்பித்து, தமது தினசரி செலவுகளையும், தம்முடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ளவும் வழிசெய்வதுதான் எனது குறிக்கோள் என்கிறார் சாயா. அதிலும், பிள்ளைகளுக்கு நல்லது மட்டுமே நடக்கவேண்டும் என எண்ணும் தாயார்களுக்காக இது அவசியம்’ என்றார்.

தற்போது ஒரு பாட்டியாகி இருக்கும் சாயா, ஒரு பெரிய அறையில் அடுத்த தலைமுறை பெண்களுக்கு தையல் கலையை செயல் வழியே கற்பித்தவண்ணம், தனது மாமியாரின் முந்தைய கருத்து தவறு என உணர்த்திய மகிழ்ச்சியில் உள்ளார். சாயா, ‘நினைத்ததை முடிக்க நீங்கள் கிளம்பிவிட்டால் எதுவுமே தடையில்லை’ என்பதை உலகத்துக்கு உணர்த்தியுள்ளார்.

சாயாவுடனான எனது உரையாடலை முடித்துக்கொள்ளும் இந்த வினாடியில் அயன் ராண்டின், ‘யார் நான் நினைப்பதை செய்ய விடுவார்கள் என்பது கேள்வியில்லை; யார் எனக்கு தடை விதிக்கப்போகின்றார்கள், என்பதுதான் கேள்வி.’ என்ற இந்த வாக்கியம் எனது காதுகளில் ஒலிக்கின்றது.

ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: மூகாம்பிகை