இ-காமர்ஸ் உலகின் மெகா டீல்:  ஃபிளிப்கார்ட்டை ரூ.1.12 லட்சம் கோடி கொடுத்து வாங்கியது வால்மார்ட்!

1

ஃபிளிப்கார்ட்- வால்மார்ட் டீல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இ-காமர்ஸ் ஜாம்பவனான ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் இந்நிறுவனம் அமெரிக்க சில்லறை வர்த்தக ஜாம்பவனான வால்மார்ட்டின் துணை நிறுவனமாகி இருக்கிறது.

இ-காமர்ஸ் உலகின் மெகா டீலாக இது அமைகிறது. தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய கையப்படுத்தல்களில் ஒன்றாகவும் அமைவதால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஃபிளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்க வால்மார்ட் 16 பில்லியன் டாலர் அளிக்க முன்வந்துள்ளது. இந்திய மதிப்பின் படி இது 1.12 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த தொகையில் 2 பில்லியன் டாலர் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கான முதலீடாக அமையும். எஞ்சிய தொகை மற்றவர்கள் வசம் உள்ள பங்குகளை வாங்க பெருமளவு பயன்படும்.

வால்மார்ட் நிறுவனத்தால் ஃபிளிப்கார்ட் வாங்கப்பட்டிருப்பது இந்திய ஸ்டார்ட் அப் துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதைகளில் ஒன்றாக அமைகிறது. இந்த டீலில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனினும், இதன் மதிப்பு 21 பில்லியன் டாலருக்கும் மேல் இருக்கும் என கருதப்படுகிறது. இந்திய மதிப்பின் படி இது 1.47 லட்சம் கோடி ரூபாயாகும்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இந்த ஆண்டு பிற்பகுதியில் 1 முதல் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பில் ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் பற்றி குறிப்பிடபடவில்லை. அவர் தன் வசம் உள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதே போல கடந்த ஆண்டு நிறுவனத்தில் முதலீடு செய்த ஜப்பானின் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பாங்க், தன் வசம் உள்ள 20 சதவீத பங்குகளை விற்று வெளியேறியுள்ளது. 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கிய பங்குகளை 4 பில்லினர் டாலருக்கு இந்நிறுவனம் விற்றுள்ளது. தென்னாப்பிரிக்க நிறுவனமான நாஸ்பர்சும் தனது முதலீட்டை விற்றுள்ளது.

ஆரம்ப கால முதலீட்டாளர்களான டைகர் குளோபல் மற்றும் ஆக்சல் பாட்னர்ஸ் ஓரளவு பங்குகளை தக்க வைத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஃபிளிப்கார்ட் தற்போது வால்மார்ட்டின் துணை நிறுவனமாக மாறி இருந்தாலும், சுயேட்சையான பிராண்டாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பங்கு வெளியீட்டிற்கான ஃபிளிப்கார்ட்டின் திட்டமும் ஊக்குவிக்கப்படும் என வால்மார்ட் தெரிவித்துள்ளது.

இந்த டீல் தொடர்பான வால்மார்ட் அறிக்கை, ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஆண்டு 7.5 பில்லியன் டாலர் விற்பனை மதிப்பையும், 4.6 பில்லியன் டாலர் நிகர விற்பனை பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரி நண்பர்களால் ஃபிளிப்கார்ட் துவக்கப்பட்டது. இந்திய இ-காமர்ஸ் துறையின் வெற்றிக்கதைகளில் ஒன்றாக வலுப்பெற்ற ஃபிளிப்கார்ட், டைகர் குலொபல் மற்றும் ஆக்சல் பாடன்ர்ஸ் நிறுவன முதலீடுகள் பெற்று வளர்ந்தது. 2012 ம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் சந்தை மாதிரி வணிகத்திற்கு மாறியது. இந்திய இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக உருவான நிலையில், 2013 ல் அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய சந்தையில் நுழைந்தது ஃபிளிப்கார்ட்டிற்கு பெரும் சவாலாக கருதப்பட்டது.

அமேசான் அச்சுறுத்தலை சமாளித்து ஃபிளிப்கார்டி வளர்ச்சியையும், முன்னணி இடத்தையும் தக்க வைத்துக்கொண்டது. இடையே மந்த்ரா மற்றும் ஜபாங் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தியது. ஃபிளிப்கார்ட் பிக்டே சேல்ஸ் உள்ளிட்ட விற்பனை உத்திகள் மூலம் மேலும் வளர்ந்தது. 

கடந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் நிறுவனம் 7 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் முதலீட்டை ஈர்த்தது. அப்போது அதன் சந்தை மூலதன மதிப்பு 16 பில்லியன் டாலராக கருதப்பட்டது. சந்தையின் சவால்களை சந்தித்து வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டதே இதற்கான காரணமாக கருதப்படுகிறது.

அகில இந்திய அளவில் பரந்து விரிந்த செயல்பாடுகளை கொண்டிருப்பது ஃபிளிப்கார்ட்டின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டை வாங்க இதுவும் முக்கியக் காரணமாக அமைகிறது. 

”பரப்பளவு மற்றும் வளர்ச்சி விகித அடிப்படையில், உலகில் மிகவும் ஈர்க்கக்கூடிய சில்லறை வணிக சந்தையாக இந்தியா விளங்குவதாகவும், இந்த முதலீடு, சந்தையில் இ-காமர்ஸில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிறுவனத்துடன் கைகோருக்கும் வாய்ப்பை அளிக்கிறது,” என வால்மார்ட் நிறுவன தலைமை அதிகாரி டவுக் மெக்மில்லன் கூறியுள்ளார். 

இந்த ஒப்பந்தம் மூலம் சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட்டின் நிபுணத்துவம் மற்றும் நுட்பங்களை ஃபிளிப்கார்ட் பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கையகப்படுத்தல் இந்திய ஸ்டார்ட் அப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பார்க்கும் போது இந்த ஒப்பந்தம் இந்திய ஸ்டார்ட் அப் துறைக்கு ஊக்கம் அளிக்கும் என கருதப்படுகிறது. தேர்தெடுக்கப்பட்ட நிறுவனர்கள் மத்தியில் யுவர்ஸ்டோரி நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் இந்த ஒப்பந்தம் இந்திய ஸ்டார்ட் அப் துறைக்கு மிகவும் நல்லது என கருத்து தெரிவித்துள்ளனர்.

”இந்த ஒப்பந்தம் பல கோணங்களில் முக்கியமானது. இந்திய ஸ்டார்ட் அப்கள் ஆரம்பத்தில் இருந்து துவங்கி, பெருமளவு முதலீட்டை ஈர்த்து, பின்னர் பெரிய அளவு பலனோடு வெளியேற முடியும் என இது உணர்த்துகிறது. இது பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளது. நிறுவனர்கள் அதிக மதிப்பீடு மற்றும் தள்ளுபடி மீது ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படும் விமர்சனங்களுக்கும் இது பதிலாக அமையும்,” என கருதுவதாக தொடர் தொழில்முனைவோரான கே.கணேஷ் கூறியுள்ளார்.

ஃபிளிப்கார்ட் முன்னிலையை அனுபவித்தாலும், இ-காமர்ஸ் சந்தையில் கடும் போட்டி காத்திருப்பதாக கருதப்படுகிறது. அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் கவனம் செலுத்தி வருவதோடு, தனது முதலீட்டையும் அதிகரிக்க உள்ளது. இதனால் இ-காமரஸ் சந்தையில் போட்டி மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

Stories by cyber simman