பக்கவாத குறைபாடுடன் பிறந்த மதுமிதா ஸ்னாப்டீலின் மனிதவளத் துறை இணை இயக்குனர் ஆன கதை!  

1

ஓர் மாலைப் பொழுதில், எனது டெல்லி-சென்னை விமான பயணித்தில், இவ்வுலகில் பல தடைகளை கடந்து தான் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ளும் மக்கள் பலர் இருக்கின்றனர் என்பதை நினைவூட்டிச் சென்றார் ஒருவர். விமான நிலையத்தில் ஏர்லைன் ஊழியரிடம் உதவி கேட்டிக் கொண்டிருந்த அந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை நான் கவனித்தேன். நான் ஏறிய விமானத்திலேயே அவரும் ஏற, என் அருகிலேயே வந்தமர்ந்தார். என்னை கடந்து போகையில்தான், அவர் நடையில் சின்ன தடுமாற்றம் இருப்பதை கவனித்தேன்.

பின், அவர் போனில் மாற்றுத்திறன்கள் குறித்தும், இன்க்லூஷன் குறித்தும் பேசத் தொடங்கினார். இப்போது என் ஆர்வம் அதிகரித்திருக்க, அவரே என்னிடம் பேச்சைத் துவக்கினார். அப்போது தான், அவர் பெங்களூரில் உள்ள ஸ்னாப்டீலின் மனித வள இணை இயக்குனர் என்பதை அறிந்தேன். சென்னையில் இருக்கும் பெற்றோரை சந்திக்க பயணித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் உரையாடல் தொடர அவர் தனது கதையை என்னிடம் ஆவலோடு பகிர்ந்து கொண்டார்...

குறைபாடுடன் பிறந்த மதுமிதா

முப்பது வயதான மதுமிதா வெங்கட்ராமன், தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் தொடக்கக் காலத்தை டில்லியிலும், மும்பையிலும் கழித்திருக்கிறார். ‘லெஃப்ட் ஹெமிபாரசிஸோடு’ (மிதமான இடதுபக்க பக்கவாதம்) எனும் குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார். இரண்டு வயதாகியும் இடது கால், இடது கை செயல்பாடில்லாமல் இருந்ததால், அவரது பெற்றோர் பலவகை சிகிச்சை முறைகளை மதுமிதாவிற்கு கொடுத்தனர். அகுபஞ்சர், அறுவை சிகிச்சை, ரெய்க்கி, ஃபிசியோதெரபி போல பல மாற்று சிக்கிச்சை முறைகளையும் மேற்கொண்ட தனது பெற்றொர், தனக்கு கிடைத்த வரப்பிர்சாதம் என்றும் இன்று இந்த நிலையில் தான் இருக்க காரணமானவர்களும் அவர்களே என்று அவர் சொன்னார்.

வாழ்க்கையை சிரமமானதாய் மாற்றிய இந்த குறைபாடால், மதுமிதா தனது இயல்பான குழந்தைப் பருவத்தை அனுபவிக்கமுடியவில்லை. 

“மருத்துவ சிகிச்சை, படிப்பு என இதை எல்லாம் ஒரே சமயத்தில் சமாளித்துக் கொண்டு, விளையாட நேரமில்லாமல், மற்ற குழந்தைகளை விட வாழ்க்கையில் பரபரப்பாய் நான் இருந்தேன்,” என்கிறார்.

பள்ளிப்பருவத்தில் ஊன்றுகோலுடம் நடப்பத்தை மற்ற குழந்தைகள் விநோதமாக பார்ப்பதும், கேலி, கிண்டல் செய்துகொண்டும் இருப்பார்கள் என்றும் சொன்ன மதுமிதா, “நான் எதற்கும் சலிக்காமல் பரதநாட்டியம்கூட கற்றுக் கொண்டேன். என் கை அசைவுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும், ஆனாலும், நான் அதை நிறுத்தியதில்லை” என்றார். பின்னர், தனக்கு கல்வி மட்டுமே கைக்கொடுக்கும் என்பதை உணர்ந்து, அதில் வெற்றிப்பெற தன் முழு முயற்ச்சியை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆரம்பக்கட்ட சவால்கள்

ஐந்தாம் வகுப்பில் இருக்கும் போது, மதுமிதா டில்லியில் இருந்து மும்பைக்கு வந்தார். தன் பதின்பருவத்தை, இந்த இயலாமையோடு கடந்தது தான் அவருடைய வாழ்வின் கடினமான பொழுதாய் இருந்திருக்கிறது.

“அப்போது தான், நான் மாற்றுத் திறனாளியாய் இருப்பதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொண்டேன். எடை குறைப்பது கடினமாய் இருந்தது. மக்கள் என்னை நேசிப்பதை விட அனுதாபத்தோடு பார்த்தனர். விளையாட்டு, நடனம் போன்றவற்றில் எல்லாம் பங்கு பெற என்னால் முடியவில்லை. நான் எஞ்சினியரிங் படிக்காமல் போனதற்கும் அது தான் காரணம், ஆனால் நான் மேலாண்மை படித்து அதில் முன்னேறினேன்”.

கல்லூரிக்கு மும்பை லோக்கல் ரயில்களில் பயணிப்பதும் அவ்வளவு சுலபமாய் இருந்திருக்கவில்லை இவருக்கு.

“அவ்வளவு கூட்டமாக இருக்கும் மும்பையின் லோக்கல் ரயில்களில். அதில் ஏறுவது மிகக் கடினமாய் இருந்தது. பல முறை கீழே விழுந்திருக்கிறேன்... ஆனால் என்ன? அது ஓர் சாதாரண வீழ்ச்சி தான்! என் வாழ்விலும், என் கல்வியிலும் முன்னேற எனக்கு இருந்த ஒரே வழி அதுதான். எனவே அந்த பயணத்தை நான் தொடர்ந்தேன்...”

இந்த நேரத்தில் தான், புதிய அணுகுமுறை ஒன்றை வளர்த்துக் கொண்டிருக்கிறார் மதுமிதா. தான் சந்தித்த ஒவ்வொரு சவால்களின் போதும், மேலும் வலிமை கொள்ளவும், மேலும் முயற்சிக்கவும் கற்றுக் கொண்டு, தான் ஒரு மாற்றுத் திறனாளியாய் இருப்பினும், மிக வலிமையானவர் என்பதையும் தன்னுள் காணத் தொடங்கியிருக்கிறார்.

“எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கடின உழைப்பால் வென்றேன். வேலை, என் மற்ற ஆர்வங்களான ஸ்கூபா டைவிங், பாரா களைடிங் என எதுவாக இருந்தாலும் முயன்று பார்க்காமல் மறுக்க மாட்டேன்.”

பணியும், சமூக பொறுப்பும்

பட்டப்படிப்பை முடித்த பிறகு, எடில்வைஸ் கேப்பிடலில் தன் பணியை தொடங்கிய மதுமிதா, ஜமன்லால் பஜாஜ் கல்லூரியில் எம்பிஏ படிப்பையும் முடித்தார். அதன் பின் மெர்சர் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், மனித வள மேலாளராக, ஜி.இ நிறுவனத்தில் சேர்ந்து, கார்ப்பரேட் உலகை வெற்றிகரமாக வலம்வரத் தொடங்கினார். அப்படி தன் பணி வாழ்க்கையில் சிறக்கத் தொடங்குகையில், தன் ஊனத்தை விட தனது சாதனைகள் உலகை கவரத் தொடங்கியதைக் கவனித்தார். இதனால் தன்னம்பிக்கையும், ஊக்கமும் வளர்ந்தது. வாழ்வின் மீது எந்த அச்சமும் இல்லாமல், தனியே, உலகைச் சுற்றி பல முறை பயணித்தார்.

ஒருமுறை, மதுமிதா தனது நிறுவனத்துக்கு ஆட்களை பணியமர்த்த நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த போது, மாற்றுத் திறனாளியான ஒருவரை சந்திக்க நேரிட்டது. கல்வித் தகுதிகளின் காரணமாய் அவரை மதுமிதா நிராகரிக்க, அவர் எழுந்து, "நீங்களே என்னைத் தேர்வு செய்யாவிட்டால் வேறு யார் என்னை தேர்வு செய்வார்கள் எனக் கேட்டாராம்". இந்தக் கேள்வி மதுமிதாவிற்கு பல உறக்கமில்லாத இரவுகளை கொடுத்தது. தான் செய்யவே வேண்டிய கடமைகளையும் உணர்த்தியது, என்றார். எனவே, அவர் கார்ப்பரேட் உலகில் இருந்துக் கொண்டே மாற்றுத் திறனாளிகளுக்கும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உதவ முடிவெடுத்தார்.

பின், மதுமிதா, பெங்களூரில் ஸ்னாப்டீலின் மனித வள இணை இயக்குனராக பொறுப்பேற்றார். மேலும், அந்நிறுவனத்தின் 'வேற்றுமை மற்றும் இன்க்லூஷன்' பட்டயமான ‘அத்வித்யாவை’ தலைமை ஏற்று வழி நடத்துபவராக நியமிக்கப் பட்டார். அத்வித்யாவின் வழியே, மற்ற நிறுவனங்களின் கார்ப்பரேட் தலைவர்களோடு இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் முன் நிற்கிறார்.

“மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன். தனிப்பட்ட முறையிலும், அத்வித்யாவை வழிநடத்துவது அர்த்தம் அளிப்பதாய் இருக்கிறது. பாலினம், மாற்றுத்திறன், எல்.ஜி.பி.டி, கலாச்சாரம் என அனைத்து வகையான வேற்றுமைகளிலும் கவனம் செலுத்துகிறோம். இதனால், இன்க்ளூசனில் யாரும் விடுபடாமல் இருப்பார்கள்” என்றுச் சொன்னார். 

மேலும், மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் குழுமமான ‘ஒன் ஸ்டெப் அட் எ டைம்’ (One Step at a time) என்னும் குழுவை சிலருடன் நிறுவி, அதில் பங்கு வகித்து பல பணிகளைச் செய்து வருகிறார்.

எதிர்நோக்கி இருக்கும் பாதை

“இன்று, எதுவும் சிக்கல்கள் இல்லை எனச் சொன்னால், அது பொய்யாகும்; சாலையைக் கடப்பது, ஒருக் கட்டமைப்பில் அலைந்து திரிவது, ஒரு கைக் கொண்டு லாப்டாப்பில் டைப் செய்வது, காய்கறிகளை நறுக்குவது என பல சிரமங்கள் இருக்கின்றன. இது ஓர் நிலையான போராட்டாமாய் தான் இருக்கப் போகிறது. ஒவ்வொரு நாளையும் அதை சந்திக்கும் தருணத்தில் எதிர்கொள்வது தான் நல்லது என நம்புகிறேன். நான் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க பலமான ‘நுட்பங்களையும்’ கற்றிருக்கிறேன்”.

மதுமிதா மாற்றுதிறனாளிகள் குறித்து ப்ளாக் ஒன்றை எழுதுகிறார், கருத்தரங்குகளில் பேசுகிறார், சமீபத்தில் ஐம்பது கிலோமீட்டர் மாரத்தான் ஒன்றிலும் பங்கேற்றிருக்கிறார். மேலும், மாற்றுத்திறனை கையாளுதலில் செய்த சாதனைகளுக்காக பல விருதும் பெற்றிருக்கிறார்.

இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை... விமானப் பயணம் நிறைவு பெறும் தருவாயில், தன் தற்போதைய வாழ்க்கை குறித்து மதுமிதா கூறுகையில், 

“ இந்த பயணத்தை நான் தொடரும் போது, என்னைச் சுற்றி பல நன்மைகள் நடப்பதைப் பார்க்கிறேன்; முன் அறிந்திராதவர்கள் அவர்கள் உதவி செய்வதை காட்டிக் கொள்ளாமலே உதவுகிறார்கள். பெரும் அனுதாபம் காட்டி என்னை புண்படுத்தும் பலரையும் நான் சந்திக்கிறேன், ஆனால் , என்னை சமமாக நடத்தும் பல சக பணியாளர்களும், நண்பர்களும் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. என்னை இந்நிலையை அடையச் செய்ததும் அவர்கள் தான்”. 
Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan