குப்பையாகும் ப்ளாஸ்டிக்கில் வீடுகட்டலாம்

0

ஆண்டுக்கு 500 பில்லியனில் இருந்து 1 ட்ரில்லியன் அளவுக்கு ப்ளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இவையெல்லாம் ஒரு கட்டத்தில் குப்பைக்கு தான் செல்லப்போகின்றன. ப்ளாஸ்டிக் எளிதில் மட்காதவை. அவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் ப்ளாஸ்டிக் பைகளாக பயன்படுத்த செலவாகும். இத்தனை குப்பைகளை என்ன செய்வது என அரசாங்கங்கள் விழிபிதுங்கி நிற்க, எல்லாவற்றையும் கொண்டு வீடு கட்டித்தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஒரு நிறுவனம்.

மெக்ஸிகோவில் உள்ள புவேபிலா நகரத்தைச் சேர்ந்தவர் கார்லோஸ் டேனியல் கான்சலேஸ். 'ஈக்கோடோமம்' (EcoDomum) என்ற தனது நிறுவனத்தின் மூலம் ப்ளாஸ்டிக்கில் வீடு கட்டித்தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிறுவனம் 2013ல் துவங்கப்பட்டது. மெக்ஸிகோவில் உள்ள சிலர் கடுமையான ஏழ்மையில் வாடுவதை கவனித்தார். அவர்கள் தங்குவதற்கு சிமெண்ட் செங்கலெல்லாம் பயன்படுத்தினால் அதிக செலவாகும். இவர்களுக்கு ப்ளாஸ்டிக்கில் வீடு கட்டி தந்தால் என்ன? என்று யோசித்தார் கார்லோஸ். அவர்களும் மற்றவர்களை போல வாழ வழி செய்தார்.

ஒருபக்கம் வீடு கட்டி தந்தது போலவும் ஆனது, இன்னொரு பக்கம் தேசத்தை சுத்தம் செய்தது போலவும் ஆனது. ப்ளாஸ்டிக்கில் வீடு செய்வது எளிதானது. முதலில் தேவையான அளவு ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொள்கிறார்கள். பிறகு அதிலிருக்கும் நச்சு வாயுவை நீக்கி விடுகிறார்கள். பின்பு ப்ளாஸ்டிக்கை வெப்பப்படுத்தி, நன்கு உருக்கி விடுகிறார்கள். உருகிய ப்ளாஸ்டிக்கிற்கு அழுத்தம் கொடுத்து தங்களுக்குத் தேவையான வடிவத்தில் திட நிலையில் பெறுகிறார்கள். இந்த திடநிலை ப்ளாஸ்டிக்கை கொண்டு எளிமையாக வீடுகட்டி தந்துவிடுகிறார்கள்.

இந்த வீடுகள் பார்ப்பதற்கு மற்ற வீடுகளை போலவே இருக்கிறதென்பது சிறப்பம்சம்.

ஆங்கிலத்தில் : Think change india | தமிழில் : Swara Vaithee