உங்கள் வீட்டை புதுமையுடன் அழகாக்க 3d ஃப்ளோரிங் அமைக்கும் சென்னை நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் வக்காஸ் மற்றும் முபீத், கார்ப்பரேட் வாழ்க்கையில் போரடித்து பிடித்த துறையில் சுயமாக தொழில் தொடங்கிய கதை!

4

தொழில்நுட்பம் வளர மக்களின் வாழ்க்கைத் தரமும் அதற்கேற்ப மாறிக் கொண்டே வருகிறது. அனைத்திலும் தனித்துவத்தையும் புதுமையையும் எதிர்ப்பார்கின்றனர் மக்கள். அது போல் தாங்கள் கட்டும் சொந்த வீட்டிலும் பல புதுமைகளை சேர்க்க விரும்புகின்றனர். சொந்த வீடு என்பது பலரது இலட்சியமாக இருக்கும் நிலையில் அது மற்றவரை கவரும் விதத்திலும் அமைக்க விரும்புகின்றனர் பலர். இது போன்ற விருப்பங்களை நிறைவேற்ற உங்கள் வீட்டை இன்னும் மெருகேற்ற ’3d flooring-ஐ’ அறிமுகப்படுத்தியுள்ளது Shadoz நிறுவனம்.

உங்கள் வீட்டின் தளத்தை வழக்கமான வடிவில் இருந்து மாற்றி புதுப் பார்வையை இந்த 3d ஃப்ளோரிங் அளிக்கும். இது பல வித்தியாசமான வடிவமைப்பில் வருகிறது, அதாவது கடல் போன்ற தளம், இது நிஜக் கடலின் மேல் நிறப்து போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் வக்காஸ் மற்றும் முபீத். எல்லா மாணவர்களையும் போல பொறியியல் படிப்பை முடித்து விட்டு பெருநிருவனத்தில் வேலையில் அமர்ந்தனர். இரண்டு வருடம் மற்றவர்களுக்காக வேலை செய்தபின் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முயற்சித்து shadoz நிறுவனத்தை 2015-ல் தொடங்கியுள்ளனர்.

நிறுவனர் முபீத் மற்றும்  வக்காஸ்
நிறுவனர் முபீத் மற்றும்  வக்காஸ்
“கல்லூரி நாட்களில் இருந்தே வணிகம் மீது தனி ஆர்வம் இருந்தது. நாளடைவில் யுவர்ஸ்டோரி போன்ற தளத்தில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் கதையை படிக்கையில் அந்த ஆர்வம் அதிகரித்தது. என் நண்பரும் அப்படிதான்,”

என பேசத் தொடங்கினார் வக்காஸ். பள்ளி நாட்களில் இருந்தே ஒரு தொழில்முனைவர் ஆக வேண்டும் என்ற எண்ணமே இந்த இரு நண்பர்களுக்கும் இருந்தது. அந்த முயற்சியின் விளைவே இன்று shadoz நிறுவனமாய் உயர்ந்துள்ளது. தங்கள் வேலையில் இருந்த நெருக்கடியால் இருவரும் வேலையே விட்டுவிட்டு தங்களுக்குப் பிடித்ததை செய்ய கைக்கோர்த்தனர்.

“நான் துபாயில் பணிபுரிந்த போது 5 நிமிடம் தாமதமாக சென்றதால் என் சம்பள உயர்வை நிறுத்திவிட்டனர், இதனால் விரக்தி அடைந்து என் வேலையை விட்டேன்; இதேபோல் தான் என் நண்பரும் அலுவலக நெருக்கடியால் வேலையை துறந்தார்.”

வக்காஸிற்கு வடிவமைப்பில் ஆர்வம் அதிகம்; அதேபோல் நண்பர் முபீத்க்கு மார்கெடிங் மீது அதிக ஈடுபாடு. தங்களுக்கு தெரிந்த இந்த இரண்டையும் பயன்படுத்தும் வகையில் ஒரு நிறுவனத்தை அமைக்க முன் வந்தனர். அப்பொழுது துபாயில் இருந்த வக்காஸ் அங்கு பிரபலாமாய் இருந்த 3d flooring-ஐ கவனித்தார். அதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தார்.

“ஆன்லைனில் எங்களுக்குத் தேவையான விவரம் கிடைக்க வில்லை; அதனால் சுமார் 200 கட்டட அமைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். அவர்களின் பதிலே இந்த நிறுவனத்தை தொடங்க உதவியது,” என்றார்.

முதலில் தங்கள் இருப்பில் இருந்த இரண்டு லட்ச முதலீட்டுடன் இந்நிறுவனத்தை தொடங்கினர். 6 மாத காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டதில், முதலீடு செலவாகி விட்டதால், பணம் ஈட்ட முடியவில்லை. பின் தங்களின் குடும்பங்களின் உதவியால் முதன்முதலாக சிறிய ப்ராஜெக்டை கையில் எடுத்தார்கள். அதை தொடர்ந்து ஒரு சில வாய்ப்புகள் அவர்களை தேடி வந்தது.

“சில கட்டட நிறுவனம் எங்களுக்கு சிறிய வாய்ப்புகளை அளித்தது. அவர்கள் தளத்தில் செய்த சிறிய தவறால் எங்களால் சரியான வெளியீட்டை அளிக்க முடியவில்லை. இது போன்ற தவறுகளை தவிர்க்க எங்கள் அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்தோம். அதன் பின் பணம் வாங்காமல் தளத்தை மாற்றி அமைத்தோம்.”

இவர்களின் முதல் பெரிய வாய்ப்பாக ecr சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டை நன்றாக முழுவதுமாக வடிவமைத்தனர். அதுவே அவர்கள் மற்ற ப்ராஜெக்ட் செய்ய வழி வகுத்தது. அந்த லாபம் மூலம் மற்ற வாய்ப்புகளை செய்து முடிக்க, தற்பொழுது தங்கள் வசம் நிறைய ப்ராஜெக்ட்களை வைத்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

“பல வாய்ப்புகள் வந்தாலும், சரியான நேரத்தில் எங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வருவது இல்லை. சில சமயங்களில் பணம் வருவதே இல்லை,” என தொழில் சவால்களை வருத்தத்துடன் பகிர்கிறார் வக்காஸ். 

இதனால் அலுவலகம் அமைக்கும் வாய்ப்பு தவறிக் கொண்டே போனது. பின் தங்கள் நண்பர் 4 லட்ச ரூபாய் பண உதவி செய்ய, அதை வைத்து சென்னையில் ஷோரூம் ஒன்றை திறந்தனர். கடை வைத்ததால் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். இதன் மூலம் பெரிய ஆர்டர்களை கைப்பற்றினர்.

Shadoz அலுவலகம்
Shadoz அலுவலகம்

முக்கியமாக வீட்டு அலங்காரத்திலே அதிக கவனம் செலுத்துகின்றனர். சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு, தண்ணீர், தூசு, அமிலம் ஆகியவற்று உட்புகாமல் பல வடிவங்களில் தளத்தை அமைகின்றனர். மீன்களோடு நடப்பது போன்ற நிஜ அனுபவத்தை நம் வீட்டிலே அளிக்கின்றனர். தளம் மட்டுமல்லாமல் சுவர் உட்பட உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அனைத்தையும் 3d-யில் செய்து தருகின்றனர். ஆரம்ப விலையாக ஒரு சதுர அடிக்கு 450 ரூபாய் வசுளிக்கப்படுகிறது.

இருவரால் மட்டும் தொடங்கிய இந்நிறுவனம் தற்பொழுது 11 பேர் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது. மேலும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதன் அடுத்தகட்டமாக இ-காமர்ஸ் வலைதளத்தை அறிமுகப் படுத்த உள்ளனர்.

“தற்பொழுது வாய்ப்புகள் எங்களை தேடி சீராக வருகிறது. குழுவினருக்கிடையே சில மனக் கசப்புகள் ஏற்பட்டாலும், வெளியில் இருந்து சில சிக்கல்கள் வந்தாலும் நாம் இலக்கை நோக்கி நகர வேண்டும்,” என முடிகிறார் வக்காஸ்.