இந்தியாவிலேயே 'சிறந்த சட்டக்கல்லூரி மாணவி' பட்டம் பெற்ற சென்னைப் பெண்!

0

சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பார்கவி கண்ணன் இந்தியாவிலேயே சிறந்த சட்டக்கல்லூரி மாணவி என்ற விருதைப் பெற்று, ரூ. 33 லட்சம் கல்வி உதவித்தொகையுடன் வரும் ஜூலையில் தன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா பறக்க இருக்கிறார்.

மாணவி பார்கவி கண்ணன்
மாணவி பார்கவி கண்ணன்

சர்வதேச அளவில் சட்டக்கல்லூரிகளுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற போட்டி தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், சார்க் நாடுகளைச் சேர்ந்த 30 சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில், சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகள் பார்கவி கண்ணன், பகவதி வெண்ணிமலை, வி.எம்.ஐஸ்வர்யா லட்சுமி, சமீனா சையத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தேசிய அளவில் வெற்றி பெற்ற இவர்கள், சர்வேதச அளவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இறுதி சுற்றில் இலங்கையுடன் இந்திய அணி மோதியது. அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சென்னை சீர்மிகு சட்டக்கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. சிறந்த விவாத குறிப்பாணைக்கான பரிசையும் இவர்கள் பெற்றனர்.

இந்தப் போட்டியில், இறுதி ஆண்டு மாணவி பார்கவி கண்ணனுக்கு, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க உதவித்தொகையாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புப்படி 32 லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய்) வழங்கப்பட்டது.

“ஐந்தாண்டுகளுக்கு முன் என் பெற்றோருடன் என் சட்டப்படிப்பிற்காக வாதாடி வெற்றி பெற்றேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசைக்காக அப்போது அவர்களிடம் வாதாடினேன்,”

எனக் கூறும் பார்கவி, வரும் ஜூலை மாதம் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா பறக்க இருக்கிறார். 

வாழ்த்துக்கள் வழக்கறிஞரே!