பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் மின்சார வசதி பெற்ற தமிழக கிராமம்!

0

நமக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தியா 100 சதவீத மின்சார வசதி கொண்ட நாடாக ஆகவில்லை என்றால் நம்பமுடிகிறதா? இன்னமும் பல மாநிலங்களில் உள்ள பல சிறிய கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அப்படியான கிராமம் இருக்கிறது என்றால் வியப்பாக தான் உள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள செம்புக்கரை என்ற சிறிய கிராமத்தில் இதுவரை மின்சார வசதி இல்லை. மலைவாழ் மக்கள் வாழும் இந்த பகுதியில் பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போழுதுதான் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவரை ஒரு சில தன்னார் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சூரிய ஒளி மூலம் சோலார் பவர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். DNA செய்தியின் படி, கிராம மூத்தவர் பழனிசாமி கூறுகையில்,

”எங்கள் கிராமத்துக்கு இதுவரை மின்சார வசதி இருந்ததே இல்லை. கருணாநிதி அளித்த இலவச டிவி பெட்டியை பயன்படுத்த 3000 ரூபாய் செலவு செய்து பேட்டரி போட்டு டிவி பார்த்தோம். அதே போல் ஜெயலலிதா கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டருக்கு அதிக அளவு பவர் தேவைப்பட்டதால் அதை பேட்டரியால் இயங்கவைக்க முடியவில்லை,” என்றார். 
பட உதவி: Tribal Health Initiative
பட உதவி: Tribal Health Initiative

திமுக மற்றும் அதிமுக இரண்டு அரசுகளுமே இந்த கிராமத்தினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இலவச பொருட்களை கொடுத்தாலும் அதை பயன்படுத்தத் தேவையான மின்சாரத்தை அளிக்காதது இவர்களுக்கு மேலும் எரிச்சலை தந்தது.

இத்தனை ஆண்டுகள் கழிந்தும் செம்புக்கரைக்கு கடந்த ஆண்டுதான் வாக்கு அளிக்கும் பூத் வசதி வந்தது. இவர்கள் முயற்சி எடுக்காததால் மின்சார வசதி கிடைக்கவில்லை என்றால் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் படி, அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி கூறியதில்,

”நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு இது குறித்த பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் மின்சார வசதி அளிக்கும் பணிகள் தொடங்கியது,” என்கிறார். 

மலைவாழ் மக்கள் வாழும் இந்த இடத்தில் மின்சார வசதியை தொடக்கிவைத்தவரும் இவரே. தமிழக மின்சார வாரியத்துக்கு ஒவ்வொரு வீட்டின் சார்பில் அளிக்கவேண்டிய 3200 ரூபாய் டெபாசிட் பணத்தை ஆறுகுட்டியே அளித்துள்ளார். 

மின்வசதி கிடைத்த சந்தோஷத்தில் உள்ள கிராம மக்கள், இனி இலவசமாக கிடைத்த பொருட்களை பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர்.

மின்வசதி இல்லாமல் பள்ளிக்கு நெடுதூரம் போகவேண்டிய கவலை இனி குழந்தைகளுக்கு இல்லை. நீருக்கு போர்வெல் தோண்டவும் இனி நடவடிக்கை எடுக்கலாம். காட்டு யானைகள் மற்றும் எருமைகளிடம் இருந்து வயல்வெளியை காக்க மின்சார கம்பிகளை கட்டமுடியும். இப்படி பல வசதிகளை செம்புக்கரை மக்கள் இனி மின்சார வசதியால் பெற்று கிராமத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல காத்திருக்கின்றனர். 

கட்டுரை: Think Change India