50 சதுர அடி டூ 182 கோடி ரூபாய் பிராண்டாக வளர்ந்துள்ள 'ஐடி பிரெஷ்' வெற்றிக்கதை... 

உடனடி உணவு தயாரிப்பு பிராண்டான 'ஐடி பிரெஷ்' நிறுவனத்தை அதன் நிறுவனர்கள் பெங்களூருவில் ரூ.25,000 க்கு துவங்கினர்.  2019-20 ல் ரூ.350 – 400 கோடி விற்றுமுதலை எதிர்பார்ப்பதாக  இக்குழு தெரிவிக்கிறது. 

0

உடனடி உணவு தயாரிப்பு நிறுவனமான iD Fresh தனது வளர்ச்சி திட்டத்தை அணுகும் விதத்தை ஒரு விபத்து மாற்றியது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், 2005 டிசம்பரில், பிசி முஸ்தபா மற்றும் அவரது துணை சகோதரர்கள், சம்சுதின் டிகே, அப்துல் நாசர், ஜாபர் டிகே, நவுஷத் டிஏ ஆகியோரால், பெங்களூருவில் உள்ள திப்பசந்திராவில் 50 சதுர அடி சமையலறையில் துவக்கப்பட்டது.

ஐடி பிரெஷ் நிறுவனர்கள் 
ஐடி பிரெஷ் நிறுவனர்கள் 
“பிஸியாக இருக்கும் பணிக்கு செல்லும் பெண்கள், தரமான, ஆரோக்கியமான இட்லி-தோசை மாவை பெறும் சாத்தியம் ஆக வேண்டும் என விரும்பினோம்,” என்கிறார் முஸ்தபா.

ஆனால் ஐந்து மாதங்களுக்குப்பிறகு 2006 ஏப்ரலில், நிறுவனர்கள் பெரும் சோதனையை எதிர்கொண்டனர். தற்போது ரூ.182 கோடி விற்றுமுதல் கொண்டதாக உருவாகி இருக்கும் நிறுவனம், அப்போது மாவு அதிகம் புளித்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து திகைத்தது.

பெங்களூருவில் உள்ள மளிகை கடைகளுக்கு நிறுவனம் மாவு சப்ளை செய்தது. ஆனால் இந்த கடைகளில் பிரிட்ஜ் இருக்கவில்லை. இதன் காரணமாக மாவு அதிகம் புளித்து சிறிய அளவில் வெடித்தது. இதனால் நிறுவனர்கள் அதிகம் யோசிக்க வேண்டியிருந்தது.

விபத்து தந்த பாடம்

பெங்களூருவில், ஹைவ் எனும் இணை பணியிடத்தில் சொகுசு அலுவலகத்தில் அமர்ந்தபடி பேசும் முஸ்தபா, இந்த வெடி விபத்து, தயாரிப்பு மற்றும் பேக்கிங் முறையை மாற்றி அமைக்க வைத்ததாக கூறுகிறார். பில்டர் காபி டிகாஷன் வடிவில் புதிய பொருளை அறிமுகம் செய்ய தயாராகும் நிறுவனம், 2006ல் நடைபெற்ற இந்த வெடி விபத்து நல்ல பாடமாக அமைந்ததாக கூறுகிறது.

“கட்டுப்பத்தப்பட்ட புளிக்கும் நுட்பத்தை அமல் செய்தோம், பேக்கேஜை மாற்றி அமைத்தோம், நாங்கள் விநியோக்கும் கடைகளை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த துவங்கினோம்,” என்கிறார் முஸ்தபா.

நிறுவனர்கள், கையில் ரூ.25,000ல் வர்த்தகத்தை துவக்கினர். மிக்சர்கள் மற்றும் கிரைண்டர்களில் முதலீடு செய்தனர். 100 பாக்கெட்களை தயாரிக்க முடிந்தது, நகரில் 20 கடைகளுக்கு விநியோகம் செய்தனர். ஆறு மாதங்களில் இந்த இலக்கை அடைய நினைத்தனர். ஆனால் 9 மாதங்கள் ஆனது.

“பாக்கெட்டில் மாவு வாங்க மக்கள் தயாராக இல்லை. இன்று நாள் ஒன்றுக்கு 55,000 கிலோ விற்பனை செய்கிறோம்,” என்கிறார் முஸ்தபா. 

ஐடி பிரெஷ் இன்று 30,000 க்கும் மேற்பட்ட கடைகளில் கிடைக்கிறது. இந்த நிதியாண்டியில் ரூ.286 கோடி விற்றுமுதலை எட்ட உள்ளது.

நீண்ட பயணம்

கேரளாவின், வயநாடு அருகே உள்ள சிறிய கிராமத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகனான முஸ்தபா நீண்ட தொலைவு முன்னேறி வந்திருக்கிறார். முஸ்தபா 10 வயதாக இருந்த போது பள்ளி படிப்பை நிறுத்தினார். 5 ம் வகுப்பில் அவர் தேர்ச்சி அடையவில்லை. அவர் சராசரி மாணவராக தான் இருந்தார். வீட்டில் பண நெருக்கடி அவரை கூலி வேலை செய்ய வைத்தது.

“எனது துணை சகோதரர் நாசர் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவர் கஷ்டங்களில் இருந்துவிடுபட விரும்பினார். வளர்ந்து பணம் சமாதிக்க, நான் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். என்.ஐ.டி கோழிக்கோடில் பொறியியல் முடித்தேன்,” என்று தனது வாழ்க்கையை நினைவு கூறுகிறார் முஸ்தபா.

முஸ்தபா எம்பிஏ பட்டம் பெற்று இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றினார். 2004ல், முஸ்தபா இந்தியா திரும்பினார். அவரது மனதில் மூன்று இலக்குகள் இருந்தன. தனது கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது, பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவது மற்றும் உயர் கல்வி தொடர்வது ஆகியவை அவரது எண்ணமாக இருந்தன.

முஸ்தபா பெங்களூரு திரும்பியதும் தனது துணை சகோதரர்களை சந்தித்தார். 

 “நாசர் மற்றும் சம்சுதின் பெங்களூருவில் மளிகைக் கடை துவக்கியிருந்தனர். நாங்கள் மாலை வேளைகளில் சந்தித்து பேசுவோம்,” என்கிறார் முஸ்தபா.

ஐடி துவக்கம்

இந்த சந்திப்புகளின் போது தான், சம்சுதின் மற்றும் நாசர், உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடிய நம்பகமான இட்லி தோசை மாவு பிராண்டை உருவாக்குவது பற்றி பேசினர். இதற்கு ஐடி என பெயர் வைக்கத் தீர்மானித்தனர்.

“என்னுடைய அடையாள அட்டை காரணம் என நினைத்தேன், ஆனால் சம்சுதின் இட்லி, தோசையை நினைத்துக்கொண்டார். அவர்கள் ஒரு வடிவமைப்பாளரை அமர்த்தி, ரூ.2,000 க்கு லோகோ மற்றும் பேக்கேஜ் வடிவமைக்க வைத்தனர். அந்த வடிவமைப்பாளர் மூலம் பேக்கேஜ் வெண்டர் அறிமுகம் கிடைத்தது. எல்லாம் சரியாக நடக்கத்துவங்கின.

வெடி விபத்து சம்பவத்திற்கு பிறகு, குளிர்சாதன வசதி கொண்ட பெரிய கடைகள் மற்றும் இரவில் மின்சாரத்தை அணைக்காத கடைகளில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

“முதல் நாளில் இருந்து ரூ.400 லாபம் பார்க்கத் துவங்கினோம். என்னுடைய தனிப்பட்ட சேமிப்பான ரூ.6 லட்சத்தை கருவிகள் மற்றும் 800 சதுர அடி அலுவலகத்தில் முதலீடு செய்தோம்,” என்கிறார் முஸ்தபா.

2007ல் அவர் சி.இ.ஓவாக முழுநேர பொறுப்பு எடுத்துக்கொண்டார். அப்போது ஐடி நாள் ஒன்றுக்கு 3,500 கிலோ விற்க துவங்கியிருந்தது.

“முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு பின்னர் கிடைத்தது. ஹீலியான் வென்ச்சர்ஸ் 2014 ல் ஆதரவு அளித்தது. 2017 ல் பிரேம்ஜி முதலீடு செய்தார்,” என்கிறார் முஸ்தபா.

2007 ல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தீர்மானித்த போது, முஸ்தபா வயநாட்டில் தனது நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு விற்று விட்டு, ஹாஸ்கோட்டில் 2,500 சதுர அடி ஆலை வாங்கினார். இங்கு தான் புதுமையான இயந்திரங்களை அமைக்க தீர்மானித்தனர்.

இயந்திரங்களில் கவனம்

ஐடி பிரெஷ் குழு
ஐடி பிரெஷ் குழு

“துவக்கத்தில் கோவையில் இருந்து இயந்திரங்களை தருவித்தோம். ஆனால் இவற்றை மேம்படுத்த முடியவில்லை. ஐடி பிரெஷ் பின் இருக்கும் நாசர் படைப்பூக்கம் மிக்கவர். அவர் தான் வடா மேக்கர் இயந்திரத்தை உருவாக்கினார். பல இயந்திரங்களுக்கு மனித தலையீடு தேவைப்பட்டது தரத்தை பாதிப்பதாக அவர் உணர்ந்தார். அவர் தனித்துவம் வாய்ந்த இன்னமும் காப்புரிமைக்கு காத்திருக்கும் இயந்திரத்தை உருவாக்கி அதை தயாரிக்க வைத்தார்,” என்கிறார் முஸ்தபா.

ஐடி பிரெஷ் வளர்ச்சியில் தனித்தன்மை வாய்ந்த மார்க்கெட்டிங் உத்திகளும் முக்கியப் பங்காற்றின. நிறுவனத்தைன் வடா மேக்கர் வீடியோ வைரலாக பரவியது இதற்கு உதாரணம். முஸ்தபா ஹார்வர்டில் அதை காட்சிப்படுத்துவதற்கு முன் கசிந்ததாக கருதப்படுகிறது.

“எங்கள் மார்க்கெட்டிங் உத்தி பேக்கிங் அல்லது பயனாளிகளை மையமாகக் கொண்டு அமைகின்றன. இவை வாடிக்கையாளர்களை கவர்கிறது,” என்கிறார் முஸ்தபா.

2009 மற்றும் 2010, நிறுவனர்கள் விரிவாக்கம் செய்ய தீர்மானித்தனர். பெங்களூருவில் துவங்கிய ஐடி பிரெஷ், சென்னை, மும்பை, புனே, ஐதராபாத், தில்லி மற்றும் துபாயிலும் கிடைக்கத்துவங்கியது. இதற்காக முஸ்தபா தனது சேமிப்பில் ரூ.30 லட்சம் செலவிட்டார்.

இருப்பினும், 2010 ல் நிறுவனம் சென்னையில் பின்னடைவை சந்திதத்து. பணம் ஏகமாக செலவாகி சம்பளம் கொடுக்க முடியாத நிலை.

சென்னை பின்னடைவு

“சென்னை மிகவும் போட்டி மிக்க சந்தை என உணர்ந்தோம். உள்ளூரு இட்லி தோசை மாவு ரூ.10 க்கு விற்பனையானது. அந்த விலையில் எங்களால் விற்க முடியாது. இது வர்த்தகத்தை பாதித்தது. ஆலையை மூடி விட்டு, தொழிலாளர்களுக்கு வாடகை டெபாசிட் அளித்தோம். மீண்டும் அடிப்படைக்கு சென்றோம்,” என்கிறார் முஸ்தபா.

ஒராண்டுக்கு ஐடி பிரெஷ் சென்னையில் அமைதியாக செயல்பட்டு மற்ற இடங்களில் கவனம் செலுத்தியது. இந்த கட்டத்தில் தான் நிறுவனர்கள் மற்ற பொருட்கள் பற்றி யோசித்தனர்.  நாசர்; பரோட்டா, தயிர், பன்னீர், சப்பாத்தி மற்றும், வடா ஆகியவற்றை உருவாக்கினார். 

“ஆய்வு என கூறும்போது, சமைப்பதை புரிந்து கொண்டு, மக்கள் விரும்பியதை அளிக்கும் நாசரை தான் குறிப்பிடுகிறேன்,” என்கிறார் முஸ்தாபா.

நிறுவனம் சென்னைக்கு 2012 ல் திரும்பியது. இந்த முறை பரோட்டா மட்டும் விற்பனை செய்தது. பிராண்ட் மற்றும் ரீடைல் இருப்பது வலுவான பிறகு மீண்டும் இட்லி மாவு அறிமுகம் செய்தனர்.

அடுத்த ஆண்டு, ஐடிபிரெஷ் துபாயில் விரிவாக்கம் செய்து, 2014 ல் முதல் சுற்று நிதியாக ரூ.35 கோடி திரட்டியது. “இந்த நிதி, மேலும் பொருட்கள், இயந்திரங்களை சேர்த்தும், வேகமாக விரிவாக்கம் செய்ய உதவியது,” என்கிறார் முஸ்தபா.

பிரேம்ஜி ஆதரவு

2017ல் இக்குழு பிரேம்ஜி இன்வெஸ்ட் மூலம் ரூ.25 மில்லியன் திரட்டியது. இதன் மூலம், இந்தியாவில் பெங்களூரு, தில்லி, மும்பை, மற்றும் கொல்கத்தாவில், மற்றும் மத்திய கிழக்கில் பெரிய தயாரிப்பு வசதி அமைப்பதில் கவனம் செலுத்தியது.

“2019-20 நிதியாண்டில் ரூ.350-ரூ.400 கோடி விற்றுமுதலை எதிர்பார்க்கிறோம். இதில் வடா விற்பனை மூலம் ரூ.100 கோடி எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் முஸ்தபா.

இந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் நுழையவும் திட்டமிட்டுள்ளது. உடனடி உணவு தயாரிப்பு சந்தை கடந்த ஆண்டு ரூ.275 கோடியாக கருதப்பட்டது. காலை உணவு பிரிவு 17 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த பிரிவில், பெங்களூருவின் எம்டிஆர். மற்றும் கிட்ஸ் இருக்கிறது. நெஸ்லே, பாம்பினோ போன்ற நிறுவனங்களும் உள்ளன.

“இந்த பிரிவில் பில்லியன் டாலர் வாய்ப்பு உள்ளது. ஐடி பிரெஷ் முதல் நிறுவனம் என்ற முறையில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் ரூ.5,000 கோடி இட்லி, தோசை சந்தை மற்றும் ரூ.1,000 கோடி பரோட்டா சந்தையை உருவாக்குவதில் ஐடிபிரெஷ் முன்னிலை வகிக்கிறது. இதில் இன்று 5 சதவீதம் மட்டுமே உள்ளது. ஐடி பிரெஷ் ரூ.1000 கோடி நிறுவனமாக உருவாகும் என நம்புகிறோம்,” என்கிறார் பிரேம்ஜி இன்வெஸ்ட் துணைத்தலைவர் ஹரேஷ் பலானி.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்