'வாய்ப்பு கிடைத்தால் விளையாட்டில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதிப்பார்கள்'- ஷிபா மகூன்

0

"கூடைப்பந்துதான் என்னுடைய வாழ்க்கை, அது என்னுடைய ரத்தத்தில் கலந்துவிட்டது" என்கிறார் 20 வருடங்களாக கூடைபந்து விளையாடும் ஷிபா மேகூன். கூடைப்பந்தில் இவர் விளையாட்டு வீரர் மட்டுமல்ல, பயிற்சியாளர் மற்றும் சர்வதேச நடுவரரும் கூட.

தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றிருக்கிறார். 5 முறை FIBA ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார். 2006-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் இந்திய அணியில் பங்கேற்றார்.

ஷிபாவின் சாதனை பட்டியல் நீண்டாலும் தன்னைப்பற்றி அவர் அதிகமாக பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் விளையாட்டு மற்றும் அதன் மேலுள்ள ஈடுபாடு பற்றித்தான்.

ஷிபா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம்

ஷிபா, கர்னலில் பிறந்து வளர்ந்தார். தன் பள்ளிப்படிப்பை அங்கே தொடங்கினார். 1989-ல் கூடைப்பந்து விளையாட்டு குறித்த முதல் அனுபவம் அவருக்கு கிடைத்தது. அவரது உறவினர் ஒருவரை அழைத்துவர சென்ற இடத்தில் அந்த உறவினர் அங்கே கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தார். ஷிபாவிற்கு கூடைப்பந்தில் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆனால் அவரது மூத்த சகோதரி விளையாட்டை மிகவும் ரசித்தார். ஷிபாவின் சகோதரிக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் அவருடனும் ஒட்டிக்கொண்டது.

“என் சகோதரியுடன் விளையாட ஆரம்பித்தேன். அவர்களால் எனக்கு கிடைத்த தொடர்புதான் கூடைப்பந்து விளையாட்டு”. ஷிபா இந்த விளையாட்டை வேகமாக கற்றுக்கொண்டார். அவரிடம் இயற்கையாகவே திறமையும் ஆர்வமும் இருந்ததால் அவரால் நன்றாக விளையாடமுடிந்தது.

சண்டிகரில் இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கினார். அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். SAI, சண்டிகருக்காக விளையாடி பதக்கங்களை வென்றார்.

SAI-ல் சேர்ந்த சில காலங்களிலேயே அவரது சகோதரி ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது இழப்பை ஷிபாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சகஜ நிலைக்கு திரும்பமுடியாமல் அவதிப்பட்டார். அவரது சகோதரிக்கு கூடைப்பந்தில் தீவிர ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஷிபா தன் சகோதரிக்கு பிடித்த விளையாட்டான கூடைப்பந்தின் பக்கம் தன் முழு கவனத்தையும் திருப்பினார். இன்னும் சிறப்பாக விளையாடினார்.

ஒரு குழுவாக இயங்கி விளையாட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல பயிற்சிகள் மேற்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு முகாமில் பயிற்சியின் போது அவரது வலது கையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரால் வலது கையை உபயோகிக்க முடியவில்லை. இருப்பினும் தினமும் இடது கையால் பயிற்சியை தொடர்ந்தார். அந்த அளவிற்கு அவரிடம் கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆர்வம் தென்பட்டது.

கடுமையான உழைப்பின் மகிமையை அவர் உணர்ந்தார். 1992-ல் அவர் 12-ம் இடத்திலிருந்து 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். முகாமில் இருந்த மூத்த ஆண்கள் அணியில் இருந்தவர்கள் ஷிபாவின் கடும் பயிற்சியையும் விடாமுயற்சியையும் கண்டு வியந்தனர். “உன்னுடைய விளையாட்டில் நீ சிறந்து விளங்கவேண்டும். அதாவது உன்னை விளையாட்டிலிருந்து விலக்குவதற்கு முன் பல முறை நன்றாக யோசிக்கவேண்டும். அந்த அளவிற்கு உன்னுடைய திறமை இருக்கவேண்டும்” என்றனர். இது ஷிபாவால் மறக்க முடியாத வரிகள்.

பயிற்சிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பயிற்சியாளரிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார். 1997-ல் மூத்த இந்திய அணியில் விளையாடியபோது, அவரது திறமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஷிபாவின் விளையாட்டுதான் அவருக்கான முத்திரை. 5 வருடங்கள் விடுதியில் தங்கியபின்பும், இந்திய அணியில் சேரவில்லை. இருப்பினும் மாநில அளவில் அவர் வென்ற பதக்கங்களின் காரணமாக அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

விளையாட்டு ஆரம்பமானது

“பிரச்சனை என்பது வாழ்க்கையில் இருக்கும். அந்த தடைகளை நான் கடந்து செல்வேன்” என்கிறார் ஷிபா.

விளையாட்டில் சேர்ந்தபிறகு, படிப்பிலும் அவர் சிறந்து விளங்கினார். “எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாவதற்கு கூடைப்பந்து விளையாட்டுதான் காரணம். மேற்படிப்புக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.”

மேற்கொண்டு படித்து உடற்பயிற்சி கல்வியில் முதுகலை பட்டம் பெற திட்டமிட்டார். கல்லூரி படிப்பு முடிந்து வீடு திரும்பினார். வீட்டிலுள்ள நிதி நெருக்கடியைப் பார்த்ததும் வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். 1996-ல் மேற்கு ரயில்வேயில் சேர்ந்தார்.

“கல்லூரி நாட்களில் பல இடங்களிலிருந்தும் வேலைக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் படிப்பில் கவனம் செலுத்த எண்ணி மறுத்துவிட்டேன். வீட்டின் நிலைமை மாறியது. நான் முன்மாதிரியாக கருதும் அஜ்மீர் சிங் சோப்ரா வெஸ்ட் ரயில்வேஸில் இருப்பதைக் கண்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. நான் பணியில் சேர்ந்தேன். என்னுடைய மேற்படிப்பு கனவு குறித்து குடும்பத்தினருக்கு தெரியாது.” என்கிறார் ஷிபா.

2000-ம் ஆண்டு வரை ஷிபா ரயில்வேயில் இருந்தார். அதில் விளையாடி ஆறு தங்க பதக்கங்களை வென்றார். அவர் ரயில்வேஸ் அணியிலிருந்து வெளியேற விரும்பவில்லை. உறவினர் ஒருவருக்கு ஷிபாவின் உதவி தேவைப்பட்டதால் டெல்லிக்கு சென்றார். MTNL-ல் சேர்ந்து 2011 வரை பணிபுரிந்தார்.

நடுவருக்கான தேர்வு எழுதி 2008-ல் தேர்ச்சி பெற்றார். அவர் தொடர்ந்து விளையாடுவதால் நடுவராக இருப்பது சுலபமாக இருப்பதாக தெரிவித்தார்.

"என்னுடைய தடைகளை எதிர்கொள்ள கூடைப்பந்துதான் எனக்கு தேவையான ஊக்கத்தை அளித்தது. நான் விளையாட போகும்போது அடுத்தவரை தோல்வியடையச் செய்யவேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருக்காது. நான் அடுத்தவருடன் போட்டியிடவில்லை. எனது முந்தைய சிறந்த விளையாட்டுடன்தான் போட்டியிடுகிறேன். அதாவது நான் என்னுடனே போட்டியிடுகிறேன்.”

மறக்கமுடியாத வெற்றித் தருணங்கள்

“நான் வெற்றியடைந்த எல்லா தருணங்களும் மறக்க முடியாதவைதான். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் 1993-ல் நடந்த முதல் ஜூனியர் நேஷனல் போட்டியில் கிடைத்த தங்க பதக்கம். நான் அணித்தலைவராக இருந்தேன். இறுதி மேட்ச் நடைபெற்றது. என்னுடைய பெற்றோர் அதைப்பார்க்க வந்திருந்தனர். முந்தைய மேட்சுக்கோ பயிற்சி எடுக்கும்போதோ அவர்கள் வந்ததில்லை. எல்லோரும் அவர்களை பாராட்டினார்கள். அப்பொழுது அவர்கள் முகத்தில் தோன்றிய சந்தோஷமும் பெருமிதமும் என்னால் மறக்கமுடியாத தருணம்.”

லூதியானாவில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டி அவருக்கு மிகவும் நெருக்கமான தருணம் என்கிறார் ஷிபா. அவர் விளையாடியபோது அவரது அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். ஷிபாவின் அம்மாவிற்கு அருகில் அமர்ந்திருந்தவர் ஷிபாவை காட்டி,

“அந்த பெண்ணைப் பாருங்கள். நன்றாக விளையாடுகிறார். இரண்டு நாட்களாக நான் அவர் ஆடுவதை பார்க்கத்தான் வருகிறேன்” என்றார். அவருக்கு அது ஷிபாவின் அம்மா என்று தெரியாது.

விளையாட்டும் பெண்களும்

பெண்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. பெண்களைக்குறித்த சமூகத்தின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் விளையாட்டை சார்ந்த பெண்களின் நிலை மாறியுள்ளது.

ஆண்கள் அணியில் இருப்பவர்களைப் போல வெளியிடங்களுக்கு பயணம் செய்வது, வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி எடுப்பது போன்ற வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஆண், பெண் இருவரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். திறைமைக்கேற்ற ஊதியம் பெறுகிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டு பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஹரிஷ் ஷர்மாவின். இந்த விளையாட்டு பிரபலமானதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது.

கூடைப்பந்து விளையாட்டு கற்றுக்கொடுத்த பாடம்

"கூடைப்பந்து விளையாட்டிலிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் அது ஒரு குழுவின் விளையாட்டு. எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்ததில்லை.” என்கிறார் ஷிபா.

அது மட்டுமல்லாமல், இந்த விளையாட்டு அவருக்கு பல விஷயங்களை கற்றுத்தந்ததாக தெரிவிக்கிறார்.

“குழுவிற்கு தலைமை வகிப்பது, கடமையுணர்ச்சியுடன் செயல்படுவது, வார்த்தை தவறாமல் நடப்பது போன்ற விஷயங்களை கற்றுத்தந்தது. மேலும் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை வளர்ந்தது. ஒரு குழுவாக இயங்கும்போது தியாகம், தன்னடக்கம் போன்ற குணங்களும் அத்தியாவசியமானது. இதையும் இந்த விளையாட்டுதான் எனக்கு கற்றுத்தந்தது. விளையாட்டு வீரர்களுக்கு வாழ்க்கையின் பல சவால்களை எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும்.”

ஷிபா பயிற்சியாளராக உள்ளார். ஒரு அகாடமி நடத்தி வருகிறார். இந்த அகாடமியை அவர் இன்னும் பதிவு செய்யவில்லை. இதன் மூலம் மூன்று மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறார். மேலும் பல மாணவர்களுக்கு நிதியுதவி செய்யும் நோக்கத்துடன் அவர் கட்டணம் வசூலித்தும் பயிற்சியளித்து வருகிறார். வீழ்ச்சியை நெருங்க விடமாட்டேன் எனும் உறுதிதான் ஷிபாவை பலப்படுத்தியது.

ஆக்கம் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பெண்கள் தொடர்பு கட்டுரை:

இந்தியாவின் முதல் பெண் சுமோ மல்யுத்த வீராங்கனைக்கு உதவிக்கரம் நீட்டத் தயாரா?

இந்தியாவின் முதல் பெண் கடல் உலாவர் இஷிடா மால்வியா!