தோல்வியின் அடியாழம் தொட்டும் தளராத இந்தோரின் 'Wittyfeed' வெற்றிக்கனியை சுவைத்தது எப்படி?

1

நான்கு பொருட்கள் சந்தையில் தோல்வியைத் தழுவியபோதும், இவர் மீண்டெழுந்துள்ளது எப்படி?

பதில் இந்தோரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியத்திலும் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்யும் இந்தக் கூட்டணி ஒருங்கே பணியாற்றுவதற்குள்தான் ஒளிந்திருக்கின்றது. ஆறு கோடி தனிப்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட இந்த போர்ட்டல், இருபத்தைந்து கோடி பார்வையாளர்களை மாதந்தோறும் பெற்றுள்ளது.

அகில இந்திய சாதனையாளர்கள் கழகம் ‘வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கான’ விருதை பேங்காக்கில் நடைபெற்ற ஒரு விழாவில் வழங்கியுள்ளது. கூகுள் இந்நிறுவனத்தை, தங்கள் தயாரிப்புகள் பயன்படுத்தி வெற்றியடைந்த நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.

விட்டிஃபீட் குடும்பம்
விட்டிஃபீட் குடும்பம்

இந்தியாவில் அதிக பார்வையாளர்களால் கவனிக்கப்படும் தலைச்சிறந்த ஐநூறு வலைதளங்களில் ஒன்றாக, தொடங்கிய ஒரே ஆண்டில் இது உருவெடுத்துள்ளது. இந்த வலைதளம் தமது அதிசிறந்த எழுத்துக்களால், வாசகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

கருத்துச் சித்திரங்கள் நிறைந்த கட்டுரைகளைக் கொண்டதாக Wittyfeed.com வலைதளம் விளம்பரப்படுத்தப் படுகின்றது. யார் வேண்டுமானாலும், தாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களை எழுதவோ, படிக்கவோ உணர்ந்து கொள்ளவோ இந்த வலைதளத்தை அணுகலாம். “இது நவயுக வலைப்பதிவர்களுக்கான ‘யூடியூப்’ போல செயல்பட்டு வருகின்றது. புகைபடங்களுடன் ஒருங்கிணைந்த கதையோ, அல்லது இணையவாசிகளுக்கேற்ற கட்டுரையோ அனைத்தையும் இந்த வலைதளத்தில் பகிரலாம். ஆனாலும், உலகளாவிய வாசகர்கள் தொடர்ந்து விட்டிஃபீட் வலைதளத்துக்கு வருவதற்கு அதிச்சிறந்த எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இணையத்தைக் கலக்கும் வைரல் கட்டுரைகள் இடம்பெறுவதும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

தொடக்கத்தில் திணறிய விட்டிஃபீட் எவ்வாறு மீண்டெழுந்தது? வத்சனா டெக்னாலஜீஸ் லிமிட்டெட் உருவாக்கிய எவ்ரிஸ்ட்ரை.காம் (evrystry.com) மற்றும் தி ஸ்டுப்பிட் ஸ்டேஷன்.காம் (thestudpidstation.com) போன்ற வலைதளங்களைக் காட்டிலும் பெரியளவில் இது வெற்றியடைந்துள்ளது. புத்தம் புதிய வடிவத்தில் வெளிவந்துள்ள விட்டிஃபீட், ஒரே ஆண்டில் தமக்கிருந்த மாதத்துக்கு ஐம்பது லட்சம் வாசகர்களிலிருந்து இருபத்தைந்து கோடியாக எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டுள்ளது. எப்படி இது சாத்தியமானது? என நம்மிடம் கேள்வியெழுப்புகின்றார் இதன் இணை- நிறுவனர் வினய் சிங்கால், “ஒரே இரவில் இந்த மாற்றம் வரவில்லை. நான்கு ஆண்டுகளாக சோதனை செய்து எங்களது பிழைகளை திருத்திக்கொண்டோம். இதை விளம்பரப்படுத்தும் முயற்சியில் பல பாடங்களைக் கற்றோம். எவ்ரிஸ்டோரி என்ற எங்களது போர்ட்டல் எமது தற்போதைய சேவைக்கு ஏற்புடையதாக இல்லை. சிறப்பான பெயர் வைக்க எண்ணிய நாங்கள் இதனை மனதளவில் ‘பிளாட்ஃபார்ம்’ என அழைக்க நினைத்தோம்.”

விட்டிஃபீட் சமீபத்தில்தான் ஒரே நேரத்தில் நாற்பத்தைந்தாயிரம் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்ட சாதனையை எட்டியது. ஒரே நாளில் அறுபது லட்சம் பேர் இதைப் பயன்படுத்தினர். இந்த மகிழ்ச்சியானத் தருணத்தை முப்பத்தைந்து பணியாளர்களும் ‘சிலிக்கான் வேலி ஸ்டைலில்’ மாபெரும் திரைக்கு முன்பாக ஆடிக் கொண்டாடினர்.

விட்டிஃபீடின் வருமானம் ஈட்டும் வழிமுறை

விட்டிஃபீட் தனது வாசகர்களுக்கு பிடித்தமான விதத்தில் கட்டுரைகளை வழங்குவதுடன், பல்வேறு விளம்பரங்கள் மற்றும் டூல்களின்(கூகுள் AdX, ஓப்பன்X, இபோம் மற்றும் கண்டெண்ட் ad ) மூலமாக வருவாயை ஈட்டுகின்றது. இதன் தனித்தன்மை என்னவென்றால், இணையத்தில் வைரலாக உலவுகின்றவற்றை அடையாளம் காண உதவும், வைரல்9.காம்-ஐச் சேர்ந்த ஆறாயிரத்துக்கும் அதிகமான சமூக வலைதளத்தை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்கள். வலைதள பார்வையாளர்களின் வருகையைக் கண்டு கூகுள் விட்டிஃபீட் பக்கத்தைக் கண்காணிக்கத் தனியொரு மேலாளரை பணியமர்த்தியுள்ளது.

“தற்போது, எங்களுக்கென வைரல் விவகாரங்களைக் கண்டறிய சிலரைப் பணியமர்த்தியுள்ளோம். வலைதளத்தில் வெளியிடுவதற்கு முன்னர் கட்டுரைகளை சரிபார்க்க எழுத்தாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எது வைரல் அல்லது எது வைரல் அல்ல? எனச் சொல்வதற்கான அமைப்பின் கீழ் எங்கள் குழு பணியாற்றி வருவதாக", இணை-நிறுவனரான ஷஷான்க் வைஷ்ணவ் குறிப்பிட்டார். ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு தனது மூன்றாமாண்டு கல்லூரிப் படிப்பின்போது ஷஷான்க் ‘அமேஸிங் திங்ஸ் இன் தி வேர்ல்ட்’ வலைதளத்தினை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“விளம்பரங்களின் எதிர்காலம் இன்று நாம் பார்க்கும் விளம்பர லின்க்குகள் அல்ல. மாறாக, கட்டுரைகளுடன் சேர்ந்தே வரும் விளம்பரங்கள்தான்,” என விட்டிஃபீடின் மூன்றாவது இணை-நிறுவனரான பர்வீன் சிங்கல் தெரிவித்தார்.

விட்டிஃபீடின் இணை -நிறுவனர்கள்
விட்டிஃபீடின் இணை -நிறுவனர்கள்

கட்டுரைகளை மேற்பார்வையிடும் வலைதளங்கள் இங்கு மிகவும் குறைவு. “நாங்கள் வலைதளத்தைத் தொடங்கும்போது, ‘பஸ்ஃபீட்’ மற்றும் ‘டிப்லி’ போன்ற வலைதளங்களை எங்களது போட்டியாளர்களாக கருதினோம். இந்த வலைதளங்கள் ஏற்கனவே மாபெரும் அளவில் வெற்றி பெற்றிருந்தன. ஆகவே, மற்றொமொரு கட்டுரைகள் கொண்ட சாதாரண வலைதளம் உருவாக்குவதைவிட, சிறப்பான கருத்துக்களை வெளியிடுவதற்கான தளம் அமைக்கவே முடிவுசெய்தோம். ‘சார்ட்டிக்கல்’ தளமான இது, புகைப்படங்கள் மூலமும், விரும்பும் கதைகள் சொல்லும் தளமாக விளங்கும்,” என எடுத்துரைக்கின்றார் பர்வீன்.

இங்கு பணிபுரிய வேண்டுமா? எழுந்து நடனமாடு!

விட்டிஃபீட், தன்னுடைய பெயரைப் போலவே வித்தியசமான அசத்தலான முறையில் பணிக்கானவர்களை தேர்வு நடத்துகின்றது. இங்கே வேலையில் சேர விரும்புவோர் ஆடலோ, பாடலோ, ஜோக்குகளையோ நேர்முகத் தேர்வில் செய்து காண்பிக்க வேண்டும். “இப்படிப்பட்டவர்களைத்தான் நாங்கள் பணியமர்த்த விரும்புகின்றோம். தமக்கு வசதியாக உள்ள வட்டத்தை விட்டு வெளியே வர எண்ணுபவர்களுக்கே இங்கு முன்னுரிமை. இங்கு, தம்மைப் பற்றிய மதிப்பீடு குறித்து வருத்தப்படாமல் யாராக வேண்டுமானலும் நீங்கள் இருக்கலாம்,” என்கிறார் வினய்.

“இங்கு பணிபுரிவோரில் பெரும்பாலானோர், கல்லூரியிலிருந்து நேரடியாக முதல் பணியில் சேர்ந்தவர்கள். இதுபோன்றவர்களால், புதியவற்றை எளிதாகக் கற்கவும் விட்டிஃபீடின் சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளவும் முடியும்” என்கிறார் பர்வீன்.

இங்கு பணியாற்றும் வெளியூர்களைச் சேர்ந்த ஆண்களுக்கென ஒரு தனி அடுக்குமாடி குடியிறுப்பு உள்ளது. இவர்களது உடல்நலனை கவனித்துக்கொள்ள ஒரு சமையல்காரரை பணியமர்த்தியுள்ளனர். இவர்களது மாதந்திர தேவைகளை நிர்வாகமே கவனித்துக்கொள்கின்றது.

இந்தோரில் அடித்தளம்

ஹரியானவைச் சேர்ந்த சகோதரர்களான வினய் மற்றும் பர்வீன், இண்டோரில் பிறந்து வளர்ந்த ஷஷான்க்கை கல்லூரி நாட்களின்போது சென்னையில் சந்தித்தனர். கல்லூரியின் மூன்றாமாண்டு தொடங்கி வலைதளத்துக்கான பணிகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தங்கி சென்னையிலேயே கவனித்தனர். ஷஷான்க்கின் சொந்த ஊரான இந்தோருக்கு பயணித்த வினய், தமது வலைதளத் தொழிலைத் தொடங்க இதுவே சரியான இடம் எனத் தீர்மானித்தார். இதையடுத்து, மூன்றே மாதங்களில் சென்னையிலிருந்து இந்தோர் நகரத்துக்கு குடிபெயர்ந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விட்டிஃபீட் வலைத்தளத்தின் அடித்தளமாகியது இந்தோர்.

தற்போதைய கணக்கின்படி 2015-2016 ஆண்டில் விட்டிஃபீட் பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருமானமாகப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் நிறுவனர்கள் தமது வெற்றிக்கு பணியாளர்களின் உழைப்பே முக்கியமான காரணம் என நன்றியுடன் கூறினர். “நாங்கள் மனிதர்களை பணியமர்த்துகின்றோம், திறமையை மட்டுமல்ல. தமக்கு பிடித்தமானவற்றை மட்டுமே எங்களிடம் பணியோற்றுவோர் காதலுடன் செய்கின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக வாழ்கிறோம்,” என்றார் ஷஷான்க்.

வெற்றியடைய வழிமுறை எதுவும் இல்லை. ஆனால், சரியான குழு அமைந்தால் வெற்றிக்கான வழிமுறையை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும்,” என்றார் வினய்.

எல்லாப் பக்கமும் எழுத்துத் தொழில் கிளை பரப்பி, எல்லையின்றி வளர்ந்து வருகின்றது. வலைப்பதிவர் மற்றும் எழுத்தாளரான மார்க் ஸ்கஃபெர் “2020-க்குள், இணையம் சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் (வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப) அறுநூறு சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். பி.க்யூ. ஊடகத்தின் கணிப்பின்படி இதனைச் சார்ந்த தொழில்கள் மட்டும் முப்பத்தோரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் நடமாடும் துறையாக 2019-ம் ஆண்டு வலம்வரும் என செய்தி வெளியிட்டுள்ளது.

இணையதள முகவரி: Wittyfeed

ஆக்கம்: Mukti Masih | தமிழில்: மூகாம்பிகை தேவி