பின்தங்கிய குழந்தைகளை முன்னேற்றும் பிஜ்லியின் பாதை!

0

கல்விப் பணியில் கவனம் செலுத்தும் ஐபிஇஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைக்காலஜிகல் அண்ட் எஜுகேஷன் ரிசர்ச் (IPER - Institute of Psychological and Educational Research) என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குநர் டாக்டர் பிஜ்லி மாலிக். தற்போது ஐ.பி.இ.ஆர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடிசைப் பகுதிகளில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூலம் 682 சிறுவர்கள், 736 சிறுமிகள் என 1445 மாணவர்களுக்கு நேரடியாக கல்வி வழங்கி வருகிறது. "அர்ப்பணிப்பு மிக்க 39 ஆசிரியர்களுடன் மொத்தம் 30 மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக ஐபிஇஆர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், தெருவோரக் குழந்தைகளுக்கு சமூகத்தில் இயன்றவரையில் இயல்பு நிலையை அளித்திடும் வகையில் ஒருங்கிணைந்தத் திட்டம் குறிப்பிடத்தக்கது. கல்வி, ஊட்டச்சத்து, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்குவதும், வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். கடந்த ஓராண்டில் 16 மையங்கள் மூலம் கொல்கத்தா முழுவதும் 500 குழந்தைகள் பலனடைந்துள்ளனர்."

எங்களது மற்ற திட்டங்கள் மூலம் கல்வி கற்கும் வசதி, ஊட்டச்சத்து தேவையான குழந்தைகளுக்கு அடிப்படை உதவிகளைச் செய்து வருகிறோம். குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தை, குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நெறிமுறைகளின்படி செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 350 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்" என்றார் பிஜ்லி மாலிக்.

பிஜ்லி மாலிக் வகித்து வரும் பொறுப்புகளும் பதவிகளும் மலைக்க வைப்பவை. பணிபுரியும் பெண்களின் முன்னேற்றத்துக்கும், சமூகத்தில் மோசமான நிலையில் உள்ள பெண்கள் - குழந்தைகளின் நலன் காக்கவும் உறுதுணைபுரியும் 'சொரோப்டமிஸ்ட் இன்டர்நேஷனல் ஆஃப் சவுத் கொல்கத்தா' என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர் இவர். கடந்த 1991-ல் இருந்து இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் பிரிவென்ஷன் ஆஃப் சைல்ட் அப்யூஸ் அண்ட் நெக்லக்ட் (ISPCAN) அமைப்பின் உறுப்பினராக இருந்து வருபவர். மேற்கு வங்க அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டம் 2009 மற்றும் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடைக்கான விதிகள் 2008 ஆகிய சட்டங்களை மாநில அளவில் நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகாரம் உள்ள உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்காக (2012-17) மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜூன் 2011-ல் உருவாக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்விக்கான நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2011 நவம்பர் 8-ல் இருந்து மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானஸின் குழந்தைகள் நல கமிட்டியின் (CWC) தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஐபிஇஆர் அமைப்பின் முக்கிய செயல்பாடுகள்:

சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

 • குழந்தைகளின் பாதுகாப்புக்காக குழுக்களை அமைப்பது, அந்தக் குழுக்களை வழிநடத்துதல். 
 • பள்ளிக்குச் செல்ல முடியாமலும், எளிதில் அணுக முடியாத சூழலிலும் தவிக்கும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குதல். 
 • முதியோர் கல்வி அளித்தல். குறிப்பாக, பெண்களுக்கு எழுத்தறிவு அளித்தல். 
 • ஊட்டக் குறைபாடு மிக்க குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதல். 
 • சுகாதார மையங்கள், நடமாடும் சிகிச்சை மையங்கள் மூலமாக அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்.
 • சமூக மற்றும் பண்பாட்டு ரீதியிலான முன்னேற்றத்துக்கு வழிவகுத்தல். 
 • வசதியற்ற குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து படிக்க உரிய உதவிகள் செய்தல். 
 • குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் அளித்தல். 
 • உளவியல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய கவுன்சலிங் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்தல்.
 • குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்கு நிதியுதவி அளித்தல். 
 • மாற்று வழிகளில் வாழ்வாதாரத்துக்கு வகை செய்துகொள்வதற்காக, இளம் பெண்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்தல். 
 • மேற்கு வங்க ஆரம்பக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்தல்.
 • சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மாசுக் கட்டுப்பாடுத் துறைக்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். 
 • கல்யாணி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி மற்றும் நிர்வாகம் தொடர்பான டிப்ளமோ படிப்பு. 
 • மதுப் பழக்கம், வன்கொடுமை முதலான பாதிப்புகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஐபிஇஆர் ஈடுபட்டு வருகிறது.

பயனாளர்கள் பகிர்கிறார்கள்:

தனியாக வாழும் ஒரு தாயாய், இரண்டு மகள்களையும் கவனித்துக் கொள்வதில் மிகப் பெரிய சிரமங்களைச் சந்தித்தேன். என் மகள்களில் ஒருவரை ஐபிஇஆர் அரவணைத்துக்கொண்டது. உணவு, வசிப்பிடம், கல்வி என அனைத்து விதமான அனைத்துத் தேவைகளையும் அந்த அமைப்பு வழங்கி வருகிறது" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்கிறார், தெற்கு கொல்கத்தாவில் வீட்டு வேலை செய்யும் மிது முண்டால். இதே பகுதியைச் சேர்ந்த சுப்ரதாவின் கதை வேறு விதமானது. "என் கணவர் ஒரு குடிகாரர். அவரால் குடும்பத்துக்கு ஒரு பயனும் இல்லை. நான் வீட்டு வேலை செய்து சம்பாதிக்கிறேன். ஆனால், என் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்கு இது போதவில்லை. ஐபிஇஆர் பற்றி அக்கம்பக்கத்தினர் மூலம் அறிந்துகொண்டேன். என் மகள்களில் ஒருவரை அங்கே சேர்த்துவிட்டேன். அங்கே மிகச் சிறந்த முறையில் அவள் வளர்ந்து வருகிறாள். இப்போது ஒரு மகளுடன் என் குடும்பத்தை நிம்மதியாக கவனிக்க முடிகிறது" என்றார் சுப்ரதா.

குழந்தைகளை மேம்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாலிக் கூறும்போது, "கல்வி இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை முழுமையாக நம்புகிறேன். எனவேதான் ஒரு சமூகத்தில் மக்கள் அனைவரின் கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எதிர்பார்க்கப்படும் கற்றல் நிலைக்கும், நிறைவேற்றப்பட்ட கற்றல் நிலைக்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்பும் பாலமாகவே ஐபிஇஆர் திகழ்கிறது. தேசமும் சமூகமும் உத்தரவாதத்துடன் வழங்கும் கல்வியை, தங்களது சவால்கள் நிறைந்த புறச்சூழல்களின் காரணமாக பெற முடியாமல் போகும் நிலைக்கு எந்தக் குழந்தைகளும் ஆளாகக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். எனவே, சமூகக் குழந்தைகளுடன் தொடர்ந்து நெருக்கமாக செயலாற்ற விரும்புகிறேன். சமீபத்தில் ஏர்லி சைல்ட்வுட் அண்ட் சைல்ட் டெவலப்மென்ட்' எனும் 6 மாதப் படிப்பை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை எப்படி அணுகுவது என்பது பற்றி ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் சொல்லித் தரப்படும். குழந்தைகளின் உளவியலும், செய்கைகளையும் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்றபடி அணுகி, அவர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுப்பதுதான் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம்" என்றார் மாலிக்.

தெற்கு கொல்கத்தாவில் ஐபிஇஆர் பல்லொழுக்கப் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறது. இங்கு, தெருவோரத்தில் வாழும் இளம்பெண்களின் மிகுந்த பாதிப்புக்குரியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வசிப்பிட வசதிகளுடன் அடைக்கலம் தரப்படுகிறது. அவ்வாறான 28 இளம்பெண்கள் இப்போது இந்த மையத்தில் உள்ளனர்.

மற்றொரு தனித்துவ முயற்சியாக, ஐபிஇஆர் தமது 'கம்யூட்டர் ஆன் வீல்ஸ்' எனும் திட்டத்தை ஜனவரியில் தொடங்கியது. ஒரு நடமாடும் வேனில் கம்ப்யூட்டர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சென்று ஏழை இளைஞர்களுக்கு மென்பொருள், அனிமேஷன் முதலான பயிற்சிகளை அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். கணினியை நாட முடியாத ஆர்வமுள்ள ஏழை இளைஞர்களுக்கு இத்திட்டம் பேருதவி புரிகின்றது. எனினும், வரி சார்ந்த சிற்சில பிரச்சினைகளால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதும் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். பள்ளி செல்ல முடியாத குழந்தைகளின் கல்விக்காக நடமாடும் பள்ளி ஒன்றையும் ஐபிஇஆர் செயல்படுத்தி வருகிறது. "டீக்வொண்டாவில் எங்களிடம் பயிற்சி பெற்ற 5 பெண்கள், பெங்களூரு மற்றும் நேபாளத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றார்கள். டீக்வொண்டா பயிற்சியில் பாதிப்புச்சூழல் மிக்க பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள ஐபிஇஆர் உறுதுணைபுரிகிறது" என்று கம்பீரமாகச் சொன்னார் பிஜ்லி மாலிக்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்