இறைச்சி விற்பனையில் ஆப், குளிரூட்டிய கடைகள், மூலம் வாடிக்கையாளர்களை அசத்தும் சென்னை நிறுவனம்!

1

இந்த ஸ்மார்ட்போன் உலகில் அனைத்தும் நவீனமாக மாற, தற்பொழுது நாம் வாங்கும் இறைச்சி கடைகளும் நவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது. இறைச்சி கடைக்கு என பிரேத்தியேக ஆண்ட்ராய்ட் ஆப், நவீன அங்காடி என இறைச்சி வணிகத்தில் புதுமைகளைப் புகட்டி உள்ளது ஃபிப்போலா Fipola நிறுவனம்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் சுஷில், சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் தனது தொழிலாக முதலில் தேர்ந்தெடுத்ததே உணவு சார்ந்த துறை தான். எஸ் ஆர் மெரேயின் என்னும் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனது குடும்ப தொழிலில் இருந்தே தன் பயணத்தை துவங்கினார். அங்கு தனக்கு கிடைத்த அனுபவத்தினால் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இறைச்சி வணிகத்தில் ஏதேனும் புதுமையை புகட்ட ஃபிப்போலா நிறுவனத்தை துவங்கினார்.

நிறுவனர் சுஷில்
நிறுவனர் சுஷில்

ஃபிப்போலா உருவான கதை:

35 வருடங்கள் பழமையான தனது குடும்ப தொழிலின் ஒரு அங்கமாகவே ஃபிப்போலா உருவானது.

“இந்தியாவில் இறைச்சி கடைகளில் மக்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றே இந்த தொழிலை துவங்கினேன்; முக்கியமாக நாற்றம்...”

என பேசத் துவங்குகிறார் சுஷில். பெரும்பாலான இறைச்சி கடையில் சுகாதாரம் அற்ற சூழல், நாற்றம் மற்றும் இறைச்சி கையாளும் விதத்தை மாற்றி மக்களுக்கு ஏற்ற சூழலில் இறைச்சிகளை வழங்கவே இதை துவங்கியதாக கூறுகிறார்.

“பெரும்பாலும் கலப்படம் செய்யப்பட்ட, இரசாயனம் பொருத்திய சுவை குறைந்த இறைச்சிகளே இங்கு வழங்கப்படுகிறது.”

இதை மாற்றும் நோக்கத்திலே கடந்த டிசம்பர் 2016 ஃபிப்போலா ஆரம்பிக்கப்பட்டது. இங்கே பயிற்சி பெற்ற கசாப்பு கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் முன் இறைச்சியை வெட்டி சுத்தமான முறையில் பேக் செய்து தருகின்றனர்.

சந்தித்த சவால்கள்:

“இந்த வணிகத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கடையை உருவாக்குவதே நான் சந்தித்த முதல் சவால்.”

இந்தியாவில் இறைச்சி வாங்கும் அனுபவத்தை மாற்ற அதற்கு ஏற்ற சுத்தமான மற்றும் நாற்றம் அற்ற உள்கட்டமைப்பை அமைக்க சற்று சிரமமாக இருந்தது என்கிறார். மேலும் சிறந்த மற்றும் இரசாயனம் கலக்காத இறைச்சிகளை ஒருங்கிணைப்பதும் சவாலாகவே இருந்தது. இறைச்சியை வெட்டுவது, பேக் செய்வது என சகலத்தையும் முன்கூட்டியே ங்கள் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

“வாடிக்கையாக வாங்கும் இறைச்சி கடையில் இருந்து மக்களை மாற்றுவது மிகவும் சிரமம். இருப்பினும் சுத்தம் மற்றும் இரசாயன பொருந்திய இறைச்சிகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறோம்.”

வாடிக்கையாளர்களின் சிறந்த அனுபவத்திற்காகவே இதை நாங்கள் உறுதி படுத்துகிறோம் என்கிறார்.

“2011-12 NSSO ஆய்வின்படி 62.3 சதவீத இந்தியர்கள் அசைவம் உண்ணுகிறார்கள். எனவே நிச்சயம் இந்தத் துறை 2020-க்குள் இன்னும் மூன்று மடங்கு வளர்ச்சியை தொடும்,” என்கிறார் நம்பிக்கையுடன்

தற்பொழுது நேரடியாக விவசாயிகளிடம் இருந்தே இறைச்சிகளை பெறுகிறது இந்நிறுவனம். இரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி கலக்காத இறைச்சிகளை பெற்று, ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கு விநியோகம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளனர். மொபைல் செயிலி மூலமும் இறைச்சிகளை ஆர்டர் செய்யலாம்.

“எங்களது முதல் போட்டியாளர்கள் அனைத்து தெருக்களில் இருக்கும் இறைச்சி கடைகள் தான். ஆனால் எங்களிடம் ஒரு முறை வாங்கினால் நிச்சயம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் திரும்பி வருவார்கள்,” என நம்பிகையுடன் பேசுகிறார்.

10 கோடி ரூபாய் முதலீட்டுடன் துவங்கப்பட்ட நிறுவனம் இது. இங்கு தற்பொழுது 200க்கும் மேம்பட்ட பணியாளர்கள் இணைந்துள்ளனர். 

வலைதள முகவரி: Fipola

Related Stories

Stories by Mahmoodha Nowshin