டாடா மோட்டார்ஸ்-ன் எதிர்கால திட்டம்: ஸ்மார்ட் சிட்டி மற்றும் இணைக்கப்பட்ட கார் தீர்வுகள்... 

0

ஆட்டோ எக்ஸ்போ 2018-ல் டாடா மோட்டார்ஸ் ஸ்மார்ட் போக்குவரத்து கருத்தாக்கத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் மின்சார எதிர்காலம் தொடர்பான தனது ஈடுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

டாடா குழுமத்தின் 150-வது ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தில்லி ஆட்டோ எக்ஸ்போ- தி மோட்டார் ஷோ 2018-ல் ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. இணைக்கப்பட்ட நகரங்களில், நுகர்வோருக்கு பாதுகாப்பு, செயல்திறன், வசதி ஆகியவற்றை அளிக்கக் கூடிய போக்குவரத்து தீர்வுகளை நிறுவனம் காட்சிப்படுத்தியது.

ஸ்மார்ட் நெட்வொர்க் மூலம் வாகனங்கள் மற்றும் நகரம் தகவல்களை பெற்று மற்றும் பகிர்ந்து கொள்ளும் 26 ஸ்மார்ட் நகர தீர்வுகளை நிறுவனம் அறிமுகம் செய்தது. நகரத்தின் மாநகராட்சி நிர்வாகம் பெரிய அளவிலான தகவல்களை திரட்டும் நிலையில், இதில் மின்சார கார்கள் தர நிர்ணயமாக இருக்கும்.

“அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்றபடி, ஸ்மார்ட் மொபிலிட்டி மற்றும் ஸ்மார்ட் சிட்டீஸ் தீர்வுகளை உருவாக்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ’எதிர்கால போக்குவரத்து தீர்வுகளை’ முன்னோட்டமாக அளிப்போம்,”

என்று டாடா மோட்டார்ஸ் சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனர் குனடர் பெட்ஸ்செக் கூறினார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் புதிய கருத்தாக்க ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

தனிப்பட்ட மற்றும் வெகுஜன போக்குவரத்தை மேம்படுத்தக்கூடிய விரிவாக்கப்பட்ட ஆறு மின்சார கார் மாதிரிகளை டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது. இவை இணைக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட் இணைப்புகளை பெற்றிருக்கும். இவை நகரங்களுடன் வை-ஃபை மூலம் தொடர்பு கொண்டு, நகர சர்வர்களுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

டாடா மோட்டார்ஸ் மின்சக்தியால் இயங்கும் பஸ் மற்றும் ஸ்மார்ட் பஸ் நிலையம் ஆகியவற்றுடன், மேஜிக் இவி மற்றும் தி ஐரிஸ் இவி ஆகிய பயணிகள் மின்சார கார்களையும் காட்சிக்கு வைத்திருந்தது.

மைக்ரோசாப்டுடன் ஒப்பந்தம்

முன்னதாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனங்கள், இந்திய நுகர்வோருக்கான தனிப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட வாகன ஓட்டுதல் அனுபவத்தை மாற்றி அமைப்பதற்கான வியூக நோக்கிலான ஒப்பந்தத்தை அறிவித்தன. டிஜிட்டல் மற்றும் நிஜ உலகம் ஒன்றுக்கு ஒன்று தொடரச்செய்து, வாகன உரிமையாளரின் டிஜட்டல் வாழ்க்கை நெடுகிலும் பிரத்யேகமான, ஸ்மார்ட்டான, பாதுகாப்பான வாகன ஓட்டுதல் அனுபவத்தை அளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட இயந்திர கற்றல் மற்றும் இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ் திறன்கள் ஆகியவற்றை உலகலாவிய அளவில் அஸ்யூர் கிளவுட் சேவையில் ஒருங்கிணைப்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்திக்கொள்ளும்.

ஏற்கக் கூடிய விலையில் வெகுஜன சந்தை வாகனங்களில் இணைக்கப்பட்ட வசதியை அளிக்க மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உதவும்.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்துடன், பணியில், பொழுதுபோக்கில், சமூக வலைப்பின்னல்கள்களில் தொடர்பில் இருப்பதை எளிதாக்கும் வகையில் புதிய இணைக்கப்பட்ட சேவைகள் மற்றும் செயலிகளை தொடர்ந்து உருவாக்கி அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. காரில் கிடைக்கும் புதிய ஓய்வு நேரத்தை மேலும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இவை உதவும்.

புதுமைக்கான மேடை

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஸ்டார்ட் அப் சூழல் மூலம் புதுமைகளை ஊக்குவித்து, போக்குவரத்தில் இணைப்பை பெற்றிருக்கும் வாகனங்களை உருவாக்குவதற்கான டாமோ (TAMO) மேடையையும் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டத்தில் இதன் மேம்பட்ட தீர்வுகள் கிளவுட் கம்ப்யூட்டிங், அனல்டிக்ஸ், ஜியோ ஸ்பேஷியல் அண்ட் மேப்பிங் மற்றும் அதிக அளவிலான மனித-இயந்திர இடைமுகத்தை கொண்டிருக்கும். இவை சந்தையில் இணைக்கப்பட்ட வாகனங்களுக்காக புதிய தர உயரத்தை உருவாக்கும். டாமோ அளிக்கும் டிஜிட்டல் சூழல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால், தனது பிரதான வர்த்தகத்திற்கு ஆதரவாக எதிர்காலத்தில் இது பயன்படுத்திக்கொள்ளப்படும்.

“வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் புதுமையான மற்றும் தொழில்நுட்ப நோக்கில் மேம்பட்ட தயாரிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் சூழலின் தேவையை உணர்ந்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்களில் அவர்கள் டிஜிட்டல் வாழ்க்கையை கொண்டுவர அஸ்யூர் இண்டலிஜென் கிளவுட் சேவையிலான மைக்ரோசாப்ட் இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்கிறோம்,” என்று பெட்செக் கூறினார்.

டாடா மோட்டார்ஸ் இப்போது இந்த களத்தில் இறங்கியுள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்பத்தை ஏற்கனவே காட்சிப்படுத்தியுள்ளது. இணைக்கப்பட்ட வாகன கருத்தாக்கம் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்று வருவதை இதன் மூலம் உணரலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்; சைபர்சிம்மன்